ஈரோடு: காவிரியில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் 50-க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. முகாம்களில் மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
மேட்டூர் அணையில் இருந்து காவிரி ஆற்றில் விநாடிக்கு 1.70 லட்சம் கன அடிக்கு மேல் உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால், காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் காவிரிக் கரையோரம் உள்ள 30 கிராமங்களில், 18 கிராமங்கள் காவிரி வெள்ளத்தால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக ஈரோடு மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
குறிப்பாக, காவிரிக் கரையோரம் உள்ள 41 இடங்கள் வெள்ள பாதிப்பு அபாயம் உள்ள நிலையில், அப்பகுதிகளில் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு, பொதுமக்களை பாதுகாக்க 77 முகாம்கள் தயார் நிலையில் உள்ளன. இந்நிலையில், காவிரியில் உபரி நீர் திறப்பு காரணமாக, பவானி புதிய பேருந்து நிலையம் பகுதியில், காவிரிக் கரையோரம் உள்ள குடியிருப்புகளில் வெள்ளம் புகுந்தது. இதனால், 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இதேபோல், கொடுமுடியில் காவிரி கரையோரம் உள்ள இழுப்புத் தோப்பு, வடக்குத் தெரு ஆகிய பகுதிகளில் உள்ள 50-க்கும் மேற்பட்ட வீடுகளையும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. வீடுகளில் இருந்தவர்களை காலி செய்து, தற்காலிக முகாம்களில் தங்க வைப்பதற்கு வருவாய்துறை மற்றும் காவல் துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
வெள்ள அபாயம் நீடித்து வருவதால் காவிரி ஆற்றில் இறங்கவும், குளிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு காரணமாக, ஈரோடு நகருக்கு குடிநீர் வழங்கும் நீரேற்று நிலையங்களின் செயல்பாடும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.
கொடிவேரியில் தடை: ஆடிப்பெருக்கை கொண்டாடும் வகையில், கோபியை அடுத்த கொடிவேரி தடுப்பணைக்கு அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். பவானிசாகர் அணையில் இருந்து பாசனத்திற்கு நீர் திறக்கப்பட்டுள்ளதால், கொடிவேரி தடுப்பணையில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதன் காரணமாக, நாளை முதல் 4-ம் தேதி வரை கொடிவேரி தடுப்பணையில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக நீர்வளத்துறை அறிவித்துள்ளது.