‘பாரு பெஸ்ட் பிளேயர்’ – விசேவின் பாராட்டு நியாயமானதா?
‘மோசத்தில் குறைந்த மோசம்’ என்று பார்த்தால் விக்ரம், பாரு, வினோத், கனி ஆகிய நால்வரும் தங்கள் காரெக்டரில் ஓரளிவற்காவது நீடிக்க முயன்றார்கள். டிஆர் மாதிரி ஆரம்பத்தில் அசத்திய வினோத், பிறகு சண்டை போடுவதில் மூழ்கி விட்டார். மற்றவர்களும் இதை அப்படியே கை விட்டு விட்டார்கள்
ஆனால் ‘விக்ரமும் பாருவும் செஞ்சது எனக்குப் பிடிச்சிருந்தது’ என்றார் விசே. எம்.ஆர்.ராதா மாதிரி எதையோ முயன்றார் விக்ரம். போலவே முறுக்கை கடித்து கர்ரக் முர்ரக் என்று மெல்லுவது போல பல்லைக் கடித்து ‘என்ற.. ஒன்ற..’ என்று கோவைத் தமிழ் மாதிரி எதையோ மென்று துப்பினார் பாரு. என்னவொன்று சண்டை போடும் போதுகூட அந்த ஸ்லாங்கில் பேசியது மட்டுமே சிறப்பு.
ஆனால் இதற்காக ‘நடிகர் டாஸ்க்கில்’ பாருவை சிறந்தவர் என்று சேர்க்க முடியுமா என்று தெரியவில்லை. கோள்மூட்டி விடுவது, அரோராவை வெறுப்பேற்றுவது, விக்ரமை சீண்டுவது, வீட்டு தல, பிக் பாஸ் ஆகிய இருவரையும் மதிக்காமல் தனியார்வர்த்தனமாக சபையில் கத்திக் கொண்டே இருப்பது. கம்முவுடன் ஜாலியாக ரொமான்ஸ் செய்வது என்பதில்தான் பிஸியாக இருந்தார் பாரு.
மைக்கை மறைத்துவிட்டு பேசுவது முதல் பாருவின் அட்ராசிட்டிகள் எதையும் அட்ரஸ் செய்யாமல் அவரைப் பாராட்டுவதின் மூலம், இந்த ஷோவை பாரு இருந்தால்தான் ஓட்ட முடியும் என்று பிக் பாஸ் டீம் நினைக்கிறதா? அதனால்தான் அவரது பிழைகள் விசாரிக்கப்படவில்லையா என்கிற சந்தேகம் எழுகிறது.
“என்னைப் பேச வெக்காதீங்க. எப்படியாவது போங்க’ என்று சட்டென்று டாட்டா காட்டி ஷோவை முடித்துவிட்டார் விசே.
பக்கெட் விவகாரத்தில் பாருவின் சூழ்ச்சி காரணமாகவே இத்தனையும் நடந்தது என்பதை ஒருவழியாக புரிந்து கொண்ட வியானா, கடைசியில் விக்ரமிடம் கட்டியணைத்து மன்னிப்பு கேட்டு ‘இந்த வலையில் தெரியாமல் மாட்டிக்கொண்டேன்’ என்றது சிறப்பான காட்சி.
இந்த வாரத்தில் டபுள் எவிக்ஷன் நடந்ததா என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
‘பக்கெட் துணி’ விவகாரத்தில் பிரதான குற்றவாளி யாரென்று நினைக்கிறீர்கள்? கமெண்ட் பாக்ஸில் சொல்லுங்கள்.