காவல் நிலையத்துக்கு பொது மக்கள் செல்லத் தயங்குவது, பெண்கள் அந்த திசையையே தீங்காக நினைப்பது எல்லாம் மாற்றப்பட வேண்டிய மனநிலை. ஆனால், அது மக்கள் மனதில் மேலும் மேலும் கெட்டிப்படும் வகையில்தான் நடந்துகொள்கிறது, காவல்துறை. சமீபத்திய சாட்சி, மாநிலத்தையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய தூத்துக்குடி மாணவி படுகொலை புகாரை அவர்கள் கையாண்ட விதம்.
தூத்துக்குடி அருகிலுள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த ப்ளஸ் டூ மாணவி, இயற்கை உபாதையைக் கழிக்கக் காட்டுப்பகுதிக்குச் சென்ற பின்னர் வீடு திரும்பவில்லை. பெற்றோர் அன்றிரவு காவல் நிலையத்தில் புகார் அளிக்க, மறுநாள் வரும்படி திருப்பி அனுப்பப்பட்டனர். அடுத்த நாள் சென்றபோது, அவர்களை மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்க அனுப்பி வைத்தனர்.
அங்கோ, பெற்றோரையே மோசமாகப் பேசி, புகாரை அலட்சியம் செய்தனர் காவல் துறையினர். கையறு நிலையில் ஊர்க்காரர்களுடன் சேர்ந்து மகளைத் தேடினர் பெற்றோர். அன்று மதியம் அதே காட்டுப்பகுதியில் மாணவி சடலமாகக் கண்டறியப்பட, பின்னரே காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்தனர்.
ஊர் மக்கள் போராடியதைத் தொடர்ந்து, புகாரை அலட்சியமாகக் கையாண்ட காவல் ஆய்வாளர் பிரவீனா இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை, ‘இது போதுமான தண்டனை அல்ல’ எனக் கூறியுள்ளது.
தற்போது, குற்றவாளி என்ற சந்தேகத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். காவல்துறை உடனடியாக நடவடிக்கை எடுத்திருந்தால் அந்த மாணவியின் உயிரைக் காப்பாற்றும் வாய்ப்பு இருந்திருக்கலாம் என்பது மனதை அறுக்கிறது. நாளுக்கு நாள் குற்றங்கள் மலிந்துவரும் சமூகத்தில், காவல்துறையின் இந்த மெத்தனம் கொந்தளிக்க வைக்கிறது.
இந்த வழக்குப் பரவலாகப் பேசப்பட்டதால், இவையெல்லாம் வெளிச்சத்துக்கு வந்துள்ளன. சொல்லப்போனால், குடும்ப வன்முறை, வரதட்சணைக் கொடுமை, போக்சோ, பாலியல் வன்கொடுமை எனக் காவல் நிலையங்களுக்குப் புகார் அளிக்கச் செல்லும் எத்தனையோ பெண்களை, பொதுமக்களை, பல காக்கிகள் இப்படித்தான் மேலும் வன்முறைக்கு உள்ளாக்கி வருகின்றனர்.
`பெண்ணைக் காணவில்லை’ புகார்களில் நடத்தைக்கொலை செய்து பேசுவது, குடும்ப வன்முறை புகார்களில் புகுந்த வீட்டினருடன் ‘பஞ்சாயத்து’ செய்து வைப்பது, பாலியல் புகார்களை சட்டப்படி அல்லாமல் ஆணாதிக்க முன்முடிவு மனநிலையில் அணுகுவது, `போக்சோ’ குற்றங்களில் அதற்குரிய விசாரணை வரையறைகளைப் பின்பற்றாமல் இருப்பது, எளிய மக்களைவிட வலியவர்கள் பக்கமே நிற்பது என்று காவல்துறை செய்யும் குற்றங்கள் பல. மகளிர் காவல் நிலையங்களிலும் இதுவே நிலை.
பெண்களையும் பொது மக்களையும் எப்படி அணுகுவது என்று காவல்துறையினருக்குப் பயிற்சி அளிக்க வேண்டும். பெண்கள் சம்பந்தப்பட்ட புகார்களை அணுகுவதில் அவர்களுக் குள் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். அது உடனடியாக நடக்காது என்றாலும், ஆரம்பப் புள்ளி இப்போதாவது வைக்கப்பட வேண்டும்.
காவல்துறை நம் நண்பனாவது எப்போது?
உரிமையுடன்,
ஸ்ரீ
ஆசிரியர்