தமிழ்நாடு பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக பதவி இருந்தவர் ஆம்ஸ்ட்ராங். இவர் சென்னை பெரம்பூர், செம்பியம் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்தார்.
வெட்டிபடுகொலை
இந்த நிலையில் இன்று இரவு 8 மணியளவில் ஆம்ஸ்ட்ராங் தனது வீட்டின் அருகே நின்று கொண்டு இருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 6 பேர் கும்பல் திடீரென ஆம்ஸ்ட்ராங்கை சுற்றி வளைத்து சரமாரியாக வெட்டினர். இதில் தலை, கழுத்தில் பலத்த வெட்டுக்காயம்அடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் சரிந்தார்.
இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் ஏராளமானோர் அங்கு திரண்டனர். உடனே மர்ம கும்பல் அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் தப்பி சென்று விட்டனர்.ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய ஆம்ஸ்ட்ராங்கை கீரிம்ஸ் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
பதட்டமான நிலை
பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டது பற்றி அறிந்ததும் அவரது கட்சி தொண்டர்கள் மற்றும்ஆதரவாளர் ஏராளமானோர் குவிந்தனர். இதனால் பெரம்பூர் மற்றும் அவரது வீடு உள்ள செம்பியம் பகுதியில் பதட்டமான நிலை ஏற்பட்டு உள்ளது. ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டு உள்ளனர்.
ஆம்ஸ்ட்ராங்கின் உடல் பிரேத பரிசோதனைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டு உள்ளது. அங்கு பகுஜன் சமாஜ் கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் ஆம்ஸ்ட்ராங்கின் உறவினர்கள் குவிந்துள்ளனர். பரபரப்பான நிலை நீடித்து வருகிறது. ஆஸ்பத்திரிக்கு வந்த இயக்குநர் பா.ரஞ்சித் ஆம்ஸ்ட்ராங்கின் உடலைப் பார்த்து கதறி அழுதார்.
5 தனிப்படை
ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்து விட்டு தப்பியோடிய மர்ம கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். கொலையாளிகள் யார்? கொலைக்கான காரணம் என்ன ? என்று உடனடியாக தெரியவில்லை. சம்பவ இடத்தில் கைப்பற்றப்பட்ட கண்காணிப்பு காமிரா காட்சிகளை சேகரித்து போலீசார் விசாரணையில் இறங்கிஉள்ளனர்.
பகுஜன் சமாஜ்கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்ட சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.குற்றவாளிகளை பிடிக்க 5 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
வழக்கறிஞரான ஆம்ஸ்ட்ராங், கடந்த 2000 ம் ஆண்டு முதல் தீவிர அரசியலில் ஈடுபட்டு வந்தார். 2006 ம் ஆண்டு, சுயேட்சையாக நின்று சென்னை மாமன்ற உறுப்பினரானார். 2007 ம் ஆண்டின் பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ரவுடி கும்பலுடன் முன் விரோதம்
2011-சட்டப்பேரவை தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் போட்டியிட்டார். அவர், ஒடுக்கப்பட்ட சமூகங்களுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு பிரிவு மாநிலத் தலைவராக ஆம்ஸ்ட்ராங் மீது ஏற்கெனவே பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. மேலும் சில ரவுடி கும்பலுடன் முன் விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது. என்வே இந்த மோததில் இந்த கொலை நடந்து இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.
ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு எடப்பாடி பழனிச்சாமி, அன்புமணி, ஜவாஹிருல்லா உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.