பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் படுகொலை நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு ராகுல்காந்தி, தமிழக வெற்றி கழக தலைவர் நடிகர் விஜய், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல், உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினர் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.
ராகுல்காந்தி
ராகுல்காந்தி வெளியிட்டு உள்ள சமூகவலைதள பதிவில்கூறியிருப்பதாவது:-
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு தலைவரான ஆம்ஸ்ட்ராங் கொடூரமான முறையில் கொல்லப்பட்டது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் ஆதரவாளர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். குற்றவாளிகள் விரைவில் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவதை அரசு உறுதி செய்யும் என்று நான் நம்புகிறேன்.
இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.
விஜய்
நடிகர்விஜய் வெளியிட்டு உள்ள பதிவில்,
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் அவர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம், பெரும் அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது. ஆம்ஸ்ட்ராங் அவர்களைப் பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் அவரது கட்சியினருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
இது போன்ற கொடும் குற்றச் சம்பவங்கள் இனி நடைபெறாமல் இருக்கத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தமிழக அரசு தீவிரமாக முன்னெடுக்க வேண்டும். சமரசம் இல்லாமல் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டி அனைவரது பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
கமல்
கமல் வெளியிட்டு உள்ள பதிவில்,
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவரும், வழக்கறிஞருமான ஆம்ஸ்ட்ராங் கொடூரமான முறையில் வெட்டிக் கொலை செய்யப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது. அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சியினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். ஒடுக்கப்பட்ட மக்களுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வந்த அவரது மறைவு பட்டியலின மக்களுக்குப் பேரிழப்பாகும்.
ஒரு தேசியக் கட்சியின் மாநிலத் தலைவர் கூலிப் படையினரால், மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் படுகொலை செய்யப்பட்டிருப்பது கடும் கண்டனத்துக்குரியது. இதில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் மீது உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.அவர்கள் தன்னையே கேட்டுக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறி உள்ளனர்.