Chennai Book Fair: `இந்தப் புரிதலை எனக்குக் கொடுத்தது வாசிப்புதான்..!’ – ஆர்.ஜே.ஆனந்தி

Spread the love

வேலை நால் களிலும் வாசகர் கூட்டம் சென்னை 49ஆவது புத்தகக் கண்காட்சியை நோக்கி வந்து கொண்டிருக்கிறது. புத்தக வாசிப்பின் மீது பற்று கொண்ட பலரும் தொடர்ந்து புத்தகக் கண்காட்சிக்கு வருகை தருவதை காண முடிகிறது. அவ்வகையில் புத்தகத் திருவிழாவிற்கு வந்திருந்த யூடியூபர் மற்றும் புத்தக பரிந்துரையாளர் ஆர்.ஜே.ஆனந்தியைச் சந்தித்து, அவரின் வாசிப்பு அனுபவம் குறித்து கேட்டறிந்தோம்.

“என்னைப் பொறுத்தவரையில் வாசிப்பு என்பது மிகவும் தனிப்பட்ட அனுபவம். மனித இனத்தின் பரிணாம வளர்ச்சியில் மொழி முக்கியமான பங்காற்றியது. அதனை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றது அச்சு தொழில்நுட்பமே. அறிவையும் கருத்துகளையும் மற்றவர்களிடம் எளிதாகக் கடத்துவதற்கு அது வழிவகுத்தது. புதிதான ஓர் இடத்தில் கழிவறை எங்கு இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ளக்கூட நாம் முதலில் தேடுவது அறிவிப்பு பலகையைத்தான். படிக்கத் தெரிந்திருப்பதில், வாசிப்பு பழக்கத்தைத் தாண்டியும் இப்படியான பல நன்மைகள் இருக்கின்றன.

வாசிப்பு என்பது வெளி உலகை புரிந்துகொள்ள மட்டும் அல்ல; நம்மை நாமே புரிந்துகொள்ளும் ஒரு சுய பிரதிபலிப்பாகவே நான் அதை பார்க்கிறேன். புத்தகங்களைப் புனைவு, அபுனைவு என்று பிரிக்க வேண்டிய அவசியம் இல்லை. அபுனைவு புத்தகங்களைப் படிக்கும் போதும் என் கண்களில் கண்ணீர் வந்திருக்கிறது. பல கடினமான சூழல்களில், என் கஷ்டம் ஒரு கஷ்டமே இல்லை; இதைவிடவும் பலர் அதிக துன்பங்களை அனுபவிக்கிறார்கள் என்ற புரிதலை வாசிப்பு எனக்கு கொடுத்திருக்கிறது.

ஒவ்வொரு வாசகருக்கும் புத்தகங்கள் வேறு வேறு விஷயங்களை கற்றுக் கொடுக்கும். எனக்கு வாசிப்பு கற்றுக் கொடுத்தது இதுதான். வாசிப்பு பல உணர்வுகளை உருவாக்குகிறது. அதில் ஒன்று, உயிர்வாழ்வதே ஒரு சந்தோஷம் என்ற உணர்வு. இன்னொன்று, உலகத்தில் நடக்கும் அநியாயங்களை பார்த்து சும்மா இருப்பதற்காக நமக்குள் உருவாகும் குற்ற உணர்வு. எங்கோ ஓர் இடத்தில் கோபம், இன்னோர் இடத்தில் அழுகை, இன்னோர் இடத்தில் உலகின் எங்கேயோ இருக்கும் யாருக்காகவோ இங்கே நம்மை புலம்பி தவிக்க வைக்கும் நிலை ஆகியவற்றை புத்தகம் எனக்கு கொடுத்திருக்கிறது.

நான் சமூக வலைதளங்களை பயன்படுத்தியிருக்கிறேன், திரைப்படங்களையும் பார்த்திருக்கிறேன். ‘அவையெல்லாம் சிந்தனையைத் தூண்டவில்லையா?’ என்று கேட்கலாம். அங்கெல்லாம் நான் ஒரு பார்வையாளராக மட்டுமே இருந்தேன். ஆனால் புத்தக வாசிப்பு என்பது ஓர் உரையாடல் போன்றது. ஒவ்வொரு வரிக்கும் எனக்கு மாற்றுக் கருத்துகள் தோன்றலாம். அவற்றை ஒரு பென்சிலில் எழுதி வைப்பேன். அது அந்த எழுத்தாளரிடம் சென்று சேர்கிறதோ இல்லையோ தெரியாது. ஆனால் அங்கே ஓர் உரையாடல் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது” என்றார்.

புத்தகங்களுக்கு என்றே அவர் பிரத்யேகமாக நடத்தி வரும் ‘புக் ஷோ’ யூடியூப் சேனல் குறித்து கேட்டபோது, “புக் ஷோ எனக்கு தனிப்பட்ட முறையில் கிடைத்த ஒரு வரம் என்றே கூறுவேன். கமென்ட்ஸ் குறைவு, வியூஸ் போகவில்லை என்று சொல்லி நிறுத்திவிடாதீர்கள் என்பார்கள். ஆனால் பார்வையாளர்களுக்கு எந்த அளவு பயனுள்ளதாக இருக்கிறதோ, அதே அளவு எனக்கும் அது பயனுள்ளதாகவே இருக்கிறது. நான் இதை விரும்பி செய்கிறேன்.

நான் வாசிப்பதாலும், எனக்குள் கருத்துகள் உருவாகுவதாலும், புத்தகம் சார்ந்து நான் சந்திக்கும் மக்களிடம் இருந்து புதிய பார்வைகள், கருத்து வேறுபாடுகள் கிடைக்கின்றன. அதற்காகவும் நான் புக் ஷோவை தொடர்ந்து செய்கிறேன். எனது சேனலில் தமிழ் புத்தகங்களுக்கான பார்வையாளர்கள் அதிகம். சுய உதவி புத்தகங்கள் குறித்த காணொளிகளுக்கும் நல்ல வரவேற்பு இருக்கிறது. பவா செல்லதுரை, ஜெயமோகன், எஸ். ரா போன்றவர்கள் என்னைவிட சிறந்த கதைசொல்லிகள். எனவே நான் கதை சொல்வதைவிட தகவல்களை கடத்துவதையே சிறப்பாக செய்ய முயல்கிறேன்.

ஆங்கில புத்தகங்களும் இப்போது தமிழில் மொழிபெயர்த்து வெளியாகி வருகின்றன. அதனால் வாசிப்புக்கு மொழி என்பது இனி ஒரு தடையாக இல்லை. கவனச்சிதறல் அதிகமாகி விட்டது உண்மைதான். ஆனால் வாசிக்க வேண்டும் என்ற எண்ணம் மக்களிடத்தில் இன்னும் இருக்கிறது. அதற்கான சாட்சி தான் இந்த புத்தகக் கண்காட்சி. கார் பார்க்கிங் தொடங்கி அனைத்தும் நிரம்பியிருக்கிறது. மக்கள் வாசிப்பை இன்னும் விரும்புகிறார்கள்” என்றார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *