ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான ரெளடி திருவேங்கடம் காவல் துறையினர் நடத்திய என்கவுண்டரில் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆம்ஸ்ட்ராங் கடந்த 5-ஆம் தேதி சென்னை பெரம்பூா் வேணுகோபால் சுவாமி கோயில் தெருவில் உள்ள அவரது வீட்டின் அருகே வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். இதுதொடா்பாக ரெளடி ஆற்காடு சுரேஷின் சகோதரா் பொன்னை பாலு உள்பட 11 போ் கைது செய்யப்பட்டனா்.
இவா்களை காவலில் எடுத்த விசாரிக்க அனுமதி கோரி போலீஸாா் தாக்கல் செய்த மனுவை வியாழக்கிழமை விசாரித்த எழும்பூா் நீதிமன்றம், 5 நாள்கள் அனுமதி வழங்கி உத்தரவிட்டது.
இதையடுத்து அன்று மாலையே 11 பேரும் பலத்த பாதுகாப்புடன் பூந்தமல்லி சிறையில் இருந்து பரங்கிமலையில் உள்ள ஆயுதப்படை வளாகத்துக்கு அழைத்து வரப்பட்டனா். அங்கு இணை ஆணையா் விஜயகுமாா் தலைமையில் 10 தனிப்படையினா் 11 பேரிடமும் தனித்தனியாக விசாரணை நடத்தி வந்தனர்.
நேற்றிரவு ரெளடி திருவேங்கடத்தின் பறிமுதல் செய்ய அழைத்துச் சென்றபோது, காவல் துறையினரிடம் இருந்து திருவேங்கடம் தப்பிக்க முயன்றதாகக் கூறப்படுகிறது
இந்த நிலையில், திருவேங்கடத்தை காவல் துறையினர் என்கவுண்டரில் துப்பாக்கியால் சுட்டதில் அவர் பலியானதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இதனைத் தொடர்ந்து, சென்னை வடக்கு கூடுதல் காவல் ஆணையர் நரேந்திர நாயர் என்கவுண்டர் நடத்த இடத்தில் விசாரணை நடத்தி வருகிறார். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ரெளடி திருவேங்கடம் முக்கிய குற்றவாளி என்பது குறிப்பிடத்தக்கது.