புனே:
மகாராஷ்டிர மாநிலம் தானே மாவட்டத்தில் உள்ள பத்லாபூரில் பள்ளியில் 4ம் வகுப்பு படிக்கும் இரண்டு சிறுமிகளை பள்ளியின் உதவியாளர் அக்ஷய் ஷிண்டே கடந்த ஆகஸ்டு மாதம் 17-ம் தேதி தகாத இடங்களில் தொட்டு அத்துமீறியதாகக் கூறப்படுகிறது.
இச்சம்பவம் குறித்து இரு சிறுமிகளும் தங்கள் பெற்றோரிடம் தெரிவித்ததை அடுத்து, சிறுமிகளின் பெற்றோர்கள் பள்ளி நிர்வாகத்திடமும், பத்லாப்பூர் போலீஸ் நிலையத்திலும் புகார் அளித்தனர்.
ரெயில் நிலையத்தில் போராட்டம்
இந்தச் சம்பவத்தைக் கண்டித்து 17ம் தேதி பத்லாபூர் ரெயில் நிலையத்தில் மிகப்பெரிய முற்றுகைப் போராட்டத்தில் பொதுமக்கள் ஈடுபட்டனர்.
இதையடுத்து, மூன்று போலீஸ் அதிகாரிகளை பணி இடைநீக்கம் செய்த மகாராஷ்டிர அரசு, இந்த சம்பவம் குறித்து விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்து உத்தரவிட்டது. பள்ளிச் சிறுமிகளிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாகக் கூறப்படும் பள்ளி உதவியாளர் அக்ஷய் ஷிண்டே கைது செய்யப்பட்டார்.
என்கவுண்டரில் சுட்டுக்கொலை
இந்த நிலையில் குற்றவாளி அக்ஷய் ஷிண்டேவுக்கும், போலீசாருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் இன்று மாலை 5.30 மணியளவில் (23ந்தேதி) என்கவுண்டரில் அக்ஷய் ஷிண்டே சுட்டுக்கொல்லப்பட்டு உள்ளார். இந்த என்கவுண்டரின் போது போலீஸ்காரரின் துப்பாக்கியை பறித்து அக்ஷய் ஷிண்டே சுட்டபோது அந்த போலீஸ்காரருக்கும் காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து போலீசார் தற்காப்புக்காக சுட்ட போது அக்ஷய் ஷிண்டே பலியாகி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதுகுறித்து போலீசார் கூறியதாவது: தலோஜா சிறையில் இருந்த அக்ஷய் ஷிண்டேவை மற்றொரு வழக்கில் போலீசார் கைது செய்து அழைத்துக்கொண்டு வேனில் ஏற்றி உள்ளனர். அப்போது போலீஸ் வேனில் இருந்த போலீஸ்காரர் ஒருவரது துப்பாக்கியை பறித்து அக்ஷய் ஷிண்டே போலீசாரை நோக்கி 2 முறை சுட்டு தப்பி செல்ல முயன்றார்.
இந்த தாக்குதலில் ஒரு போலீஸ்காரர் காயம் அடைந்தார். இதையடுத்து பாதுகாப்புக்கு இருந்த போலீசார் பதில் தாக்குதலாக துப்பாக்கியால் சுட்டனர். அக்ஷய் ஷிண்டே மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் துப்பாக்கி குண்டு பாய்ந்ததில் காயம் அடைந்த அக்ஷய் ஷிண்டே அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு இறந்து போனார்.இவ்வாறு போலீசார் தெரிவித்து உள்ளனர். இந்த என்கவுண்டர் குறித்து அதிகாரிகள் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.