மகாராஷ்டிராவில் வரும் ஜனவரி 15-ம் தேதி மும்பை உட்பட மகாராஷ்டிரா முழுவதும் உள்ள 29 மாநகராட்சிகளுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. மாநகராட்சிகளின் பதவிக்காலம் முடிந்து 3 ஆண்டுகள் ஆன நிலையில் தற்போது நடக்கும் இத்தேர்தலில் வெற்றி பெற ஆளும் பா.ஜ.க கூட்டணி தீவிரம் காட்டி வருகிறது.
மும்பை, புனே போன்ற மாநகராட்சிகளில் அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி இல்லை என்று பா.ஜ.க தெரிவித்துவிட்டது. புனேயில் அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் நட்பு ரீதியிலான போட்டி இருக்கும் என்று பா.ஜ.க தெரிவித்துள்ளது.
ஆனால் மும்பையில் முன்னாள் அமைச்சர் நவாப் மாலிக் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டால் தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைக்கமாட்டோம் என்று பா.ஜ.க தெரிவித்துவிட்டது. நவாப் மாலிக் மும்பை தொடர் குண்டு வெடிப்பு குற்றவாளி தாவூத் இப்ராகிமுடன் தொடர்பு வைத்திருக்கிறார் என்று பா.ஜ.க குற்றம் சாட்டி வருகிறது. அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியும் நவாப் மாலிக்கை பிரசாரத்தில் இருந்து நீக்க முடியாது என்று தெரிவித்துவிட்டது.

இதனால் பா.ஜ.கவும், சிவசேனா(ஷிண்டே)வும் வார்டு பங்கீட்டை இறுதி செய்வதற்கான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளன. பா.ஜ.க தேர்தல் பொறுப்பாளர்கள் ஆசிஷ் ஷெலார், அமித் சாத்தம், அதுல் பட்கல்கர், பிரவின் தாரேகர் ஆகியோர் சிவசேனா தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையில் மொத்தமுள்ள 227 வார்டுகளில் 150 வார்டுகளில் பேச்சுவார்த்தை முடிந்துள்ளது. சிவசேனா இரண்டாக உடைந்த பிறகு 21 கவுன்சிலர்கள் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனாவில் சேர்ந்துள்ளனர். இப்பேச்சுவார்த்தையில் முதல் கட்டமாக பா.ஜ.க 102 வார்டிலும், சிவசேனா 55 வார்டிலும் போட்டியிட ஒருமித்த கருத்து எட்டப்பட்டுள்ளது.
எஞ்சிய வார்டுகளுக்கு தீர்வு காண தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்துவோம் என்று சிவசேனா தலைவர்கள் தெரிவித்துள்ளனர். வரும் 21ம் தேதிக்குள் அனைத்து வார்டுகளிலும் முடிவு எட்டப்பட்டு 22ம் தேதி முதல் வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்படும் என்றும் சிவசேனா தலைவர்கள் தெரிவித்தனர்.
இது குறித்து மும்பை பா.ஜ.க தலைவர் அமீத் சாத்தம் கூறுகையில்,”‘களநிலவரம் மற்றும் வெற்றிக்கான வாய்ப்புகளின் அடிப்படையில் வார்டுகள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. இரண்டு நாட்களில் இப்பேச்சுவார்த்தை இறுதி செய்யப்படும். அப்பட்டியலை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் துணை முதல்வர் ஷிண்டே ஆகியோர் இறுதி செய்வார்கள். 23 முதல் 25ம் தேதிக்குள் வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்படும்”என்றார்.