கோர்ட் டாஸ்க்கில் அனைத்துமே காதல் சேட்டைகள் சம்பந்தப்பட்ட வழக்குகளாகவே வருகின்றன. விதிவிலக்காக சுபிக்ஷாவின் ‘பாட்டு இம்சை’ பற்றிய வழக்கு ஆறுதலான காமெடியாக இருந்தது.
தான் செய்த தவறுக்காக வீடு முழுக்க தண்டனை அனுபவிப்பது பற்றி பாருவிற்கு எந்தவொரு கவலையும் குற்றவுணர்ச்சியும் இல்லை என்பதை தொடர்ந்து நிரூபித்துக் கொண்டே இருக்கிறார்.
பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? – நாள் 67
தான் சார்ந்திருக்கும் சமூகம் பற்றிய பிரச்சினைகளை பாடல் வழியாக சுபிக்ஷா வெளிப்படுத்துவது நல்ல விஷயம்தான். பிக் பாஸ் போன்ற பெரிய பிளாட்பார்மை பயன்படுத்துவது சிறந்த வழிதான்.
ஆனால் பொழுது பூராவும் ‘கடலோடி நான்’ என்று அந்தப் பிரச்சாரத்தையே மேற்கொள்வது சலிப்பூட்டி விடும். “சுபிக்ஷான்ற பொண்ணு யாருன்னு மக்களுக்கு தெரியாமப் போயிடும். உன் சமூகத்தை முன்னாடி வெச்சி நீ பின்னாடி ஒளிஞ்சுக்கற” என்று விக்ரம் எச்சரித்ததும் இதைத்தான்.
இருந்தாலும் சுபிக்ஷா அடங்கவில்லை. காலையிலேயே ‘ஏல ஏல வாள.. வந்தேன் கடலை ஆள’ என்று பாடத்துவங்க ‘இரும்மா. உன்னை கடல்லயே தூக்கிப் போடறோம்’ என்று விக்ரமும் வினோத்தும் சுபிக்ஷாவை தூக்கி நீச்சல் குளத்தில் தள்ளுவது போல் ஜாலியாக கலாட்டா செய்தார்கள்.
பின்னர் இதே விஷயத்தையே வழக்காடு மன்றத்திற்கும் கொண்டு வந்தார்கள். அடிப்படையில் இது செல்லத்தகாத வழக்கு என்று பிக் பாஸே தடுத்திருக்க வேண்டும். ஆனால் பிற வழக்குகள் சண்டையும் சச்சரவுமாக செல்வதால் இது மட்டும் காமெடியாக இருக்கட்டும் என்று விட்டு வைத்திருக்கலாம்.