
பராசக்தி தடை – கடற்கரய் மத்தவிலாச அங்கதம்
பராசக்தி என்றவுடன் இயல்பாகவே ஒரு பரபரப்பும் பரவசமும் தொற்றிக்கொள்ளும். அந்தப் பரபரப்பை இன்னும் கூடுதலாக்க ‘பராசக்தி தடை’ என்ற புத்தகத்தை நமக்கு கொடுத்திருக்கிறார் எழுத்தாளரும் பத்திரிக்கையாளருமான கடற்கரய் மத்தவிலாச அங்கதம். இந்த நூலில் இதுவரை பொதுவெளியில் வராத அரசாங்க ரகசிய ஆவணங்கள், கேலிச்சித்திரங்கள், கடிதங்கள், விளம்பரங்கள் என “பராசக்தி’ திரைப்படம் குறித்த முக்கிய ஆவணங்கள் இணைக்கப்பட்டிருக்கின்றன. இது இன்னும் கூடுதல் சிறப்பைக் கொடுக்கிறது. 1,120 பக்கங்களில் ஆய்வு நூலாக வெளிவந்திருக்கும் ‘பராசக்தி தடை’ தவிர்க்கமுடியாத ஆவணப்புத்தகம்.
விலை ரூபாய் 1450
பதிகம் பதிப்பகம்
ஸ்டால் எண் : 217

ஜல்லிக்கட்டு கிளர்ச்சி எனும் சூழ்ச்சி – டி. தர்மராஜ்
இந்தப்புத்தகத்தின் தலைப்பே நம்மை கவனம் ஈர்க்கக் கூடியதாக இருக்கிறது. ஏனென்றால் இருபத்தொன்றாம் நூற்றாண்டின் தமிழ்ச்சூழலில் ஜல்லிக்கட்டுப்போராட்டம் முக்கியமான மக்கள் போராட்டமாக அறியப்படுகிறது. இந்தப் புத்தகம் ஜல்லிக்கட்டுப் போராட்டம் பற்றிய பொதுப்புரிதலை தகர்த்தெறிந்து போராட்டம் பற்றிய கற்பிதங்களை உடைத்து நமக்குள் பல கேள்விகளை எழுப்புகிறது. சமூக பண்பாட்டு அரசியல் சார்ந்த முக்கியமான ஆய்வு நூலாகச் சிறந்து நிற்கிறது இந்த ‘ஜல்லிக்கட்டு கிளர்ச்சி எனும் சூழ்ச்சி’
விலை ரூபாய் 500
சால்ட் பதிப்பகம்
ஸ்டால் எண் : 422 & 423
யானும் ஓர் சித்தனடா – என். டி. ராஜ்குமார்
தன் வாழ்வுச்சூழலை மையமாக்கி வாழ்வுநிலைக்கூறுகளில் பிணைந்திருக்கும் தொன்மங்களையும், மாந்தீரிகத் தன்மையையும் துடியெடுத்து கட்டமைக்கப்பட்டிருக்கிற அதிகாரத்தையும், இலக்கிய அழகியலையும் உடைத்து சலங்கை ஒலியைப் போல ஒவ்வொரு திக்கையும் தன் பக்கம் திசை திருப்பியவர். கவிதையை நிகழ்த்தியலாக சாமிக்கொண்டாடியாக குறிச்சொல்லும் என்.டி. ஆரின் ஒவ்வொரு கவிதைச்சொல்லும் நமக்கான கவிதை உலகுக்கான கொடுப்பினை. இவரின் முழு கவிதைத்தொகுப்பு ‘யானும் ஓர் சித்தனடா’ இப்போது புத்தகக்கண்காட்சியில் காணக்கிடக்கிறது.
விலை ரூபாய் 1000
நீலம் பதிப்பகம்
ஸ்டால் எண் – F 10

காட்டுப்பேச்சிகளைக் காதலித்தவன் – மாரிசெல்வராஜ்
இன்றையச் சூழலில் தவிர்க்க முடியாத படைப்பாளியாய் இயங்கிவரும் இயக்குநர் மாரிச்செல்வராஜின் கலை வடிவங்கள் யாவும் தனித்துவமானவை. இவருடைய எழுத்துக்கள், தான் வாழ்ந்த வாழ்வை, மனிதர்களை அசலாகப் படம் பிடித்துக்காட்டுபவை. சாதி, வறுமை, பசி, என மனிதர்களின் அன்றாடத்தின் வழி நம் நெஞ்சை அச்சுப்பிசகாமல் கிழித்தெறியக்கூடியவை. அவ்வாறு ‘காட்டுப்பேச்சிகளைக் காதலித்தவன்’ சிறுகதைத் தொகுப்பு முழுமூச்சில் வாசிக்ககூடியதாகவும் அச்சுறுத்தக்கூடியதாகவும் இருக்கும் என்பதில் எவ்வித ஐயமில்லை.’
விலை ரூபாய் 180
வெளியீடு – கொம்பு பதிப்பகம்
ஸ்டால் எண் – 245 & F 10, 422, 423

இந்தியச் சிறுகதைகள் ஓர் அறிமுகம் – லஷ்மி சரவணக்குமார்
தமிழ் இலக்கியச் சூழலில் புனைவொழுத்துக்களின் வழி அறியப்பட்ட எழுத்தாளரான லஷ்மி சரவணக்குமாரின் கட்டுரை நூல், ‘இந்தியச் சிறுகதைகள் ஓர் அறிமுகம்.’ இந்தியாவில் எழுத்தப்பட்ட முக்கியமான சிறுகதைகளை முன்வைத்து எழுதியிருக்கிறார். வெவ்வேறு கலாச்சார அடையாளங்களைக் கொண்ட புனைவுகளை வாசிக்கும்போது அம்மக்களின் வாழ்வு குறித்த தேடலும் ஆர்வமும் மிகும். அதையே இலக்கியம் நமக்கு வழங்குகிறது. அவ்வாறு பிராந்திய மொழிகளின் கதைகளை வாசிக்க வேண்டிய அவசியத்தை இந்நூல் நமக்கு வலியுறுத்துகிறது.
விலை ரூபாய் 200
ஸீரோ டிகிரி பதிப்பகம்
நம்பர் : F 19