கான்பூர்:
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச ஆண்கள் கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.இதில் சென்னையில் நடந்த முதலாவது டெஸ்டில் இந்தியா 280 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
வங்காளதேச அணி பேட்டிங்
இந்த நிலையில் இந்தியா-வங்காளதேசம் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள கிரீன் பார்க் ஸ்டேடியத்தில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது. இந்திய அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் ஆடிய 11 வீரர்கள் இந்த போட்டியிலும் களமிறங்கினர்.
முதலில் பேட்டிங் செய்த வங்காளதேச அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. ஷாகிர் ஹாசன் ரன் எதுவும் எடுக்காமல் ஆகாஷ் தீப் பந்தில் ஜெய்ஸ்வாலிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். இதைத்தொடர்ந்து ஷாத்மன் இஸ்லாம் 24 ரன்னிலும், கேப்டன் ஷாந்தோ 31 ரன்னிலும் அவுட்டானார்கள்.
3 விக்கெட் இழப்பிற்கு 107 ரன்
பின்னர் மொமினுல் ஹக், முஷ்பிகுர் ரஹிம் 31 ரன்னிலும் விளையாடி வருகிறார்கள். ஆகாஷ் தீப் 2 விக்கெட்டு, அஸ்வின் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.35 ஓவர்கள் முடிந்தநிலையில் வங்காளதேச அணி 3 விக்கெட் இழப்பிற்கு 107 ரன்கள் எடுத்து இருந்தது. அப்போது மழை குறுக்கிட்டது.
இதையடுத்து ஆட்டம் நிறுத்தப்பட்டது. தொடர்ந்து மழை பெய்ததால் 35 ஓவருடன் இன்றைய முதல் நாள் ஆட்டம் முடித்துக்கொள்ளப்பட்டது. நாளை 2&வது நாள்ஆட்டம் நடைபெற உள்ளது.
ரசிகர் மயக்கம்
இந்த நிலையில் 2-வது டெஸ்ட் போட்டி நடைபெற்ற கான்பூர் கிரிக்கெட் மைதானத்தில் வங்காள தேச கிரிக்கெட் அணியின் தீவிர ஆதரவாளரான டாக்காவை சேர்ந்த டைகர் ராபி என்பவர் ரசிகர்களால் தாக்கப்பட்டதாக தகவல்வெளியானது.
தற்போது அவர் சிகிச்சைக்காக ரீஜென்சி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவர் நலமுடன் இருப்பதாக உத்திரபிரதேச போலீசார் தெரிவித்து உள்ளனர். டைகர் ராபிக் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டதை போலீசார் உறுதிப்படுத்தியுள்ளது.
வெப்ப சோர்வு
இதுபற்றி போலீசார் கூறும்போது, மைதான ஸ்டேடியத்திற்குள் வருவதற்குள் முன்பே ராபிக்கு உடல்நிலை குறைவு இருந்தது. மேலும் அவர் அனுமதி வழங்கப்படாத சி- அப்பர் ஸ்டாண்டில் இருந்தார். வெப்பத்தின் தாக்கம் காரணமாக ராபி மயக்கமடைந்தார். அவர் அமர்ந்து இருந்த ஸ்டாண்டு கட்டமைப்பு பிரச்சினையால் உத்தரபிரதேச கிரிக்கெட் சங்கத்தால் மூடப்பட்டது. இப்போது அவர் நலமாக இருக்கிறார். எந்த தாக்குதலும் இல்லை. வெப்ப சோர்வு காரணமாக உடல்நலக்குறைவு ஏற்பட்டது என்றனர்.