Aval Vikatan – 10 March 2026 – பெண் தொழிலாளர்களின் பங்களிப்பு விகிதம் 35.1%-ஆக உயர்வு, அவர்களுக்கான தடைகள் களையப்பட்டிருக்கின்றனவா? | namakkulle editorial page march 10 2026

Spread the love

பெண்களுக்கு எதிரான அடக்குமுறைகள், வன்முறைகள் பற்றிய செய்திகள் ஒரு பக்கம் தொடர்ந்து வந்துகொண்டே இருந்தாலும், மறுபுறம் பெண்கள் தங்களது முன்னேற்றம் பற்றிய செய்திகளையும் உருவாக்கியபடிதான் இருக்கிறார்கள். அந்த வகையில், சமீபத்தில் வெளிவந்திருக்கும் பொருளாதார ஆய்வறிக்கை 2025 – 26, இந்தியாவில் பெண் தொழிலாளர்களின் பங்களிப்பு விகிதம் (FLFPR) கடந்த ஜனவரி நிலவரப்படி 35.1% ஆக உயர்ந்துள்ளதைக் கொண்டாடுகிறது.

2017-18-ம் ஆண்டில் 23.3% ஆக இருந்த பெண்களின் தொழிலாளர் பங்கேற்பு, தற்போது இந்த வளர்ச்சியைப் பெற்றுள்ளது. மேலும், பெண்களுக்கான வேலையின்மை 5.6% என்பதிலிருந்து 3.2% ஆகக் குறைந்துள்ளது. கூடவே, பெண்கள் தலைமையிலான தொழில் நிறுவனங்கள் 24.2%ல் இருந்து 26.2% ஆக அதிகரித்துள்ளன.

2050-ம் ஆண்டுக்குள் தொழிலாளர் தொகுப்பில் பெண்களின் பங்களிப்பு கிட்டத்தட்ட 55% ஆக உயராவிட்டால், நீண்டகால மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியை இந்தியா தக்கவைக்க முடியாது என்றும் சுட்டிக்காட்டுகிறது பொருளாதார ஆய்வறிக்கை. அந்தளவுக்கு, தங்கள் உழைப்பை நாட்டின் முன்னேற்றத்துக்கான இன்றியமையாத காரணியாகப் பிணைத்து வருகிறார்கள் பெண்கள். ஆனால், குறைவான ஊதியம் முதல் பாதுகாப்புக் குறைபாடுகள் வரை, உழைக்கும் தளத்தில் பெண்களுக்குத் தடைகள் பல குவிந்துகிடக்கின்றன. ‘கால்களில் கட்டப்பட்டுள்ள சங்கிலியுடனேயே பந்தயத்தில் ஓட வேண்டும்’ என்ற பழைய கட்டுப்பாட்டில் இருந்து அவர்களை விடுவிக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்.

‘பெண்களே, அதிகமாக பணிக்கு வாருங்கள்’, `தொழில்களைத் தொடங்குங்கள்’ என்று மத்திய, மாநில அரசுகள் அழைத்தால் மட்டும் போதாது. முறைசாரா துறைகளை ஒழுங்குபடுத்துவது, நிறுவனங்களுக்கான பெண்நலக் கொள்கைகளை உருவாக்குவது என நடவடிக்கைகளை எடுத்து, அவர்களுக்கான ஆதரவை வழங்க வேண்டும்.

பெண்களின் நகர்வுக்கான வழிகளை உண்டாக்குவது, வெளியூர்ப் பணிகளில் பாதுகாப்பான தங்குமிடங்களை உறுதிப்படுத்துவது, குறைவான மற்றும் பாலின பாரபட்ச சம்பளம் போன்றவற்றை ஒழுங்குபடுத்துவது, பணியிடப் பாதுகாப்பு, திறன் மேம்பாட்டு நடவடிக்கைகள் என, இவையெல்லாம் பெண்களின் நீண்டகால பொருளாதார இயக்கத்துக்குத் தேவைப்படுகின்றன.

குடும்பங்களின் புரிந்துணர்வு மற்றும் ஆதரவும் அவசியம். பொதுவாகவே இங்கு பெரும்பாலான வீடுகளில், பொருளீட்டும் ஆணுக்குக் கிடைக்கும் வசதியும் மரியாதையும், அதே பொருளை ஈட்டும் பெண்ணுக்குக் கிடைப்பதில்லை. கூடுதலாக, வீட்டு வேலைகள், குழந்தை வளர்ப்புப் பொறுப்புகளை அவள் முதுகில் மொத்தமாக ஏற்றுகின்றனர். இந்நிலை மாறி, உரிய உதவிகள் கொடுக்கப்பட வேண்டும். இல்லையெனில் தடைகள் அவர்களை துவளச் செய்யும்.

முக்கியமாக, மதிப்புக் குறைந்த பணிகளிலேயே பெண்களை அடைக்காமல், மேலாளர், தலைமைப் பொறுப்பு என அவர்கள் படியேற வேண்டும். பெண்களின் முன்னேற்றம் என்பது அவர்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்துவது மட்டுமல்ல; அவர்களுக்கான பணிச்சூழலை மேம்படுத்துவதும்தான்.

உரிமையுடன்,

ஸ்ரீ

ஆசிரியர்

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *