‘கம்மு – அம்மு – பாரு – இது ஒரு டிரையாங்கிள் லவ் ஸ்டோரி சார்’
“நீ வேணா அவ கிட்ட போ.. என் கிட்ட வராத” என்று அரோரா துரத்தி விட்டாலும் அங்கும் கையைப் பிடித்துக்கொண்டு கெஞ்சி விட்டு, இந்தப் பக்கம் வந்து “பாரு.. உன் கிட்ட பேசாம இருக்க முடியல. நண்பன் சொன்ன மாதிரி ரேஷன் கார்டு வாங்கறதுலதான் முடியும்போல இருக்கு. என்ன செய்யறதுன்னு புரியல” என்று கம்மு புலம்ப “எனக்கு ஃபீலிங் இருக்கு. உனக்கு அரோரா பிரெண்டாவே இருக்கட்டும். ஆனா என் கண் முன்னாடி அவகிட்ட பழகாத” என்று பாருவும் வலையை இறுக்கமாக பின்னிக்கொண்டிருந்தார்.
ஸ்கூல் டாஸ்க். வீடு ரெசிடென்சியல் பள்ளியாக மாறுமாம். மாணவர் பாத்திரத்திற்கு வியானா, சுபிக்ஷா, அரோரா போன்றவர்களைத் தேர்வு செய்ததுகூட ஓகே. ஆனால் விக்ரம், வினோத், சபரி, கம்மு, திவ்யா, சாண்ட்ராவையெல்லாம் ஸ்கூல் யூனிபார்மில் பார்ப்பது டூ மச்.
பிரஜினுக்கு பிரின்சிபல் வேடம். கூடவே ‘மாரல் சயின்ஸ் டீச்சர்’ என்று அறிவிக்கப்பட்டதும் வீடே ஒன்று கூடிச் சிரித்தது. மாரலே இல்லாதவருக்கு அந்தப் பாத்திரத்தைத் தந்து பிக் பாஸ் நையாண்டி செய்தார். கனி தமிழ் டீச்சர். அமித்திற்கு வெறுமனே டீச்சர் என்று சொல்லி விட்டார்கள். எந்த கேரக்டராக இருந்தாலும் அவர் பாட்டுக்கு வெறுமனே உலவப் போகிறார் என்பதால் போல.
எஃப்ஜே உதவி வார்டன். பாரு வார்டன். தங்களை மாணவர் பாத்திரத்தில் அறிவித்த போது ஒவ்வொருவரும் துள்ளிக் குதித்தார்கள். பாருவிற்கும் அந்த ஆசை இருந்திருக்கும் போல. ஸ்கூல் யூனிபார்மில் கம்முவுடன் லூட்டி அடிக்கலாம் என்று கனவு கண்டிருப்பார். ஆனால் குறும்புக்கார பிக் பாஸ், சத்துணவு பணியாளர் போல ஒரு சேலையைக் கட்டி விட்டார். மீசை, தாடியை மழித்து விட்டு வந்த கம்முவைப் பார்த்து ‘அய்யோ. என் கண்ணே பட்டிரும் போல. எனக்கு வெட்கம், வெட்கமாக வருதே’ என்கிற மாதிரி நெளிந்து கொண்டிருந்தார் பாரு.
“ஒரே சமயத்துல ரெண்டு வண்டியை ஓட்ட முடியாது. ஆக்சிடெண்ட் ஆயிடும்’ என்று பாருவை கலாய்த்துக் கொண்டிருந்தார் சபரி. விக்ரம் தனக்கென்று ஒரு மேனரிசத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார் போல. ஹிட்லர் கம் சார்லி சாப்ளின். திடீரென்று முறைத்து திடீரென்று சிரிக்கும் கேரக்டர். ஆனால் சிரிப்புதான் வரவில்லை.