காஞ்சீபுரம்:
காஞ்சீபுரம் மாவட்டம் பரந்தூரில் சென்னையின் 2&வது விமான நிலையம் அமைய உள்ளது. இதற்காக சுற்றி உள்ள கிராமங்களில் நிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ளது. இதனால் பரந்தூர், ஏகனாபுரம் உள்ளிட்ட கிராமமக்கள் தொடர்ந்து எதிர்ப்புதெரிவித்து வருகிறார்கள்.
கிராம மக்களின் இருப்பிடமும், வாழ்வாதாரமாக இருக்கும் விளை நிலங்களும் பறிபோய்விடும் எனக்கூறி விமான நிலையம் அமைக்க எதிா்ப்புத் தெரிவித்து நாள்தோறும் இரவு நேரங்களில் கிராமத்தில் உள்ள திடலில் கிராம மக்கள் ஒன்று கூடி அமா்ந்து தொடா்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனா்.
புதிய விமான நிலையம் அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வரும் நிலையில், அதற்காக கையகப்படுத்தப்பட்ட நிலங்களில் வசித்து வந்தவா்களை மாற்றுயிடத்தில் மீள்குடியேற்ற தமிழ்நாடு தொழில் வளா்ச்சிக் நிறுவனம் (டிட்கோ) இடங்களை முன்னதாக தோ்ந்தெடுத்து அறிவித்து இருந்தது.
இந்த நிலையில், பரந்தூரில் புதிதாக விமான நிலையம் அமையவுள்ள பகுதியில் சுற்றுச்சூழல் ஆய்வு செய்வதற்கான அனுமதியை மத்திய அரசு வழங்கியுள்ளது.
தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் நிறுவனத்தின் விண்ணப்பத்தை பரிசீலனை செய்து, மேலாண்மை திட்டம் தயார் செய்து, ஆய்வு செய்வதற்கான எல்லைகளை மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் வழங்கியுள்ளது.