டான்ஸ் டாஸ்க்கில் ‘யம்மாடி ஆத்தாடி’ அணி வெற்றி பெற்றிருக்கிறது. அந்த அணியில் எவருடைய குடும்பத்தினர் 24 மணி நேரத்திற்கு வீட்டில் தங்க வாய்ப்பு கிடைக்கும்? அடம் பிடித்து பாரு வாங்கிவிடுவாரா?
‘என் குழந்தைகளைப் பத்தி பாடாதீங்க’ என்று கனி குறித்து சான்ட்ரா சொன்ன புகார் அபாண்டமானது. சான்ட்ராவின் மனச்சிக்கல் குறித்து அனுதாபம்தான் தோன்றுகிறது.
பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? – நாள் 74
‘தக்க தைய்யா.. தைய்யா..’ பாடலுடன் பொழுது விடிந்தது. மற்ற நேரங்களில் அசோகவனத்து சீதை மாதிரி அமர்ந்திருக்கும் சான்ட்ரா, வேக் அப் பாடலுக்கு மட்டும் ‘மன்மத ராசா’ பாடலின் ஸ்பீடில் புன்னகையுடன் ஆடுகிறார்.
எபிசோடை அழுகையுடன் ஆரம்பிப்பது சான்ட்ராவின் வழக்கம். ஆனால் இன்று அது பாருவின் டர்ன். காமிரா மறைவில் எ்னன செய்து தொலைத்தாரோ, தெரியவில்லை. “அய்யோ.. மம்மி வருவாங்களே.. என்ன பண்ணப் போறேன்.. பயமாயிருக்கு” என்றெல்லாம் பாரு கண் கசிய “நான் இருக்கேன் பேபி. என்ன நடந்தாலும்கூட நிக்கறேன். பிராமிஸ்” என்று வாக்கு கொடுத்துக்கொண்டிருந்தார் கம்மு.
இத்தனை காமிராக்களுக்கு முன்னால் ரொமான்ஸ் செய்தால் அது என்ன மாதிரியான எதிர்வினைகளை ஏற்படுத்தும் என்பது மீடியாவில் ஊறிய பாருவிற்கு தெரியாதா? அதுதானே அவரது சர்வைவல் ஸ்ட்ராட்டஜிகளுள் ஒன்றாக இருந்தது? பிறகு ஏன் இத்தனை அழுகை?
‘இதையெல்லாம் உங்க அம்மா பார்த்தா என்ன நினைப்பாங்க?’ என்று ஆரம்பத்திலேயே அட்வைஸ் செய்தார் திவ்யா. ஆனால் அவர் மீதே ‘நீ எப்படி எங்க வீட்டைப் பத்தி பேசலாம்?” என்று பாய்ந்தவரும் இதே பாருதான். இப்போது அதைக் குறித்து அச்சப்பட்டு அழுகிறார். விதி வலியது.
பாரு – கம்முவின் உணர்ச்சிகரமான டிராமா ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்க, நாய் துரத்துவது மாதிரி ஜாக்கிங் செய்து கொண்டிருந்தார் அமித்.