பிக் பாஸ் தமிழ் சீசன் 9-ன் இறுதிப்போட்டியில் வெற்றி பெற்று, டைட்டில் வின்னராக வாகை சூடியுள்ளார் திவ்யா கணேஷ்.
நடிப்பின் பக்கம் 10 ஆண்டுகளுக்கும் மேலாகப் பயணித்திருந்தாலும், இந்த மேடை அவருக்கு ஒரு புதிய பரிமாணத்தைத் தந்துள்ளது.

பிக் பாஸ் டைட்டில் வென்ற பிறகு அவர் விகடனுக்கு அளித்த நேர்காணலில், தனக்கு எதிராக எழுந்த புகார்கள் மற்றும் பிக் பாஸ் வீட்டிற்குள் தான் அனுபவித்த உணர்ச்சிகரமான தருணங்கள் குறித்து வெளிப்படையாகப் பேசியுள்ளார்.
வேலை இல்லாமல் தான் இருந்தேன்!
தனது வெற்றிக்கு பிஆர் ஏஜென்சிகள் தான் காரணம் என்ற விமர்சனங்களுக்கு பதிலளித்த திவ்யா, “நான் பிக் பாஸ் செல்வதற்கு முன்னால் சில காலம் வேலை இல்லாமல் தான் இருந்தேன்.
அப்படியிருக்கையில் 30 லட்சம் ரூபாய் பிஆருக்குச் செலவு செய்தேன் என்பது வேடிக்கையான வதந்தி. எனக்குக் கிடைத்த 50 லட்சம் பரிசுத் தொகையே என் வாழ்க்கையில் நான் பார்த்த மிகப்பெரிய தொகை.

இதில் வரி பிடித்தம் போக எனக்கே மீதி எவ்வளவு வரும் என்று தெரியாத நிலையில், இவ்வளவு பெரிய தொகையை நான் எப்படி பிஆருக்கு செலவிட முடியும்?
நேர்மையாக இருப்பதற்காக நான் கொடுத்த விலை அதிகம். நான் மிக நேரடியாகப் பேசக்கூடியவள்.
அதற்காக நான் பல உறவுகளையும் வேலைகளையும் இழந்துள்ளேன். வீட்டிற்குள் எனக்கு ரெட் கார்டு கொடுக்க வேண்டும் என்று கூடச் சொன்னார்கள்.
ஆனால் நான் ஒருபோதும் வளைந்து கொடுக்கவில்லை.
‘நான் இப்படித்தான், பிடித்தால் இருங்கள் இல்லையென்றால் போங்கள்’ என்று உறுதியாக நின்றேன்” என்றவர், “யார் என்ன வேண்டுமானாலும் செய்து விட்டுப் போகட்டும், நான் அமைதியாகச் சமைத்துச் சாப்பிடுவேன் என்று கிச்சனிலேயே தஞ்சம் புகுந்து விடுவேன்.
அந்த வீட்டில் நடந்த சில கசப்பான சம்பவங்களை அங்கேயே விட்டுவிட்டு வந்துவிட்டேன்.

இப்போது நான் முன்னைவிட இன்னும் வலிமையாகவும் பக்குவப்பட்டவளாகவும் மாறியிருப்பதை உணர்கிறேன். வாட்டர் மெலன் மீம்ஸ்களை என் நண்பர்கள் எனக்கு அனுப்பி வைத்தனர்.
அதைப் பார்த்து விழுந்து விழுந்து சிரித்தேன். எனக்குப் பின்னால் பேசியவர்களைப் பற்றி எனக்குக் கவலையில்லை. ஒரு சராசரி பெண்ணாக, நேர்மையான ஒரு மனுஷியாக மக்கள் என்னை ஏற்றுக்கொண்டதே எனக்குக் கிடைத்த மிகப்பெரிய விருது” என நம்மிடையே பகிர்ந்துக் கொண்டார்.