விகடனின் அவள் விருதுகள் நிகழ்ச்சி சென்னையில் இன்று நடைபெற்றது. இதில் பசுமைப்பெண் விருது பெற்றார் நடிகர் கிஷோரின் மனைவி விஷாலா கிஷோர்.
பசுமைப் பெண் – விஷாலா கிஷோர்
விஷாலா, ஒரு சார்ட்டர்டு அக்கவுன்டன்ட். நாமறிந்த நல்லதொரு நடிகர் கிஷோரின் மனைவி. கிஷோர், சினிமாவில் பிஸியாக, விஷாலா கழனி நோக்கி நடந்தார். பெங்களூருவை அடுத்த கரியப்பன தொட்டி கிராமத்தில் புதர்மண்டிக் கிடந்தது அவர்களது ஏழு ஏக்கர் நிலம். விஷாலாவின் கடும் முயற்சியால் தற்போது சிறுதானியங்கள், பழங்கள், காய்கறிகள், மரங்கள் என அவ்விடத்தில் பசுமை பூத்துக் குலுங்குகிறது. வனப்பகுதியை ஒட்டியிருப்பதால் விலங்குகள் தொல்லை, சுரங்கத்தொழில் என பாதிக்கப்பட்டனர், அப்பகுதி பழங்குடி விவசாயிகள்.

அதனால் மாற்றுத்தொழிலுக்குச் சென்ற நூற்றுக் கணக்கான பெண்களை ஒருங்கிணைத்தார் விஷாலா. `பஃபல்லோ பேக் கன்ஸ்யூமர்ஸ்” எனும் இயக்கத்தைத் தொடங்கி, அவர்களுக்கு இயற்கை விவசாயம் கற்றுக்கொடுத்தார். இவரது வழிகாட்டலில், நிலமில்லாத ஏழைப் பெண் விவசாயிகளும், கூட்டுப் பண்ணை முறையில் குத்தகை நிலத்தில் வேளாண்மை செய்யத் தொடங்கினர். அவர்களது விளைபொருள்களுக்கு, பெங்களூருவிலுள்ள விஷாலாவின் வீடுதான் அங்காடி.