இந்த எபிசோடில் விவரிக்கும்படியாக அதிக சம்பவங்கள் நிகழவில்லை. வீடியோ தொகுப்புகள்தான் நிறைய. ஒரு farewell party.
விக்ரமின் வீடியோவைத் தொடர்ந்து திவ்யா, சபரி, அரோரா ஆகியோரின் பயண வீடியோக்கள் ஒளிபரப்பாகின. ஒவ்வொருவரின் ஆளுமையையும் வைத்து வழக்கம் போல் உத்வேகமான மற்றும் ஊக்க வார்த்தைகளைக் கூறினார் பிக் பாஸ்.
போட்டியாளர்கள் பிக் பாஸிடம் அந்தரங்கமான தோழமையையும் பிரியத்தையும், உரிமையுடன் கேட்டுப் பெறுகிற தனிப்பட்ட அன்பையும் புரிந்து கொள்ள முடிகிறது. அடைக்கப்பட்ட சூழலில் சக போட்டியாளர்களுடன் பேச முடியாத விஷயங்களை, தவிப்புகளை பிக் பாஸிடம் மட்டுமே பகிர முடியும்.
தனது வசீகரமான குரலாலும் அர்த்தம் மற்றும் ஆறுதல் பொதிந்த சொற்களாலும் ஒரு மருத்துவர் போல் அவர்களை ஆற்றுப்படுத்தி அனுப்புகிறார் பிக் பாஸ். எனவே அவரது ஒரு பாராட்டுக்கு கூட போட்டியாளர்கள் உடைந்து போய் நெகிழ்ந்து அழுது விடுகிறார்கள். அன்றாட வாழ்விலும் நாம் இப்படியொரு காட்ஃபாதரை சம்பாதித்து வைத்திருப்பது அவசியம்.