மற்ற இரு அணிகளும் பாயின்ட் பெற்று ஸ்கோர் போாட்டில் இடம் பெற்றதால் ‘ஆடினே இருப்பேன்’ அணிக்கு நெருக்கடி. அடுத்ததில் அவர்கள் எப்படியாவது வெற்றி பெற்றாக வேண்டும்.
எஃப்ஜேவும் விக்ரமும் மற்ற அணியினரை நோண்டி கவனத்தைக் கலைக்க முயன்றார்கள். இதனால் திவ்யா, சான்ட்ராவிற்கு கோபம் வந்தது. “டாஸ்க்கை வெறுமனே செஞ்சா என்ன சுவாரசியம் இருக்கு?” என்று நியாயம் கற்பித்தார் விக்ரம். இவர்களைப் பார்த்து கனியும் பிளான் செய்தார்.
ஒருவழியாக பேச ஆரம்பித்த சான்ட்ரா – திவ்யா
ஒரே அணியில் இருந்ததால் சான்ட்ராவும் திவ்யாவும் ஒருவழியாக பேச ஆரம்பித்தார்கள். எதிர் அணியினர் செய்யும் கவனக்கலைப்பு குறித்து பொதுவாக புகார் செய்து பேசினார்கள். “எனக்கு தல போட்டி கூட வேண்டாம். ஃபேமிலி டாஸ்க்கிற்காக ஜெயிக்கணும்” என்றார், பிரஜினின் சட்டையை அணிந்திருந்த சான்ரா. (யப்பா.. முடியல!)
“என்ன வினோத்.. கிச்சன் ஏரியா சுத்தமா இல்ல. பாத்திரங்கள் கழுவப்படல. பார்க்கக்கூடாதா?” என்று வீட்டு ‘தல’யிடம் சுட்டிக் காட்டினார் பிக் பாஸ். “டாஸ்க் எப்ப ஆரம்பிக்கும்ன்னு அந்த டென்ஷன்ல இருந்துட்டோம்” என்று சமாளித்த வினோத், பாருவை கூப்பிட “ம்க்கும்.. மொதல்ல நாங்கதான் கண்ல படுவோமோ.. பாத்திரங்களை சுத்தம் செய்யச் சொல்லுங்க” என்று மறுத்தார். அதானே.. பாருவாவது.. வேலை செய்தாவது..
பாத்திரம் என்று பிக் பாஸ் சொன்னதை, பாத்ரூம் என்று தவறாக வினோத் புரிந்து கொள்ள “ஏய்.. எங்க பக்கம் வந்தே. டென்ஷன் ஆயிடுவன். .நாங்கள்லாம் ஒழுங்கா வேலை பண்ணியிருக்கோம்” என்று எகிறினார் கம்மு.