Aval Vikatan – 30 December 2025 – மின்னல் தாக்கி செல்போன் வெடிக்குமா?

Spread the love

சருமப் பராமரிப்பு என்பது இடைவெளியே இல்லாமல் தொடர்ந்து பின்பற்றப்பட வேண்டியதா?

– கே.ராஜலட்சுமி, புதுச்சேரி

பதில் சொல்கிறார், ஆரணியைச் சேர்ந்த சரும மருத்துவர் ஜெகன் ராமன்.

சருமம் என்பது நாம் வெளியில் பார்க்கும் தோல் மட்டும் கிடையாது. அது நம் உடல் வெப்பத்தை நிர்ணயம் செய்யும் அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது. நாம் வெயிலில் சென்று வந்தால் சருமம் நிறம் மாறியிருப்பதை கவனித்திருப்போம், அது சூரியனிலிருந்து வெளிப்படும் கதிர்களை நம் உடலுக்குள் இறக்காமல் இருப்பதற்காக, மெலனோ சைட்ஸ் எனப்படும் நிறமிகளை சருமத்தின் மேற் பகுதிக்குக் கொண்டுவரும் ஒருவித பாதுகாப்பு நடவடிக்கையே. இப்படி சருமத்துக்கு நிறைய பணிகள் உண்டு. எனவே, சருமப் பராமரிப்பு என்பது மிகவும் முக்கியம்.

தினமும் சருமப் பராமரிப்பைப் பின்பற்றுவது அவசியம் என்றாலும், அதை அளவுக்கு அதிகமாகச் செய்வதும் தேவையற்றது. உதாரணத்துக்கு, சிலர், பாதுகாப்பு கருதி, குழந்தைகளை வெளியே விடாமலேயே வைத்திருப்பார்கள். அப்படியெல்லாம் செய்ய வேண்டியதில்லை.

நம் ஒவ்வொருவரின் சருமமும் ஒவ்வொரு தன்மையில் இருக்கும். அதற்கேற்றவாறு தான் சருமப் பராமரிப்பு பொருள்களைப் பயன்படுத்த வேண்டும். சன் ஸ்கிரீன் மற்றும் மாய்ஸ்ச்சரைசர் இரண்டும் மிக முக்கியம். வெயிலில் செல்லும்போது தலையில் தொப்பி அணிவது, உடல் முழுவதும் மூடும்படியான ஆடைகள் அணிவது போன்றவற்றால் வெளிப்புற காரணிகளால் சருமம் பாதிப்படை வதைத் தடுக்கலாம். சருமத்தைச் சுத்தமாக வைத்திருப்பதும் அவசியம்.

அடிக்கடி பயணம் செய்பவர்கள் கண்டிப்பாக சருமத்தை அடிக்கடி கிளென்ஸ் செய்ய வேண்டும். தேவையான அளவு தண்ணீர் குடிப்பதும் வைட்டமின் சி உள்ள உணவுகளை எடுத்துக் கொள்வதும் அவசியம். எனவே, சருமப் பராமரிப்பு என்பது எப்போதும் பின்பற்றப்பட வேண்டியதுதான்.

மொட்டைமாடியில் நின்று செல்போன் பேசியபோது மின்னல் தாக்கி, செல்போன் வெடித்து ஓர் இளைஞர் உயிரிழந்ததாக செய்தி படித்தேன். இது எப்படி சாத்தியம… ? மழை பெய்யும்போது செல்போன் பேசக்கூடாதா?

– மல்லிகா அன்பழகன், சென்னை-78

பதில் சொல்கிறார், காஞ்சிபுரத்தைச் சேர்ந்த `அஃறிணை இன்னோவேஷன்” நிறுவனர் முனைவர் விக்னேஷ் கிருஷ்ணன்.

மின்சாதன பொருளாகவே இருந்தாலும் செல்போனுக்கு மின்னலை ஈர்க்கும் தன்மை கிடையாது. அதனால் மொட்டைமாடியில் நின்று செல்போன் பேசும்போது, அது வெடிக்கும் என்பதும், அதனால் மனிதர்கள் இறப்பார்கள் என்பதும் தற்போது வரை நிரூபிக்கப்படாதவை. எப்போதும் மின்னல் வரும்போது அது பூமியை நோக்கி இறங்கும். அப்போது வரும் வேகத்தில் மின்கடத்தும் பொருள்கள் ஏதேனும் இருந்தால் அதன்வழியே இறங்கிவிடும். அதனால்தான் பெரிய பெரிய கட்டடங்களில் கூர்மையான முனை போன்ற பகுதியும், மின்னலைத் தாங்கும் அமைப்பும் கொண்டும் கட்டுகின்றனர். மொட்டைமாடியில் நாம் நிற்கும்போது மொட்டைமாடியைவிட அதிக உயரத்தில் நாம் இருப்போம். நம்முடைய உடலும் மின்னலைக் கடத்தும் தன்மையுடையது. அதனால் மின்னல் நம் உடல் வழியே பூமிக்குள் இறங்கும். அதனால்தான் மின்னல் தாக்கி மனிதர்கள் உயிரிழக்கின்றனர்.

மனித உடலில் பாயும் மின்னல், அதிக வோல்டேஜ் உடன் இறங்கும். அப்போது ஏற்கெனவே கையில் இருக்கும் செல்போன் போன்ற மின்சாதன பொருளில், அந்த அதிக வோல்டேஜால் வெடிக்கும். இதனால்தான் மழை பெய்யும்போது உயரமான இடங்களில் இருக்க வேண்டாம் என கூறப்படுகிறது. இடி என்பது வெறும் சத்தம் தான், மின்னல்தான் பூமியில் இறங்குவது. அதனால் இதனை `மின்னல்தாங்கி’ என்றே கூற வேண்டும். அப்படித்தான் ஆரம்பத்தில் கூறினார்கள். பேச்சு வழக்கில் அது `இடிதாங்கி’ என மாறிவிட்டது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *