‘டாஸ்குகளை நீங்கதான் யோசிச்சு சுவாரசியமா செய்யணும். யாரும் சொல்லித் தர முடியாது’ என்கிறார் ஹோஸ்ட். ஆனால் ஒரு டாஸ்க் முடிந்த பிறகு ‘ஏன் அப்படி செஞ்சீங்க?’ என்று வார இறுதியில் கேட்டு குடாய்கிறார்.
கோர்ட் டாஸ்க்கானது, ஒருவேளை ரியல் நீதிமன்றம்போல் நடந்திருந்தால் நமக்கு என்ன சுவாரசியம் கிடைத்திருக்கும்? நீதிபதி நாற்காலியில் அமர்ந்துகொண்டு வினோத் அடித்த கமென்ட்டுகள் சற்று மிகை என்றாலும், வறட்சியான டாஸ்க்கில் அவைதானே கொஞ்சமாவது சுவாரசியம் அளித்தன?
சிறப்பாக நடித்த வக்கீல் விக்ரமையும், நீதிபதி அமித்தையும் விசே நன்றாகவே பாராட்டியிருக்கலாம்.
பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? – நாள் 70
முந்தைய எபிசோட் சீரியஸாக போனதால், இந்த எபிசோடை ஏதாவது காமெடி சீனோடு ஆரம்பிக்க பிக் பாஸ் டீம் திட்டமிட்டதுபோல, எனவே ‘தல’ டாஸ்க்கில் நடந்த காமெடி காட்சிகளை ஒளிபரப்பினார்கள்.
அது நகைச்சுவையாக இருந்தது என்பதில் மறுப்பில்லை. ஆனால் அவசியமான நேரங்களில் தேவைப்படுகிற ‘குறும்படம்’ என்கிற ஆயுதத்தை சரியாக உபயோகிக்காமல், பார்வதி சமையல் காமெடி, தல டாஸ்க் காமெடி என்று செல்வதால், குறும்படத்திற்கு உண்டான மரியாதையே போய்விட்டது.
காமெடி ஷோ முடிந்ததும் ‘கோர்ட் டாஸ்க்’ பற்றி விசாரிக்க ஆரம்பித்த விசே, “decorum -ன்ற வார்த்தையைப் பத்தி தெரியுமா.. இந்த டாஸ்க்கை நீங்க சீரியஸா எடுத்து ஆடியிருந்தா நல்லா இருந்திருக்கும். ஷூட்டிங்க்ல நடிக்கும் போது இப்படித்தான் காமெடி பண்ணுவீங்களா?” என்றெல்லாம் கேட்டு விட்டு கோர்ட்டில் யார் அதிகம் சேட்டை செய்தது?” என்று கேட்டார்.
முதலில் எழுந்த கனி, பார்வதியை சரியாக போட்டுக்கொடுக்க, பதட்டமடைந்த பாரு, பதில் சொல்ல ஆரம்பிக்க “பாரு சைலன்ஸ்.. எத்தனையோ முறை சொல்லிட்டேன். உங்க டர்ன் வரும் அப்ப பேசுங்க” என்று பாருவை கண்டித்தார் விசே. அடுத்து எழுந்த திவ்யாவும் “பாரு பேசிட்டே இருந்தாங்க. நீதிபதியா இருந்த நான் ‘அமைதியா இருங்க.. இல்லைன்னா வெளியே போயிடுங்க’ன்னு சொன்னதற்கு முறைச்சாங்க. வெளிய வந்தப்புறம் ‘வேற மாதிரி ஆயிடும்ன்னு’ சொன்னாங்க” என்றார்.