நிலவைச் சுற்றி பயணம் மேற்கொண்டுள்ள ஆர்டெமிஸ் II விண்கலம், நிலவின் மறுபக்கத்திற்குச் சென்றபோது, சுமார் 40 நிமிடங்கள் பூமியுடனான தொடர்பை இழந்தது.
நிலவின் மறைமுகப் பகுதிக்கு விண்கலம் செல்லும்போது சிக்னல்கள் துண்டிக்கப்படுவது இயல்பான ஒன்று என்றாலும், மீண்டும் தொடர்பு கிடைத்த தருணம் நாசா கட்டுப்பாட்டு அறையில் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
“பூமியின் குரலை மீண்டும் கேட்பது மகிழ்ச்சி அளிக்கிறது; நாங்கள் எப்போதும் பூமியையும், ஒருவருக்கொருவரையும் தான் தேர்ந்தெடுப்போம்” என விண்வெளி வீரர் கிறிஸ்டினா கோச் உணர்ச்சிகரமாகத் தெரிவித்தார்.
இந்தத் தகவல் தொடர்பு துண்டிப்புக்கு முன்னதாக, ஆர்டெமிஸ் II குழுவினர் விண்வெளி வரலாற்றில் ஒரு புதிய சாதனையைப் படைத்தனர்.
1970-ம் ஆண்டு அப்போலோ 13 விண்கலம் பூமியில் இருந்து சுமார் 4,00,172 கி.மீ தூரம் வரை சென்று படைத்த சாதனையை, இந்த ஆர்டெமிஸ் II விண்கலம் முறியடித்தது.
வீரர்கள் பூமியில் இருந்து சுமார் 4,06,778 கி.மீ தொலைவை எட்டி, மனித வரலாற்றிலேயே பூமியை விட்டு அதிக தூரம் பயணித்தவர்கள் என்ற பெருமையைப் பெற்றுள்ளனர். வரும் தலைமுறையினருக்கு இது ஒரு சவாலாக அமையும் என விண்வெளி வீரர் ஜெர்மி ஹேன்சன் பெருமிதத்துடன் கூறினார்.