Aval Vikatan – 02 December 2025 – அவள் விருதுகள் – பெண்ணென்று கொட்டு முரசே! – சாதனைப் பெண்களின் சங்கமம்! | aval vikatan awards 2025

Spread the love

அவள் விருதுகள் - பெண்ணென்று கொட்டு முரசே! - சாதனைப் பெண்களின் சங்கமம்!

சமூக சேவை, இலக்கியம், விவசாயம், விளையாட்டு, சினிமா என பற்பல தளங்களிலும் சிகரம் தொட்டுக் கொண்டிருக்கும் சாதனைப் பெண்களைப் பாராட்டி பெருமைப்படுத்தும் வகையில் விருதுகள் வழங்கி வருகிறது அவள் விகடன். அந்த வகையில், இந்த ஆண்டுக்கான அவள் விருதுகள் நிகழ்ச்சி, வரும் நவம்பர் 22-ம் தேதி சென்னையில் நடைபெறவுள்ளது. சிறப்புமிக்க அவள் விருதுகளைப் பெறவுள்ள பாராட்டுதலுக்குரிய பெண்களின் பட்டியல் இங்கே…

அவள் ஆளுமை – கீதா ராமகிருஷ்ணன்

 கீதா ராமகிருஷ்ணன்

கீதா ராமகிருஷ்ணன்

அரசால் மறக்கப்படுகிற, ஆதிக்கத்தால் அடக்கப்படுகிற அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கான தீப்பந்த வழிகாட்டி, கீதா ராமகிருஷ்ணன்.

கட்டுமானத் தொழிலாளர்களின் உரிமைகளுக்கான முழக்கங்களை தன் சகாக்களுடன் இணைந்து மத்திய, மாநில அரசுகளின் செவிப்பறைகள் அதிர எழுப்பியவர். தமிழ்நாட்டில் 1970-களின் பிற்பகுதியில் இவர்கள் முன்னெடுத்த போராட்டங்களால், மாநில அளவிலான கட்டுமானத் தொழிலாளர்கள் வாரியம் ஏற்படுத்தப்பட்டது. அது, 1996-ல் தேசிய அளவிலான சட்டம் இயற்றப்படக் காரணமாக அமைந்தது. இவற்றுக்கெல்லாம் கருவியாக முன்னின்று போராடியவர், கீதா ராமகிருஷ்ணன். அனைத்து மாநிலங்களிலும், யூனியன் பிரதேசங்களிலும் தொழிலாளர் நல வாரியங்கள் உருவாக வித்திட்டார். குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு, கொத்தடிமைத் தொழிலாளர் விடுதலை, குடிசைப் பகுதி மக்களுக் கான பட்டா உரிமை, பெண்கள் பாதுகாப்பு என… இவர்களது இருட்டையெல்லாம் எரிக்க நாட்டின் எந்த மூலையிலும் தினம் தினம் உதித்துக் கொண்டிருக்கும் நெருப்புப் புயல்.

இப்படி, அரை நூற்றாண்டுக்கும் மேலாக சமூகப் போராளியாக இயங்கிக்கொண்டிருக்கும் கீதா ராமகிருஷ்ணனுக்கு `அவள் ஆளுமை” விருதளித்து வணங்குகிறது அவள் விகடன்!

பெஸ்ட் மாம் – ராஜி தாஸ்

ராஜி தாஸ்

ராஜி தாஸ்

`நம்ம வீட்டுப் பிள்ளை’ எனத் தமிழ்நாடே கொண்டாடும் நடிகர் சிவகார்த்திகேயனை, அப்படி ஒரு நல்ல பிள்ளையாக வார்த்தெடுத்தவர்… அவரின் அம்மா ராஜி தாஸ். காவல்துறை அதிகாரியான அப்பாவை பறிகொடுத்தபோது, 17 வயது சிவ கார்த்திகேயனுக்கு. அவர் அக்கா, எம்.பி.பி.எஸ் முதலாமாண்டு மாணவி. தன் சோகத்தைப் புதைத்து, வலிகளைக் கடக்கும் வலிமையைப் பெற்றார், ராஜி தாஸ். பிள்ளைகளைப் படிக்கவைத்தார். அப்பாவின் இன்மைக்கும் சேர்த்து அன்பூட்டினார். மிடில் க்ளாஸ் குடும்பங்களைப் பதறவைக்கும் மீடியா பாதையை டிக் செய்தார், சிவகார்த்திகேயன். சம்பள உறுதியை அம்மாவுக்குக் கொடுக்க முடியாமல், எஸ்.கே கிடந்து உழைத்து ஓடிக்கொண்டிருந்த காலம். மகன் கலங்கி வரும்போதெல்லாம் அம்மா தலைகோதிவிட, இப்போது அவர் பாக்ஸ் ஆபீஸ் டான். எஸ்.கே-யின் ஒவ்வொரு வெற்றியையும், தமிழ்நாடே தனதெனக் கொண்டாடுகிறது… உணர்வுரீதியான ஓர் உரிமையுடன்.

`நம்ம பையனும் ஜெயிச்சிடுவான்’ என்ற நம்பிக்கையை மிடில் க்ளாஸ் அம்மாக்களுக்கு ஆழ ஊன்றியிருக்கும் ராஜி தாஸுக்கு, `பெஸ்ட் மாம்’ விருது வழங்கி மரியாதை செய்கிறது அவள் விகடன்!

பவர்ஃபுல் பெர்ஃபார்மர் – நிமிஷா சஜயன்

நிமிஷா சஜயன்

நிமிஷா சஜயன்

`இவர் நம்மில் ஒருவர்’ என்று உணரவைக்கும் அழகு ரகம்… நிமிஷா சஜயன். அதே நேரம், நடிப்பில் வியக்கும் வைக்கும் சிகரம். மும்பையில் வளர்ந்து, 2017-ல் மல்லுவுட்டுக்கு வந்தார் நிமிஷா. வழக்கறிஞர், மலைவாழ் பள்ளி மாணவி என மாறுபட்ட பல கதாபாத்திரங்களில் மிரட்டியெடுத்தார். ஹீரோயினுக்கான ஸ்டீரியோ டைப்பை உடைத்தது `சித்தா’ பட தூய்மைப் பணியாளர் கேரக்டர். அதில், நிமிஷாவின் உணர்வுபூர்வமான நடிப்பு தமிழ் ரசிகர்களுடன் கைகுலுக்கியது. `ஜிகர்தண்டா’ படத்தில் `மலையரசி’யாக மிரட்டினார். `டி.என்.ஏ’ படத்தில் அவரது பெரிய கண்களே பாதி நடிப்பைக் கொப்பளித்தன. `டப்பா கார்டெல்’ இந்தி வெப் சீரிஸில் பாலிவுட்டிலும் பட்டாசாக வெடித்தது இவரது பெர்ஃபார்மன்ஸ்.

சி.ஏ.ஏ-வுக்கு எதிராகப் போராட்டக் களத்துக்கு வந்தது, குடும்ப வன்முறை, வரதட்சணைக்கு எதிரான பிரசாரங்களுக்கு அம்பாஸிடராக நியமிக்கப்பட்டது என, ஆஃப் கேமராவிலும் அதிர்வை ஏற்படுத்தும் அக அழகிக்கு, `பவர்ஃபுல் பெர்ஃபார்மர்’ விருது வழங்கிச் சீராட்டுகிறது அவள் விகடன்!

ரைஸிங் ஸ்டார் – துஷாரா விஜயன்

துஷாரா விஜயன்

துஷாரா விஜயன்

கோலிவுட்டின் அசத்தல் தமிழ் முகம், துஷாரா விஜயன். திண்டுக்கல் பெண், இன்று தமிழ் சினிமாவில் தனக்கென உருவாக்கியுள்ளார் ஓர் அழுத்தமான இடம். மாடலிங்கில் தன் கரியரை ஆரம்பித்தவருக்கு, 2019-ல் அறிமுகம் கொடுத்தது `போதை ஏறி புத்தி மாறி’ திரைப்படம். ‘சார்பட்டா பரம்பரை’ மாரியம்மா கதாபாத்திரத்தில், ‘அட, யார் இந்தப் பொண்ணு?’ எனத் திரும்பிப் பார்க்க வைத்தார். `நட்சத்திரம் நகர்கிறது’ படத்தின் ரெனே கதாபாத்திரத்தில் நவீன காதல், சமூக அரசியல் எனப் பல பரிமாணங்கள் தாங்கினார் துஷாரா. தொடர்ந்து, `கழுவேத்தி மூர்க்கனி’ல் ஊர்க்காரப் பொண்ணு, `ராயனி’ல் பாசக்கார தங்கச்சி, ‘வேட்டையனி’ல் அக்கறையுள்ள டீச்சர் எனப் படத்திற்குப் படம் நடிப்பில் இவர் முதிர்ச்சி கூடிக் கொண்டே போனது. `வீர தீர சூரனி’ல் அதட்டிய கலைவாணியோ, இன்னும் அதகளம்.

நடிப்பில் வேட்கை கொண்டுள்ள புதிய முகங்களுக்கான இடம், தமிழ் சினிமாவில் எப்போதும் உண்டு என்பதை தற்போது நிரூபித் திருக்கும் துஷாராவுக்கு, ‘ரைஸிங் ஸ்டார்’ விருது வழங்கிப் பாராட்டுகிறது அவள் விகடன்!

சேவை தேவதை – நூரி

நூரி

நூரி

இந்தியாவில் ஹெச்.ஐ.வி பாதிப்பு கண்டறியப்பட்ட முதல் திருநங்கை, நூரி. ஆனால், துவண்டு போகாமல் ஹெச்.ஐ.வி ஒழிப்புப் போராளியாக இயங்கத் தொடங்கினார். இவரால் ஆரம்பிக்கப்பட்ட `எஸ்.ஐ.பி’ அமைப்பு, பல பெண்களை பாலியல் தொழிலில் இருந்து மீட்டு, வாழ்வாதார வாய்ப்புகளைக் கொடுத்து வருகிறது. ஹெச்.ஐ.வி பாதித்த பெற்றோர்களின் குழந்தைகளை, உதவிகள் பெற்று காப்பகத்தில் வளர்த்து வருகிறார். அப்படி இவரால் அரவணைக்கப்பட்ட 69 பெண் குழந்தைகளும், 16 ஆண் குழந்தைகளும் கல்வியுடன் வாழ்க்கையில் கரைசேர்ந்துள்ளனர். தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டுக் கழகத்துடன் இணைந்து, ஆண்கள், பெண்கள், திருநங்கைகள் என ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஹெச்.ஐ.வி தொற்றாளர்களுக்கு மீட்பர் ஆகியுள்ளார் நூரி. அவர்களுக்கு மருத்துவ உதவி, கல்வி உதவி, வேலைவாய்ப்பு வழிகாட்டல், வாழ்க்கைக்கான ஆலோசனை என ஏற்படுத்திக் கொடுத்துள்ளது இந்த ஆலமரம்.

39 வருடங்களாக இந்தச் சேவைகளில் இயங்கிவரும், 76 வயதிலும் ஓய்வறியாது ஓடிக்கொண்டே இருக்கும் நூரிக்கு, ’சேவை தேவதை’ விருது வழங்கி கெளரவிக்கிறது அவள் விகடன்!

எவர்கிரீன் நாயகி – ரேவதி

ரேவதி

ரேவதி

ரெட்ரோ சினிமாக்களின் இளவரசி, ரேவதி. துள்ளல், காதல், சோகம், காமெடி என எல்லா ஜானர்களிலும் கொடிநாட்டியவர். பாரதிராஜா, மகேந்திரன், பாலசந்தர், மணிரத்னம், பாலு மகேந்திரா என வெவ்வேறு கள சினிமா இயக்குநர்களுக்கும் ‘மோஸ்ட் வான்டட் ஹீரோயின்’. `மௌன ராகம்’ திவ்யா கேரக்டர்… இன்று வரை தமிழ் சினிமாவின் OG. `கை கொடுக்கும் கை’, `வைதேகி காத்திருந்தாள்’, `அரங்கேற்ற வேளை’, `புதுமைப் பெண்’, `அஞ்சலி’, `மறுபடியும்’, ‘பவர் பாண்டி’ என.. ஒவ்வொரு படத்திலும் இவர் காட்டிய பரிமாணங்கள், சினிமா பல்கலைக்கழகப் பாடங்கள். ரேவதியின் கிரேஸ்ஃபுல்லான டான்ஸுக்கு, தனி ஃபேன்பேஸ் உண்டு. சிவாஜி, ரஜினி, கமல், மம்மூட்டி, மோகன்லால், சிரஞ்சீவி, அமிதாப் பச்சன், சல்மான் கான் என இந்திய சினிமாவின் உச்ச நடிகர்களுடன் இணைந்து இவர் அடித்ததெல்லாம் சிக்ஸர்கள்.

இயக்குநராகவும் தடம் பதித்து,150-க்கும் மேற்பட்ட படங்களுடன் இன்று வரை ரசிக்கவைத்துக் கொண்டிருக்கும் ரேவதிக்கு, `எவர்கிரீன் நாயகி’ விருது வழங்கி பெருமிதம் கொள்கிறது அவள் விகடன்!

கலைநாயகி – காஞ்சனா

காஞ்சனா

காஞ்சனா

கல்லூரியில் படித்துக்கொண்டே இண்டியன் ஏர்லைன்ஸில் ஏர்ஹோஸ்டஸாகப் பணிபுரிந்து கொண்டிருந்தார், காஞ்சனா. அவரை ஹீரோயின் ஆக்கியது `காதலிக்க நேரமில்லை’ திரைப்பட வாய்ப்பு. அழகிலும் நடிப்பிலும் மிளிர்ந்தவருக்கு, பல மொழிகளிலும் வந்து குவிந்தன வெற்றிப் பட வாய்ப்புகள். எம்.ஜி.ஆர், என்.டி.ஆர், நாகேஸ்வர ராவ், ராஜ்குமார், பிரேம் நசீர் என ஐந்து மொழி சூப்பர் ஸ்டார்களுடன் 250-க்கும் மேற்பட்ட படங்களில் முத்திரை பதித்தார். `சிவந்த மண்’ திரைப் படத்தில் நடிகர் திலகத்துக்கே ஈடுகொடுத்து, மகா ராணியாகவும் போராளியாகவும் மாறுபட்ட நடிப்பில் அசரடித்தார். `பட்டத்துராணி’ பாடல் எக்ஸ்பிரஷன்களோ `வாவ்’ ரகம். `அதே கண்கள்’ படத்தில் அஞ்சி ஒடுங்கியதும் இந்த அழகிய கண்கள்தான். `பாமா விஜயம்’, ‘துலாபாரம்’, ‘சாந்தி நிலையம்’ என எண்ணற்ற க்ளாஸிக் படங்களில் காலத்தால் அழியாது உறைந்திருக்கிறது இவரது நவரசம். 1960, 70-களின் கலை பொக்கிஷமான காஞ்சனாவின் இன்னொரு முகம், ஈகை குணம்.

இந்த சூப்பர் சீனியருக்கு `கலைநாயகி’ விருது வழங்கிப் போற்றுகிறது அவள் விகடன்!

கலைநாயகி – கே.ஆர்.விஜயா

கே.ஆர்.விஜயா

கே.ஆர்.விஜயா

தென்னிந்திய சினிமாவில் ஹோம்லி ஹீரோயினாகக் கொடிகட்டிப் பறந்தவர், `புன்னகை அரசி’ கே.ஆர்.விஜயா. பால்யத்திலேயே மேடை நாடகங்களில் நடித்தவர், 15 வயதில் `கற்பகம்’ திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். முதல் படத்திலேயே புகழின் உச்சிக்குச் சென்றார். சிவாஜியுடன் 40-க்கும் மேற்பட்ட படங்கள், எம்.ஜி.ஆருடன் 10-க்கும் அதிகமான படங்கள் என 1960-களிலிருந்து கோலோச்சினார். என்.டி.ராம ராவ், நாகேஸ்வர ராவ், விஷ்ணுவர்தன், பிரேம் நசீர் என ஜோடி சேர்ந்து மொத்த தென்னிந்திய சினிமாவிலும் வெற்றிகளைக் குவித்தார். நடிப்பு, தமிழ் உச்சரிப்பு, நடனம் என அனைத்திலும் மிளிர்ந்தவரை, நம்ம வீட்டுப் பெண்ணாக சிம்மாசனமிட்டு அமரவைத்தனர் ரசிகர்கள். `சரஸ்வதி சபதத்தி’ல் ரெளத்திரம், `ஊட்டி வரை உறவி’ல் நகைச்சுவை, `இரு மலர்களி’ல் காதல் ரசம், `குறத்திமகனி’ல் தாய்ப்பாசம் என அசத்தினார். அம்மன் வேடங்களுக்கு எழுதிவைக்கப்பட்டது இவரது பெயர்.

500-க்கும் மேற்பட்ட படங்களுடன் திரைத் துறையில் 70 ஆண்டுகளைக் கடந்திருக்கும் நடிப்புப் பேரரசிக்கு, `கலைநாயகி’ விருது வழங்கிப் பெருமிதம் கொள்கிறது அவள் விகடன்!

இலக்கிய வல்லமை – அமரந்தா

அமரந்தா

அமரந்தா

தமிழ் இலக்கியச் சூழலில் படைப்பாளர், மொழி பெயர்ப்பாளர், ஆய்வாளர் எனப் பல முகங்களுடன் இயங்குகிறவர், அமரந்தா. தனிமையிலிருந்து விடுபட எழுத ஆரம்பித்ததாகக் கூறுபவர். இவரின் முதல் படைப்பான ‘சுற்றத்தார்’, தி. ஜானகிராமன் குறுநாவல் போட்டியில் முதல் பரிசு பெற்றது. தனது கிணற்றுத் தவளை மனநிலையை உடைக்க எண்ணி, லத்தீன் அமெரிக்க இலக்கியங்களை தமிழில் மொழி பெயர்த்தார். அதில் முன்னோடியாகவும், தனிச் சுடராகவும் ஒளிர்ந்தார்; நவீன இலக்கியத்துக்குப் புதிய சாளரத்தைத் திறந்துவிட்டார். வங்காள எழுத்தாளர் மகா ஸ்வேதா தேவி எழுதிய, பழங்குடிப் பெண்களின் வலிகளைத் தாங்கிய சிறுகதைகளை, தனது குருதிப்புனல் எழுத்துகளில் மொழிபெயர்த்தார் அமரந்தா. பெண்ணியம் சார்ந்த இவரின் படைப்புகள், மொத்த சமூகத்தையும் கேள்விக்குட்படுத்துகின்றன. கதைகளில் புனைவையும் வாழ்வையும் இணைக்கும் நுட்பம், மொழிபெயர்ப்புகளில் சரளமான வாசிப்பின் சாத்தியம், கட்டுரைகளில் வரலாற்று தரவுகள் எனப் படைக்கும் நேர்த்தியாளர்.

நிதர்சனத்தைப் பேசியபடியே மாற்றத்துக்கான நெருப்பை மூட்டும் அமரந்தாவுக்கு `இலக்கிய வல்லமை’ விருதளித்து உவகைகொள்கிறது அவள் விகடன்!

பசுமைப்பெண் – விஷாலா கிஷோர்

விஷாலா கிஷோர்

விஷாலா கிஷோர்

விஷாலா, ஒரு சார்ட்டர்டு அக்கவுன்டன்ட். நாமறிந்த நல்லதொரு நடிகர் கிஷோரின் மனைவி. கிஷோர், சினிமாவில் பிஸியாக, விஷாலா கழனி நோக்கி நடந்தார். பெங்களூருவை அடுத்த கரியப்பன தொட்டி கிராமத்தில் புதர்மண்டிக் கிடந்தது அவர்களது ஏழு ஏக்கர் நிலம். விஷாலாவின் கடும் முயற்சியால் தற்போது சிறுதானியங்கள், பழங்கள், காய்கறிகள், மரங்கள் என அவ்விடத்தில் பசுமை பூத்துக் குலுங்குகிறது. வனப்பகுதியை ஒட்டியிருப்பதால் விலங்குகள் தொல்லை, சுரங்கத்தொழில் என பாதிக்கப்பட்டனர், அப்பகுதி பழங்குடி விவசாயிகள். அதனால் மாற்றுத்தொழிலுக்குச் சென்ற நூற்றுக் கணக்கான பெண்களை ஒருங்கிணைத்தார் விஷாலா. `பஃபல்லோ பேக் கன்ஸ்யூமர்ஸ்’ எனும் இயக்கத்தைத் தொடங்கி, அவர்களுக்கு இயற்கை விவசாயம் கற்றுக்கொடுத்தார். இவரது வழிகாட்டலில், நிலமில்லாத ஏழைப் பெண் விவசாயிகளும், கூட்டுப் பண்ணைய முறையில் குத்தகை நிலத்தில் வேளாண்மை செய்யத் தொடங்கினர். அவர்களது விளைபொருள்களுக்கு, பெங்களூருவிலுள்ள விஷாலாவின் வீடுதான் அங்காடி.

உற்பத்தியாளர்கள் மற்றும் நுகர்வோரை இணைத்து, விவசாயிகளின் வாழ்க்கைக்குப் புத்துயிரூட்டிவரும் விஷாலாவுக்கு, `பசுமைப்பெண்’ விருதளித்துப் பாராட்டுகிறது அவள் விகடன்!

கல்வித் தாரகை – பிரேமா ரேவதி

பிரேமா ரேவதி

பிரேமா ரேவதி

எழுத்தாளர், பத்திரிகையாளர், நாடகக் கலைஞர், ஆவணப்பட இயக்குநர்… பிரேமா ரேவதி. இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனனிடம் அசோசியேட் டைரக்டராகப் பணியாற்றிக்கொண்டிருந்தவர், சுனாமி தன்னார்வலராக நாகப்பட்டினம் சென்றார். அங்குள்ள பழங்குடி, நாடோடியினக் குழந்தைகள்… உலகிடம் இருந்து தனித்துவிடப்பட்டு, கல்வியிலிருந்து தள்ளி வைக்கப்பட்டிருந்த காட்சி, அவரது சமநிலை குலைத்தது. இனி தன் வாழ்வு அவர்களுக்காகத்தான் என்ற அளப்பரிய முடிவு, அவரால் எடுக்கப்பட்டது. அப்பகுதியில் `வானவில்’ உண்டு உறைவிடப் பள்ளியை 2005-ல் ஆரம்பித்தார்.

பூம்பூம் மாட்டுக்கார ஆதியன் இனத்தினர், நாடோடியினத்தினர், இருளர் சமுதாயங்களில் இருந்து `வானவில்’ அறக்கட்டளை மூலமாக இதுவரை 286 பழங்குடி மாணவர்கள் கல்லூரிப் படிப்பை எட்டியுள்ளனர். ஐந்து மாவட்டங்களில் உள்ள 19 மாலை நேர கல்வி மையங்களில் 1,250 பழங்குடி குழந்தைகள் பயின்று வருகிறார்கள்.

கேட்பாரற்றிருந்த குழந்தைகளுக்குக் கல்வி யைக் கொடுத்து, சமூகத்தின் மைய நீரோட்டத்துடன் இணைத்துக் கொண்டிருக்கும் பிரேமா ரேவதிக்கு, `கல்வித் தாரகை’ விருது வழங்கிப் பெருமிதம் கொள்கிறது அவள் விகடன்!

அவள் ஐகான் – சினேகா

சினேகா

சினேகா

தமிழ் சினிமாவின் புன்னகை இளவரசி, சினேகா. `என்னவளே’ படத்தில் அறிமுகமானவர், `ஆனந்தம்’ படத்துக்குப் பின் தமிழ்நாட்டின் சென்சேஷன் ஆனார். துறுதுறு நடிப்பும், ஈர்க்கும் சிரிப்பும் இவரை 90’ஸ் கிட்ஸின் ஃபேவரைட் ஹீரோயினாக்கின. ஹோம்லி இமேஜ், தமிழ்க் குடும்பங்களுக்குள்ளும் இவரை கொண்டுசேர்த்தது. டாப் ஸ்டார்களுடன் நடித்து இவர் கொடுத்த தொடர் ஹிட்கள், முன்னணி ஹீரோயின் மகுடத்தை அவருக்குச் சூட்டின. சிறப்பான காதாபாத்திர தேர்வு, பன்முக நடிப்பாற்றல், நேர்த்தியான உடைகள் என தமிழ் சினிமாவுக்கு ஒரு டிரெண்ட் செட்டரானார் சினேகா. அது, தமிழ் தாண்டி தெலுங்கு, மலையாளத்திலும் இவருக்கு வசப்படுத்தின வெற்றிகளை. `கோட்’ திரைப்படத்தில் விஜய் ஜோடியாக, Gen Z ரசிகர்களையும் `வாவ்’ சொல்ல வைத்தது இந்த வசீகரம்.

கால் நூற்றாண்டாகத் தமிழ் சினிமாவின் மோஸ்ட் கிரேஸ்ஃபுல் தீவா (Diva) ஆக மிளிர்ந்து கொண்டிருக்கும் சினேகாவுக்கு, `அவள் ஐகான்’ விருதளித்து ஆனந்தம் கொள்கிறது அவள் விகடன்.

Special Achievers – கண்ணகி நகர் கபடிக் குழு

கண்ணகி நகர் கபடிக் குழு

கண்ணகி நகர் கபடிக் குழு

சென்னை, கண்ணகி நகர் பெண்கள் கபடி குழு. இன்று உலக பிரபலம். ஆனால், இக்குழுவில் இடம்பெற்றுள்ளவர்களின் நிலைதான், கேள்விக்குறி. பெரும்பாலானவர்களின் பெற்றோர்கள் தூய்மைப் பணியாளர்கள். மூன்று நேர உணவு இல்லை, மைதானம் இல்லை, ஸ்போர்ட்ஸ் ஷூக்கள் இல்லை, சத்தான உணவு இல்லை. இருந்தும், பயிற்சியாளர் ராஜி தனது சொந்தப் பணத்தால் இந்த `இல்லை’களை முடிந்தவரை ஈடுகட்டினார். வட்டார, மாவட்ட, மாநில, தேசிய அளவிலான போட்டிகளில் வெற்றிகளைக் குவிக்கத் தொடங்கியது இந்தக் குழு. மழைபெய்தால் தண்ணீர் தேங்கும் பூங்காதான் மைதானம். என்றாலும், விடாமுயற்சிதான் இவர்களது பலம். இக்குழுவில் இருந்து தற்போது ஆறு பேர் தமிழக பெண்கள் கபடி அணியில். இரண்டு பேர் இந்திய பெண்கள் கபடி அணியில். குழுவின் 16 வயது எனர்ஜி பாம் கார்த்திகா, இந்திய அணியின் துணை கேப்டன். இந்தாண்டு பஹ்ரைனில் நடந்த ஆசிய இளையோர் பெண்கள் கபடிப் போட்டியில் தங்கம் வென்றது இந்திய பெண்கள் கபடி அணி. வாகைசூட தோள் கொடுத்தவர், துணை கேப்டன், நம் கார்த்திகா.

கண்ணகி நகருக்கு வெற்றி முகம் கொடுத்து வரும் இந்தக் கபடி குழுவுக்கு Special Achievers Award வழங்கிப் பூரிக்கிறது அவள் விகடன்!

வைரல் ஸ்டார் – இனியா ராஜகுமாரன்

இனியா ராஜகுமாரன்

இனியா ராஜகுமாரன்

தமிழ்நாட்டின் சமீபத்திய செல்லக் குரல்… இனியா ராஜகுமாரன். Zee தமிழ் சரிகமப நிகழ்ச்சியின் போட்டியாளரான இந்தக் கல்லூரி மாணவி, நடிகை தேவயானி – இயக்குநர் ராஜகுமாரன் தம்பதியின் மகள். பெற்றோரின் புகழை தனது விசிட்டிங் கார்டு ஆக்க விரும்பாத செல்ஃப் மேடு டேலன்ட். கர்னாடக சங்கீதம், கீ போர்டு, பியானோ, பரதம், சிலம்பம், சுருள் வாள் வீச்சு, கத்திச் சண்டை, நெருப்புப் பந்தம் என இவர் கற்றுள்ள கலைகள் பல. போட்டி மேடையில் ‘மயில்போல பொண்ணு ஒண்ணு’ பாடலை குயில்போல பாடியவரை, தமிழ் மக்கள் தங்கள் வீட்டு இசை மகளாக வாரியணைத்துக் கொண்டனர். சிறப்பான பாடல் தேர்வு, எளிமையான ஆடைகள், பாந்தமான பேச்சு என ஒவ்வொரு சுற்றிலும் மில்லியன் வியூவ்ஸ்களை அள்ளினார். போட்டியாளர் இனியா, பாடகி இனியாவாக ஒளிரத் தொடங்கினார்.

டிரெண்டிங் டார்லிங்காகக் கலக்கிவரும் இனியாவுக்கு, வைரல் ஸ்டார் விருது வழங்கி மகிழ்கிறது அவள் விகடன்!

லிட்டில் சாம்பியன் – தியா

தியா

தியா

8 வயதாகும் குட்டிப் பட்டாசு தியா, இதுவரை ஏறியுள்ள ஆன்மிக மேடைகள்… 120-க்கும் மேல். இரண்டு மணி நேரம் தொடர்ந்து கச்சேரி செய்தாலும், இறுதி நொடி வரை எனர்ஜி குறைவதே இல்லை இந்தப் பூங்குயிலுக்கு. அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டில் இவர் பாடிய `குன்றத்திலே குமரனுக்குக் கொண்டாட்டம்’ பாடலை மக்கள் ரசித்துச் சிலிர்த்தனர். மக்கள், அனுதினமும் வேண்டும் அத்தனை தெய்வங்களின் பாடல்களையும் ஆத்ம விருந்தாக்குகிறது இந்தத் தேன்சிட்டு. முருகனின் அறுபடை வீடுகள், ஊர்த் திருவிழாக்கள், குடமுழுக்குகள், வெளிநாடுகள் வரை என… தற்போது எங்கெங்கும் தியா குரல்மயம். தியா, பாடல் கச்சேரியுடன் சொற்பொழிவும் ஆற்றத் தொடங்கி இருப்பது செம்மை. திருப்புகழ், தேவாரம், திருவாசகம், கந்த சஷ்டிகவசம், கோளறு பதிகம், பெருமாள் பாசுரங்கள் என அனைத்தும் தவழ்கின்றன இவர் நாவின் நுனியில்.

இசை, தமிழ் உச்சரிப்பு, உடல் மொழி, தெளிவான பேச்சு என வசீகரிக்கும் இந்த வளர் பிறைக்கு… `லிட்டில் சாம்பியன்’ விருது வழங்கி ஆரத்தழுவுகிறது அவள் விகடன்!

சாகச மங்கை – தீபா

 தீபா

தீபா

விமானப் போக்குவரத்துத் துறையில் சர்வதேச வானில் மின்னும் தமிழக நட்சத்திரம், பைலட் தீபா. விமானியாகப் பயணத்தை தொடங்கியவர். இப்போது, விமானத்தை இயக்குவதற்கான பயிற்சி களை அளிக்கும் `இன்ஸ்ட்ரக்டர்’ எனும் உயர் பொறுப்பு அவர் கைகளில். இந்திய அளவில் மிகச் சிலரே எட்டும் இந்த உயரத்தில் வீற்றிருக்கும் ஒரே தமிழ்ப் பெண், தீபா. பல்லாயிரக்கணக்கான பயிற்சி விமானிகள், செக் பைலட்களுக்கு உள்நாடு, வெளிநாடு விமானப் பயிற்சிகள் அளித்து வரும் துரோணர். கூடவே, ஏர் இந்தியா நிறுவனத்தின் மூத்த விமானியாகவும் பறந்துகொண்டிருக்கிறார். 25 ஆண்டுக்கால பணி அனுபவத்தில் 25-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு விமானங்களை இயக்கி இருக்கும் சூப்பர் சீனியர். உலகளவில் தொழில்நுட்ப ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த விமானங்கள் பல, இவர் விரலசைவில் மிதக்கின்றன.

இந்தத் துறையில் சாதிக்கத் துடிப்பவர்களுக்கு முன்மாதிரியாக வானில் வட்டமடிக்கும் இந்த வெண் பறவைக்கு, `சாகச மங்கை’ விருதளித்துப் பாராட்டு கிறது அவள் விகடன்!

சிங்கப்பெண் – வித்யா ராம்ராஜ்

வித்யா ராம்ராஜ்

வித்யா ராம்ராஜ்

கோவையைச் சேர்ந்த தடகள வீராங்கனை, வித்யா ராம்ராஜ். அப்பா லாரி ஓட்டுநர், அம்மா இல்லத்தரசி. அரசுப் பள்ளியில் படித்தபோதே தடை ஓட்டத்திலும், தொடர் ஓட்டத்திலும் மாஸ் காட்டினார். 14 வயதில் தமிழக அணியில் இடம்பெற்று பதக்கங் களைக் குவிக்கத் தொடங்கியது இந்தப் புயல். 2019-ம் ஆண்டு இந்திய அணியில் இடம் பிடித்தவர், வேர்ல்டு சாம்பியன்ஷிப், ஏசியன் கேம்ஸ் என வென்று வந்த பதக்கங்கள் பல. 2023-ம் ஆண்டு ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், 400 மீட்டர் தடை ஓட்டத்தில், பி.டி. உஷாவின் 55.42 விநாடிகள் என்ற 39 ஆண்டுகள் தேசிய சாதனையை சமம் செய்தன அவரது எக்ஸ்பிரஸ் கால்கள். ஆகப்பெரும் விளையாட்டுத் திருவிழாவான ஒலிம்பிக்ஸில் 2024-ம் ஆண்டு பங்கேற்றதன் மூலம் உலகின் கவனத்தை ஈர்த்தார். அடுத்து, இந்த ஆண்டுக்கான ஏசியன் சாம்பியன்ஷிப்பில் வெண்கலம் வென்று, இந்தியாவுக்குப் பெருமை தேடித் தந்துள்ளார்.

எளிய குடும்பத்திலிருந்து வந்து உலக மைதானங்களில் தடம்பதித்துக்கொண்டிருக்கும் இந்த வைராக்கிய வைரத்துக்கு, சிங்கப்பெண் விருது வழங்கித் தட்டிக்கொடுக்கிறது அவள் விகடன்!

வெற்றிப்படை – திருவட்டார் மகளிர் உழவர் உற்பத்தியாளர் நிறுவனம்

திருவட்டார் மகளிர் உழவர் உற்பத்தியாளர் நிறுவனம்

திருவட்டார் மகளிர் உழவர் உற்பத்தியாளர் நிறுவனம்

கன்னியாகுமரி மாவட்டம், மேற்குத் தொடர்ச்சி மலையில் வசிக்கிறார்கள், இந்தக் காணி பழங்குடி பெண்கள். விளைபொருள்களுடன் இவர்களின் மலையில் இருந்து ஆண்கள் மட்டுமே இறங்கி விற்பனை செய்தபோது, தரகர்கள் தலையீட்டால் உரிய விலை கிடைக்கவில்லை. இந்த நிலையில்தான், மகளிர் சுய உதவிக்குழுவைத் தொடங்கினார்கள் இந்தப் பெண்கள். தங்கள் விளைபொருள்களுடன் மலை விட்டு வந்தார்கள். தரகர்களைத் தவிர்த்து, வெளிமாவட்டங்கள் வரை நேரடி ஸ்டால்கள் போட்டதில் கிடைத்தது நல்ல லாபம். சக பழங்குடிப் பெண்களும் இந்தச் சங்கிலியில் இணைய, திரண்டது 300 பெண்கள் கொண்ட மாபெரும் படை. பிறந்தது `திருவட்டார் மகளிர் உழவர் உற்பத்தியாளர் நிறுவனம்’. இவர்களது மலைகளில் இயற்கை முறையில் விளைவிக்கப்படும் மிளகு, கஸ்தூரி மஞ்சள், ரப்பர் உள்ளிட்ட பொருள்கள் தற்போது தமிழகம் முழுவதும் விற்பனை செய்யப்படுகின்றன. இந்த நிறுவனத்தில் உள்ள ஒவ்வொரு பெண்ணும் மாதம் 20,000 ரூபாய் வரை வருமானம் ஈட்டும் வெற்றியாளர்.

மலைமகள்களுக்கு `வெற்றிப்படை’ விருது வழங்கி உச்சிமுகர்ந்து மெச்சுகிறது அவள் விகடன்!

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *