கதாபாத்திர அறிமுகங்கள், கதைக்கள விவரிப்பு, மையக்கதைக்கான முன்னோட்டம் என மெல்ல மெல்ல நகர்கிறது திரைக்கதை. திருப்பங்கள் பெரும்பாலானவை முன்பே யூகிக்கும்படி இருப்பதும், காட்சிகளை நீட்டிக்கொண்டே போவதும் தொடக்கத்திலேயே அயர்ச்சியைத் தரத் தொடங்குகின்றன.
சல்லியின் மகள் கிரி, இயற்கை அன்னையைத் தேடும் கதை, மகன் லோ’அக் கதை, கர்னல் மைல்ஸ் – மகன் ஸ்பைடர் பாசக்கதை எனச் சில கிளைக்கதைகள் சுவாரஸ்யம் கூட்ட முயல்கின்றன. ஆனால், அவற்றைத் தேவையான அளவிற்கு நீட்டிக்காமல் பேசிய உணர்வுகளையே மீண்டும் மீண்டும் பேச வைத்தது, அந்த சுவாரஸ்யத்தையும் சறுக்க வைக்கின்றன.
இவற்றைத் தாண்டி, சில உணர்வபூர்வமான காட்சிகள் கதைக்குக் கைக்கொடுத்திருக்கின்றன. காட்டாற்றில் சிறுவர்கள் தப்பிப்பது, கர்னல் மைல்ஸ் – சல்லி – ஸ்பைடர் உரையாடல், கடல்வாழ் உயிரினங்களுடனான உரையாடல், பறக்கும் கப்பலில் வரும் வணிகர்கள் போன்ற காட்சிகள் சுவாரஸ்யம் கூட்டுவதோடு ரசிக்கவும் வைத்திருக்கின்றன.
இரண்டாம் பாதியை நிரப்பும் போர்க் காட்சிகள் கச்சிதமான மேக்கிங்கால் அட்டகாசமான உணர்வைத் தருகிறது.

மனிதர்களின் அதிநவீன ஆயுதங்கள், கடல்வாழ் உரியினங்களின் பங்கெடுப்பு, வேறொரு நவி இன மக்களின் ஆயுதங்கள் என அசரடிக்கும் பிரமாண்டம் ஒருபக்கம் இருந்தாலும், இவற்றுக்கூடாக ஆங்காங்கே தலைகாட்டும் உணர்வுபூர்வமான காட்சிகளும் கனம் கூட்டுகின்றன.
அதேநேரம், யூகிக்கும் கதாபாத்திரத் திருப்பங்களும், எல்லையை மீறி ஓடிக்கொண்டே இருக்கும் போர்க்காட்சித் தொகுப்பும், அதுவரை சேர்த்து வைத்த சுவாரஸ்யத்தையும், பிரமிப்பையும் பின்னுக்கு இழுக்கின்றன. ‘ஆஷ்’ இனத்தின் பெயர் தாங்கிய படத்தில் அந்த இனத்துக்கே முக்கியத்துவம் கொடுக்கும் காட்சிகள் இடம்பெறாதது ஏனோ?!