தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 களம் பரபரப்பாக இருக்கிறது. இம்முறை, பெண்களின் வாக்குகளுக்கு முக்கியத்துவம் கொடுத்துதான் ஆளும்கட்சி, எதிர்க்கட்சி, இதர கட்சிகள் என அனைவரது தேர்தல் வாக்குறுதிகளும் தயாரிக்கப்பட்டுள்ளன. அவர்களுக்கான பண உதவித்திட்டங்கள், நலத்திட்டங்கள் எனத் தோரணமிடப்பட்டுள்ளன. காரணம், 51% ஆக உயர்ந்திருக்கும் பெண்களின் வாக்கு.
தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர் எண்ணிக்கை 5.67 கோடி. இதில் 2.89 கோடி பெண்களும், 2.77 கோடி ஆண்களும் இடம்பெற்றுள்ளனர். மொத்த வாக்காளர்களில் 51% பேர் பெண்கள்; ஆண்களைவிட 12.21 லட்சம் பேர் அதிகம். ஆக, ஆட்சியமைப்பவர்களைத் தீர்மானிப்பவர் களாகப் பெண்கள் உள்ளனர். என்றாலும், வாக்காளர்களாகவும், வேட்பாளர்களாகவும், மக்கள் பிரதிநிதிகளாகவும் அவர்களுக்கு உரிய உரிமையும், பகிர்வும், அதிகாரமும் கொடுக்கப்படுகின்றனவா என்றால், `இல்லை” என்பதே கசப்பான பதில்.
இன்றுமே நம் குடும்பங்களில் அப்பா, சகோதரர், கணவர், மகன் என வீட்டில் உள்ள ஆண்கள் சொல்லும் கட்சிகள், வேட்பாளர்களுக்கு வாக்களிக்கும் பெண்கள் அதிகம். அதை விடுத்து, தங்களுக்கான மக்கள் பிரதிநிதியைத் தாங்களே தேர்ந்தெடுக்கும் உரிமையையும், அதற்கான அரசியல் அறிவையும் பெண்கள் பெற வேண்டும்.
சட்டமன்றங்கள் மற்றும் நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கும் மசோதா, 2023-ல் நிறைவேற்றப்பட்ட போதிலும், 2029-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கே அது அமல்படுத்தப்படும் எனக் கூறப்படுகிறது. சொல்லப்போனால், 50% பகிர்வு கிடைக்க வேண்டிய காலகட்டத்திலும், பெண்களை 33% பெறுவதற்கே போராடவைக்கின்றன கட்சிகள்.
தமிழகத்தில் பிரதானக் கட்சிகளின் வேட்பாளர் பட்டியலில் இடம்பெற்றுள்ள பெண்களின் எண்ணிக்கை சொற்பமே. அப்படியே வாய்ப்புக் கிடைத்தவர்களிலும் பெரும்பான்மையானோர், அவர்கள் வீட்டு ஆண்களின் செல்வாக்கால் அந்த வாய்ப்பைப் பெற்றவர்களாக இருக்கிறார்கள். இந்நிலை மாறி, அரசியல் தளத்தில் பெண்களின் பங்கேற்புக்கு ஆதரவும், ஊக்கமும் கிடைக்க வேண்டும். அதிக வேட்பாளர்கள் உருவாக வேண்டும். இச்சூழலில், வேட்பாளர்களில் பெண்களுக்கு 50% சம பகிர்வு வழங்கி வரும் நாம் தமிழர் கட்சி பாராட்டுக்குரியதாகிறது.
உள்ளாட்சித் தேர்தல், சட்டமன்றத் தேர்தல், நாடாளுமன்றத் தேர்தல் என பெண் வேட்பாளர்கள் வெற்றி பெற்றாலுமே, அவர்களை இயக்குபவர்கள் அவர்கள் குடும்பத்து ஆண்களாகவோ, கட்சியின் சீனியர் ஆண்களாகவோ இருக்கிறார்கள். பெரும்பாலான பெண் மக்கள் பிரதிநிதிகள், இந்த ஆண்களால் பொம்மைபோல நடத்தப்படும் அவலம் தொடர்கிறது.
எனவே, வெறும் அடையாள அரசியலாக இல்லாமல், பெண்கள் உண்மையிலேயே அரசியலில் அவர்களுக்கு உரிய இடத்தைப் பெற வேண்டும். தங்கள் முக்கியத்துவத்தை நிலைநாட்ட வேண்டும். சுய முடிவு எடுக்கும் வாக்காளர்களாகவும், சமூக அரசியல் திறன்மிக்க வேட்பாளர்களாகவும், நல்லாட்சி கொடுக்கும் மக்கள் பிரதிநிதிகளாகவும் மிளிர வேண்டும்.
அரசியல் இனியும் `ஆண்கள் ஒன்லி’ களமல்ல. வாக்காளர் எண்ணிக்கையில் அவர்களை விட அதிக சதவிகிதமுள்ள பெண்கள், எழுதுவோம் புதிய சாதனைகளை!
உரிமையுடன்,
ஸ்ரீ
ஆசிரியர்