சென்னை புத்தகக் காட்சியில் பல புத்தகங்களின் வெளியீட்டு நிகழ்வுகளும் அரங்கேறி வருகின்றன. குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை என அனைத்து தரப்பினருக்குமான புத்தகங்கள் இங்கே கிடைக்கின்றன.
அதன் ஒரு பகுதியாக விழிச்சவால் மாற்றுத்திறனாளிகளுக்கும், பிரெய்லி வடிவிலான தொடுகளில் கதை சொல்லும் புத்தகங்கள் சிறார் எழுத்தாளர் விழிஞ்சன் அவர்களின் பென்சில்களின் அட்டகாசம், கடல்ல்ல்ல், சகி வளர்த்த ஒகி ஆகியவை வெளியிடப்பட்டுள்ளன.
இதுகுறித்து எழுத்தாளர் எழுத்தாளர் விழிஞன் அவர்கள் நம்மிடம் பேசுகையில், “சிறார்களுக்கான கிட்டத்தட்ட 70 புத்தகங்களை இதுவரையில் வெளியிட்டு இருக்கிறேன். 49-வது சென்னை புத்தகக் காட்சியில் இது ஒரு சிறப்பான தருணம்.
விழி ஒளி அமைப்பின் மூலமாக எனது மூன்று புத்தகங்கள் பென்சில்களின் அட்டகாசம், கடல்ல்ல்ல், சகி வளர்த்த ஒகி தமிழ் பிரைலி முறையில் வெளியிடுகிறோம். எல்லோருக்குமான உலகத்தை நாம் ஏற்படுத்தி விட்டோமா என்றால் அது கிடையாது. இன்று பெரும்பாலானவர்கள் கதையை ஆடியோ வடிவில் கேட்க ஆரம்பித்துவிட்டனர்.
மின்னணு வடிவில் அனைத்தும் தற்போது உருபெற்றுள்ளது. வாசிப்பு என்பது குறைந்து கொண்டு வருகிறது. பார்வை திறன் குறைபாடு உடைய மாற்றுத்திறனாளிகளும் நம்மைப் போன்று கதைகளை படித்து மகிழ, தொட்டு உணரக்கூடிய பிரெய்லி வடிவில் படிக்க வேண்டும் என்பதன் நோக்கில் சிறு தொடக்கத்தை ஆரம்பித்து வைத்துள்ளோம்.
முதல் புத்தகத்தை நான் வெளியிட்ட மகிழ்ச்சியை விட இப்போது பிரைலி வடிவில் விழிச்சவால் உடையவர்களுக்காக புத்தகம் வெளியிட்டுள்ளது மிகுந்த மகிழ்ச்சியை கொடுக்கிறது. 20 ஆண்டுகளாக எழுதுகிறேன். முதல்முறையாக இதை பிரைலி வடிவில் மாற்றி அதை விழிச்சவால் மாற்றுத்திறனாளிகள் படிக்கும்போது மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.