அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் ரூ.1.26 கோடி சொத்துகள் முடக்கம்

1348084.jpg
Spread the love

சென்னை: வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில், அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணனின் ரூ.1.26 கோடி சொத்துகளை முடக்கி அமலாக்கத் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

தமிழக மீன்வளத் துறை அமைச்சராக இருப்பவர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன். இவர் கடந்த 2009-ம் ஆண்டு அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தார். இந்நிலையில், கடந்த 2001 முதல் 2006-ம் ஆண்டு வரை அதிமுக ஆட்சிக் காலத்தில் வீட்டு வசதி மற்றும் நகர்புற மேம்பாட்டு அமைச்சராக இருந்தபோது, வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்பு துறையினர் கடந்த 2006-ம் ஆண்டு வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், வருமானத்துக்கு அதிகமாக சுமார் ரூ.5 கோடி அளவில் சொத்து சேர்த்தது கண்டுப்பிடிக்கப்பட்டது.

இந்நிலையில், இதில் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை நடந்ததற்கான முகாந்திரம் இருந்ததால், இந்த வழக்கு அமலாக்கத் துறைக்கு மாற்றப்பட்டது. இந்நிலையில், அமலாக்கத் துறை விசாரணை நடத்தி, கடந்த 2022-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 160 ஏக்கர் நிலம் உட்பட அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் ரூ.6.5 கோடி மதிப்புள்ள 18 சொத்துகளை முடக்கியது. இந்த வழக்கு தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வந்த நிலையில், அனிதா ராதாகிருஷ்ணனின் ரூ.1.26 கோடி மதிப்பிலான அசையா சொத்துகளை முடக்கி தற்போது நடவடிக்கை எடுத்துள்ளது.

இதுகுறித்து அமலாக்கத் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘கடந்த 2022-ம் ஆண்டு அனிதா ஆர்.ராதாகிருஷ்ணனின் 18 அசையா சொத்துகள் முடக்கப்பட்டது. இந்நிலையில், ஏற்கனவே அமலாக்கத் துறையால் முடக்கப்பட்ட சொத்துகளை, அனிதா ஆர்.ராதாகிருஷ்ணனும், அவரது குடும்ப உறுப்பினர்களும் மறைமுகமாக அனுபவித்து வந்ததும், அதன் மூலம் வந்த வருவாயை பல்வேறு நிறுவனங்களில் முதலீடு செய்து, மறைமுகமாக சுமார் ரூ.17.74 கோடி வருமானம் ஈட்டியிருப்பதும் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அவரது தூத்துக்குடி, மதுரை, சென்னையில் உள்ள ரூ.1.26 கோடி மதிப்பிலான அசையா சொத்துகள் முடக்கப்பட்டுள்ளது’ என்று அதில் கூறப்பட்டுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *