சென்னை: சென்னை அண்ணாசாலையில் கார் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கார் ஓட்டுநர் மாரியப்பன் மற்றும் உள்ளே இருந்த பயணிகள் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர்
சென்னை சைதாப்பேட்டையில் இருந்து எழும்பூர் நோக்கி அண்ணா சாலையில் கார் ஒன்று இன்று (ஆக.10) காலை வந்து கொண்டிருந்தது. நந்தனம் சிக்னல் அருகில் அந்த கார் வந்தபோது, காரின் முன்பகுதியில் இருந்து திடீரென கரும்புகை வெளியேறியது. இதைக்கண்ட கார் ஓட்டுநர், காரை சாலையின் ஓரத்தில் நிறுத்தி, என்னவென்று பார்ப்பதற்குள் காரின் முன்பகுதி மளமளவென தீப்பிடித்து கொளுந்துவிட்டு எரிந்தது.
இதைப் பார்த்து, அண்ணாசாலையில் சென்று கொண்டிருந்த வாகன ஓட்டிகள், தங்களது வாகனங்களை அப்படியே நிறுத்திவிட்டு, அருகில் உள்ள கடைகளில் இருந்து, தீயணைப்பு உபகரணங்கள் மூலம் காரில் பற்றி எரிந்த தீயை அணைக்க முயன்றனர். அதற்குள் கார் முழுவதும் பற்றி எரிந்தது. இது குறித்து தகவல் அறிந்து அங்கு வந்த சைதாப்பேட்டை தீயணைப்பு அதிகாரி ராமசந்திரன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள், காரில் கொளுந்துவிட்டு எரிந்த தீயை முழுவதுமாக அனைத்தனர்.
இந்த தீ விபத்தில் கார் ஓட்டுநர் மாரியப்பன் மற்றும் உள்ளே இருந்த பயணிகள் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர். இந்த விபத்து குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அண்ணாசாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.