சென்னை:
பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டது சென்னையில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. நேற்று இரவு சென்னை பெரம்பூரில் தான் புதிதாக கட்டி வரும் வீட்டின் அருகே தனது ஆதரவாளர்களுடன் இருந்த போது ஆம்ஸ்ட்ராங் 6 பேர் கும்பலால் வெட்டி கொலை செய்யப்பட்டார். கொலையாளிகள் தப்பி செல்லும் காட்சி அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு காமிராவில் பதிவாகி இருந்தது. இதனை வைத்து குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.
கண்காணிப்பு காமிராவில் பதிவு
இதற்கிடையே ஆம்ஸ்ட்ராங் கொலை தொடர்பாக ஏற்கன« கடந்த ஆண்டு பட்டினப்பாக்கத்தில் கொலை செய்யப்பட்ட பிரபல ரவுடி ஆற்காடு சுரேசின் தம்பி புன்னை பாலா மற்றும் அவரது கூட்டாளிகள் மொத்தம் 8 பேர் போலீசில் சரண் அடைந்து உள்ளனர். அவர்களை ரகசிய இடத்தில் வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதில் கொலைக்கான காரணம் குறித்து பபல்வேறு திடுக்கிடும் தகவல்கள் கிடைத்து உள்ளன.
ரவுடி ஆற்காடு சுரேசின கொலையில் ஆம்ஸ்ட்ராங்கிற்கு தொடர்பு இருப்பதாக அவரது ஆதரவாளர்கள் கருதி வந்தனர். இன்று ஆற்காடு சுரேசின் பிறந்த நாள் ஆகும். இதனை கணக்கிட்டு ஆம்ஸ்ட்ராங்கை புன்னை பாலு மற்றும்அவரது தரப்பினர் தீர்த்து கட்டி உள்ளனர்.
ஆற்காடு சுரேஷ் கொலைக்கு
இது பற்றி புன்னை பாலு போலீசாரிடம் கூறும்போது, அண்ணன் ஆற்காடு சுரேசின் கொலையில் ஆம்ஸ்ட்ராங்கிற்கு தொடர்பு இருந்தது. மேலும் என்னையும் தீர்த்து கட்டிவிடுவதாக ஆம்ஸ்ட்ராங் தரப்பினர் தொடர்ந்து மிரட்டல் விடுத்து வந்தனர். இதனால் என்னுடைய மனைவியும் பயத்தில் பிரிந்து சென்றுவிட்டார். எனவே ஆம்ஸ்ட்ராங்கை தீர்த்து கட்டினோம் என்று தெரிவித்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
எனினும் கொலை நடந்த உடனேயே 8 பேரும் போலீசில் சரண் அடைந்ததால் அவர்கள் உண்மையான குற்றவாளிகளா என்பது போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. கூலிப்படையினர் இது ஈடுபட்டு இருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரித்து வருகிறார்கள். ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு யார் யார் உதவினார்கள் என்ற விபரத்தையும் சேகரித்து வருகின்றனர்.
ஸ்கெட்ச் போட்ட ஆட்டோ டிரைவர்
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் பெரம்பூர் பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவரும் சரித்திர பதிவேடு குற்றவாளியுமான திருமலை என்பவர் தான் பக்காவாக ஸ்கெட்ச் போட்டு கொடுத்து உள்ளார்.
ஆம்ஸ்ட்ராங் வீடு உள்ள பகுதியில் இருக்கும் பள்ளி அருகே ஆட்டோவை நிறுத்துவது போல ஒருவாரமாக நோட்டமிட்டு வந்த திருமலை ஆம்ஸ்ட்ராங் அடிக்கடி தான் கட்டி வரும் வீட்டருகே குறைந்த அளவிலான நண்பர்களுடன் வருவதை நோட்டமிட்டு புன்னை பாலுவுக்கு தகவல் கொடுத்து இருக்கிறார்.
துப்பாக்கி இல்லை
ஆம்ஸ்ட்ராங் உரிமம் பெற்று துப்பாக்கி வைத்து இருந்தார். அதனை அவர் பாராளுமன்ற தேர்தல் விதிமுறையையொட்டி போலீசில் ஒப்படைத்து உள்ளார். அவரிடம் துப்பாக்கி இல்லை என்பதை அறிந்து பல நாட்கள் அவர் எங்கெல்லாம் இருப்பார் என்பதை நோட்டமிட்டு கொலை கும்பல் தங்களது திட்டத்தை நிறைவேற்றி உள்ளனர்.
மறியல்- கைது
இந்த நிலையில் ஆம்ஸ்ட்ராங் உடல் பிரேத பரிசோதனை இன்று காலை சென்ட்ரலில் உள்ள ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் நடந்து முடிந்து. காலை முதலே ஏராளமான அவரது ஆரவாளர்கள் திரண்டு வந்தனர். அவர்கள் திடீரென ஆஸ்பத்திரி முன்பு அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆம்ஸ்ட்ராங் கொலையில் சி.பி.ஐ.விசாரணை வேண்டும்.உண்மை குற்றவாளிகளை கைது செய்யவேண்டும் என்று கோஷங்கள் எழுப்பினர். இதனால் முக்கிய சாலையான பூந்தமல்லி நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வாகனங்கள் அனைத்தும் மாற்று வழியில் திருப்பி விடப்பட்டன.
போலீசார் அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தியும் கலைந்து செல்ல மறுத்து போராட்டத்தை தொடர்ந்தனர். இதனால் சுமார் ஒரு மணிநேரத்திற்கும் மேலாக முக்கிய சாலையில் போக்குவரத்து முடங்கியது. இதைத்தொடர்ந்து மறியலில் ஈடுபட்டவர்கள் அனைவரையும் போலீசார் குண்டு கட்டாக அகற்றினர். சுமார் 100&க்கும்மேற்பட்டோரை கைது செய்து வேனில் ஏற்றிச்சென்றனர். இதன் காரணமாக அப்பகுதியில் பதட்டான சூழல் ஏற்பட்டது. பாதுகாப்புக்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.
திருமாவளவன்
ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு அஞ்சலி செலுத்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரிக்கு வந்தார். ஆம்ஸ்ட்ராங் படுகொலையை அடுத்து பெரம்பூரில் இன்று அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தன. அங்கு கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
மாயாவதி வருகை
ஆம்ஸ்ட்ராங்கின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக பெரம்பூரில் உள்ள பகுஜன் சமாஜ் கட்சி அலுவலகத்தில் வைக்கப்பட இருக்கிறது. பகுஜன் சமாஜ்வாதி கட்சியின் தேசிய தலைவரும் உத்திரபிரதேச மாநில முன்னாள் முதல் அமைச்சருமான மாயாவதி நாளை சென்னை வர உள்ளதாக கூறப்படுகிறது.