“நாங்களே அங்க க்ளீன் பண்ணித் தரோம்” என்று சொன்னவுடன் அரைமனதாக கிளம்பினார். ஆனால் விக்ரம் வந்து காரியத்தைக் கெடுத்தார். “இது உன் இடம்தானே.. இங்கதான் தூங்கணும். மதுரைக்காரன் யாருக்கும் பயப்படாதவன்” என்றெல்லாம் விக்ரம் ஜாலியாக ஏற்றி விட ‘அதுதான் சாக்கு’ என்று அங்கேயே படுத்து விட்டார். திவாகரின் குறட்டைக்கு பயந்துதான் அவரை மூலைக்கு மூலை துரத்துகிறார்கள் போல.
விக்ரம் வந்து காரியத்தைக் கெடுத்ததால் திவ்யா அப்செட். “நான் என்னங்க பண்ணேன். ஒரு வார்த்தைததான் சொன்னேன். மனுஷன் டக்குன்னு படுத்துட்டாரு” என்று சமாளித்தார் விக்ரம்.
பெண்கள் திட்டும் வரை இளித்துக் கொண்டிருந்த திவாகருக்கு, பிரவீன்ராஜ் சொன்னவுடன் கோபம் வந்து விட்டது. இந்தச் சண்டை அப்படியே திவ்யாவிற்கும் திவாகருக்குமாக மாறியது. “இந்த வீட்டுக்கு நான்தான் முதல்ல வந்தேன். நான்தான் viral contestant.. எனக்கே இங்க இடம் இல்லையா. நீ வைல்டு கார்டு என்ட்ரிதான்” என்றெல்லாம் எகிற ஆரம்பித்தார் திவாகர். (விட்டால் பிக் பாஸிற்கு மூத்த பிள்ளையே நான்தான். இந்த வீடு எனக்குத்தான் சொந்தம் என்று சொல்வார் போலிருக்கிறது) .
“கட்டிப்பிடிக்கட்டுமா.. கல்யாணம் பண்ணிக்கட்டுமான்னு நீ கண்டபடி கேட்பே.. அதையெல்லாம் நாங்க பொறுத்துக்கலையா?” என்று திவ்யா மல்லுக்கட்ட “நீயும்தான் என்னை மரியாதையில்லாம பேசினே” என்று சண்டையை தொடர்ந்தார் திவாகர்.
பேருந்து, ரயில் பயணங்களில் பெண்களிடம் ரகசியமாக சில்மிஷம் செய்பவர்கள், அம்பலமானவுடன் ‘பப்ளிக் டிரான்ஸ்போர்ட்ல அப்படித்தான் இருக்கும். நான் என்ன வேணுமின்னா இடிச்சேன்.. அப்படின்னா நீ கார்ல வரணும்” என்று எகிற ஆரம்பித்து விடுவார்கள். திவாகரின் பாணியும் இப்படித்தான் இருக்கிறது. எந்தப் பெண்களிடம் இளித்து இளித்து வழிகிறாரோ, அவர்களிடமே உக்கிரமாக சண்டை போடுவதையும் செய்கிறார்.
இறுதியில் திவ்யா சொன்னதுதான் பாயிண்ட். “நான்தான் அவருக்கு ஸ்பேஸ் கொடுத்துட்டேன்.. ஆரம்பத்துலயே நிறுத்தியிருக்கணும்”.