‘நடிப்புராய தர்பூஸ்ராஜா’ – திவாகரைப் பிரிய மனமில்லாத பிக் பாஸ்
வீக்லி டாஸ்க்கை அறிவித்தார் பிக் பாஸ். ‘ஜமீன்தாரும் நெக்லஸூம்’ என்பது தலைப்பு. ஜமீன்தாரின் பெயர் ‘நடிப்புராய தர்பூஸ்ராஜா’ வாம். திவாகர் வெளியே சென்றாலும்கூட இவர்கள்விட மாட்டார்கள் போலிருக்கிறது. ‘பாருங்க.. தமிழக மக்களே.. என் பெயராலதான் பிக் பாஸ் வண்டி ஓடுது’ என்று அவர் பெருமிதமாக இண்டர்வியூவில் சொல்லப்போகிறார்.
‘ரெட்ரோ சினிமா’, ‘மாடர்ன் சினிமா’ என்று வீடு இரண்டு அணிகளாகப் பிரியும். ஜமீன்தார் தந்து விட்டுச் சென்றிருக்கும் நெக்லஸூகளை இரண்டு அணிகளும் பாதுகாக்க வேண்டும். நெக்லஸை தொலைக்கும் அணி ஒட்டுமொத்தமாக நாமினேஷன் ஆகும். வெற்றி பெறும் அணி நாமினேஷன் ப்ரீ பாஸ் வெல்லும்.
ஒவ்வொருவரின் சினிமா கேரக்டர்கள் தரப்பட்டன. ரத்தக்கண்ணீர் எம்.ஆர்.ராதவாக விக்ரம், வசந்தமாளிகை சரோஜாதேவியாக ‘கனி’, இதே படத்தின் சிவாஜியாக ஆதிரை, திருவிளையாடல் தருமியாக சுபிக்ஷா, பிராமண வீட்டுப் பெண்ணாக அரோரா, கர்ணன் சிவாஜியாக அமித், ‘தில்லானா மோகனாம்பாள்’ பத்மினியாக திவ்யா, இன்ஸ்பெக்டர் ஜம்புலிங்கமாக பிரஜின், முதல் மரியாதை ராதா (?!) வாக வியானா, ரெமோ நர்ஸ் ஆக கம்ருதீன், நத்தக்கண்ணுவாக பாரு, (என்னடா பேரு இது?) டி.ஆர் ஆக வினோத், மதராசப் பட்டினம் எமி ஜாக்ஸனாக சான்ட்ரா, வல்லவன் சிம்புவாக FJ, குணா அபிராமியாக சபரி.
டி.ஆர் பாத்திரம் என்று அறிவிக்கப்பட்டதுமே அந்த மோடில் மாறி ரைமிங்கில் அலப்பறையைத் தொடங்கிவிட்டார் வினோத். தனக்கு தரப்பட்ட விக்கை மாட்டிக் கொண்டு ‘என்னடா.. இது ஓலைக்குடிசைக்குள்ள வாழற மாதிரி இருக்கு’ என்று சொன்னது நல்ல நகைச்சுவை. ‘சும்மாவே பேசுவான்.. இப்ப இந்த காரெக்டர் வேறயா?” என்று மற்றவர்கள் ஜாலியாக சலித்துக்கொண்டார்கள்.