மகாராஷ்டிராவில் மும்பை உட்பட, மாநிலம் முழுவதும் உள்ள மாநகராட்சிகளுக்கு நாளை தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான தேர்தல் பிரசாரம் நேற்று மாலையோடு முடிந்துவிட்டது. மும்பையில் நேற்று தொடங்கி வரும் 16ம் தேதி வரை மதுபான கடைகள், பீர்பார்கள் அடைக்கப்பட்டுள்ளன.
இத்தேர்தலில் தமிழ் வேட்பாளர்களுக்கு ஆதரவாக தமிழக பா.ஜ.க முன்னாள் தலைவர் அண்ணாமலை பிரசாரம் செய்தார். இப்பிரசாரத்தின் போது, `மும்பை மகாராஷ்டிரா நகரம் இல்லை என்றும், அது ஒரு சர்வதேச நகரம்” என்று அண்ணாமலை கூறி இருந்தார்.
இதனை தாக்கரே சகோதரர்கள் கெட்டியாக பிடித்துக்கொண்டனர். உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா எம்.பி.சஞ்சய் ராவுத், `பா.ஜ.க தலைவர் அண்ணாமலை மீது வழக்கு பதிவு செய்து, அவரை கைது செய்ய வேண்டும்’ என்று முதல்வர் தேவேந்திர பட்னாவிஸுக்கு கோரிக்கை விடுத்து இருந்தார்.
உத்தவ் தாக்கரேயின் சகோதரர் ராஜ் தாக்கரேயும் அண்ணாமலையை கடுமையாக சாடி இருந்தார். இது தொடர்பாக ராஜ் தாக்கரே தேர்தல் பிரசாரத்தில் பேசுகையில், ”தமிழ்நாட்டில் இருந்து ஒரு ரசமலாய் வந்துள்ளது. உங்களுக்கும் மும்பைக்கும் என்ன சம்பந்தம்? ஹடாவோ லுங்கி பஜாவோ புங்கி(லுங்கியை விரட்டி சங்கு ஊதுங்கள்)” என்று குறிப்பிட்டு இருந்தார்.
1960 மற்றும் 70களில் பால் தாக்கரே சிவசேனாவை ஆரம்பித்தபோது மராத்தியர்களின் வேலை வாய்ப்புகளை தமிழர்கள் குறிப்பாக தென்னிந்தியர்கள் பறிப்பதாக கூறி ‘ஹடாவோ லுங்கி பஜாவோ புங்கி’என்ற வாசகத்தை குறிப்பிட்டு இருந்தார்.
அதனை சொல்லித்தான் சிவசேனாவை பால் தாக்கரே வளர்த்தார். இப்போது அதே வாசகத்தை ராஜ் தாக்கரே குறிப்பிட்டுள்ளார். மேலும் மகாராஷ்டிராவில் இந்தியை திணிக்க முயன்றால் பீகார் மற்றும் உத்தரப்பிரதேச மக்களை மிதித்து தள்ளிவிடுவோம் என்றும் ராஜ் தாக்கரே குறிப்பிட்டு இருந்தார்.
காங்கிரஸ் போன்ற மற்ற எதிர்க்கட்சிகளும் அண்ணாமலைக்கு எதிராக கடுமையாக விமர்சனம் செய்து இருந்தன. அதோடு சமூக வலைத்தளத்தில் அண்ணாமலை மும்பைக்கு வந்தால் காலை வெட்டுவோம் என்றும் சிலர் மிரட்டல் விடுத்து இருந்தனர். இரண்டு நாட்களாக ராஜ் தாக்கரே மற்றும் உத்தவ் தாக்கரே கட்சியினர் தேர்தல் பிரசாரம் செய்வதற்கு அண்ணாமலையை பயன்படுத்திக்கொண்டனர். ஆனால் அண்ணாமலை கருத்துக்கு மும்பை பா.ஜ.க ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளது.