பிரபல பின்னணி பாடகி ஆஷா போஸ்லே நேற்று (ஏப்ரல். 12) உடல்நல பாதிப்பால் காலமாகியிருக்கிறார்.
அவருக்கு வயது 92. மறைந்த பாடகி லதா மங்கேங்கேஷ்கரின் சகோதரியான ஆஷா போஸ்லே 20-க்கும் மேற்பட்ட மொழிகளில் 12,000 பாடல்களைப் பாடியிருக்கிறார்.
பலரும் அவருக்கு இரங்கல் தெரிவித்து வரும் நிலையில் இசைஞானி இளையராஜா இரங்கல் தெரிவித்து உருக்கமாக வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.

அவர் வெளியிட்டிருக்கும் வீடியோவில், ” பிரபல பின்னணி பாடகி ஆஷா போஸ்லே அவர்களின் மறைவு செய்தியை அறிந்து நான் மிகவும் துயரமுற்றேன்.
இது ஒரு சாதாரண இரங்கல் அல்ல. என் மனதிற்கு மிக அருகில் இருக்கும் ஒரு பெரும் இழப்பு. அவர் என்னிடம் காட்டிய பாசமும் அன்பும், அதே நேரத்தில் ஒரு பின்னணி பாடகியாக என்னை மதித்து நடந்து கொண்ட விதமும் என்றும் மறக்க முடியாதவை.
அந்த நினைவுகள் என் வாழ்நாளில் எப்போதும் என்னுடன் இருக்கும். என் வாழ்க்கையில் அழியாத இடத்தைப் பெற்றவர் ஆஷா போஸ்லே.
அவரது திறமைக்கு அளவே இல்லை, வேறு எந்த குரல்களுடனும் ஒப்பிடமுடியாத தனிக்குரல். தனித்திறமை வாய்ந்த குரலும்கூட, அவரின் இழப்பு எனக்கு வருத்தத்தை அளிக்கிறது.

— Ilaiyaraaja (@ilaiyaraaja) April 12, 2026
எப்போது சென்னைக்கு வந்தாலும், என்னை வந்து சந்திக்கும் அன்புச் சகோதரி, அவரின் அன்பையும் பாசத்தையும் என்னால் மறக்கவே முடியாது. திரையுலகம் என்றைக்கும் மறக்க முடியாத குரல்.
அவரது ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன். அவரை இழந்துவாடும் குடும்பத்திற்கு என் ஆறுதலையும் இரங்கலையும் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று இளையராஜா உருக்கமாக இரங்கல் தெரிவித்திருக்கிறார்.