நடிகர் சைஃப் அலிகானைக் கத்தியால் குத்திய வழக்கில் இதுவரை யாரையும் கைது செய்யப்படவில்லை என்று மும்பை காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
இவ்வழக்கில் சந்தேகிக்கும் நபர் ஒருவரை மும்பை காவல் துறையினர் கைது செய்ததாக முன்னதாக சமூக ஊடங்களில் தகவல் வெளியானது.
இருப்பினும் நடிகர் சைஃப் அலிகான் வழக்கில் அவருக்கு தொடர்பில்லை என்றும் இவ்வழக்கு தொடர்பாக இதுவரை யாரையும் கைது செய்யவில்லை என்றும் மும்பை காவல் துறை தெரிவித்துள்ளது.
மேலும், நடிகர் சைஃப் அலிகான் மீதான தாக்குதலில் தொடர்புடையவராகக் கூறப்படும் குற்றவாளியை பாந்த்ரா ரயில் நிலையம் அருகே காணப்பட்டதாகவும், அவரைப் பிடிக்க தேடுதல் வேட்டை நடந்து வருவதாக மும்பை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சைஃப் அலிகான் கத்திக்குத்து சம்பவம்
மகாராஷ்டிர மாநிலம், மும்பையில் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள பிரபல பாலிவுட் நடிகர் சைஃப் அலிகானின் வீட்டுக்குள் ஊடுருவிய மர்மநபர், அவரை கத்தியால் சரமாரியாக குத்திவிட்டு தப்பிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
வீட்டில் கொள்ளையடிக்கும் முயற்சியில் நடந்ததாக கூறப்படும் இத்தாக்குதலில் சைஃப் அலிகான் ஆறு முறை குத்தப்பட்டு, பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவருடைய தண்டுவடத்தில் சிக்கியிருந்த 2.5 அங்குல நீளமுள்ள கத்தியின் உடைந்த பகுதி, அவசர அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது. அவர் அபாய கட்டத்தைக் கடந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
சைஃப் அலிகான் மீதான தாக்குதல் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ள காவல்துறையினர், அவரை கத்தியால் குத்திய நபரை பிடிக்க 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.