முந்தைய சீசன்களில் விருந்தினர்கள் வருகை மகிழ்ச்சிகரமான சந்திப்பாக இருக்கும். சண்டை நடந்தால் கூட அது இயல்பாக நிகழும்.
ஆனால் இந்த முறை உள்ளே அனுப்பும் போதே ‘நீங்க பயங்கரமா கொளுத்திப் போடணும்’ என்று சொல்லி அனுப்பியிருப்பார்கள் போல. வருகிறவர்கள் டெரரான பட்டாசாக கொளுத்துகிறார்கள். நிறைய அகங்கார உரசல் நடக்கிறது.
பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? – நாள் 93
‘காசு பணம் துட்டு மணி’ என்கிற பாடலுடன் பொழுது விடிந்தது. ‘நல்லவாயன் சம்பாதிச்சத நாரவாயன் தின்னுறான்’ என்கிற வரி வரும் போது, காமிரா சான்ட்ராவை காட்டியது தற்செயலாகத்தான் இருக்க வேண்டும்.
என்ன இருந்தாலும் வியானா கெஸ்ட். வீட்டில் உள்ளவர்கள்தான் பணிகளை பொறுப்பேற்று செய்ய வேண்டும். ‘தல’ என்று யாரும் இல்லாத காரணத்தால் (அப்படியே இருந்துட்டாலும்…!) பணிகள் சுணங்கிக் கிடக்கின்றன.
“பாத்திரங்கள்லாம் கழுவாம இருக்கு. நான் சமைக்கறேன்.. யாராவது அதை செய்ய வாங்க’ என்று வியானா பொதுவாக சொல்ல “நீ போய் பாத்திரம் கழுவு. நாங்க சமையல் டீம்ல இருக்கோம்” என்று சான்ட்ரா அலட்சியமாக சொல்ல, வியானாவிற்கு கோபம் வந்தது. “உங்க டோன் நல்லால்ல’ என்று சொல்லி விட்டு உள்ளே வந்து திவ்யாவுடன் புறணி பேசத் துவங்கினார்.