பொதுவாக பேராசிரியர் அன்பழகன் என்றால் அவரின் மேடைப்பேச்சுகளைத்தான் பலரும் புகழ்வார்கள். ஆனால் அவர் அற்புதமான எழுத்தாளர். அவருடைய நூல்களை வாசிக்கும்போது அதை அறிந்துகொள்ள முடியும். எனவே அவரது நூல்களையும் பதிப்பித்திருக்கிறோம்.
கலைஞரின் படைப்புகள் இந்தத் தொகுப்பில் முக்கியமானவை. ‘சங்கத் தமிழ்’, ‘தொல்காப்பியப் பூங்கா’, ‘நெஞ்சுக்கு நீதி – 6 பாகங்கள்’ என கலைஞரின் படைப்புகள் பல இந்தத் தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. நெஞ்சுக்கு நீதி நூலின் முக்கியத்துவம் என்னவென்றால் 50 ஆண்டுகால வரலாற்றை ஒரு வரலாற்று ஆய்வாளனைப்போல அவர் பதிவு செய்துவைத்திருக்கிறார். அதைப் படித்தாலே தமிழகத்தின் 50 ஆண்டுகால வரலாற்றை ஒருவர் அறிந்துகொள்ள முடியும்.
இந்தத் தொகுப்பில் முக்கியமாக இடம் பிடித்திருப்பவை அறிஞர் அண்ணாவின் நூல்கள். அண்னாவின் சின்னச் சின்ன நூல்கள் அந்தக் காலத்தில் வெளியானபோது பெரும் வரவேற்பை பெற்றன. அண்ணாவின் ‘பணத்தோட்டம்’ பொருளாதார நூல்/ தமிழ்நாட்டின் பொருளாதாரத்துக்காக எழுதப்பட்ட நூல். ‘தீ பரவட்டும்’, ‘நீதிதேவன் மயக்கம்’, போன்றவை முக்கியமான சில நூல்கள். ‘வேலைக்காரி,’ ‘ஆரிய மாயை,’ ‘ஆரிய மாயை,’ ‘சிவாஜி கண்ட இந்து ராஜ்ஜியம்,’ ‘மாஜி கடவுள்கள்’ போன்ற நூல்கள் வெளிவந்த காலத்தில் லட்சக்கணக்கான இளைஞர்கள் மத்தியில தாக்கத்தை ஏற்படுத்தியவை.

ஏ.வி.பி. ஆசைத்தம்பி, சி.பி. சிற்றரசு, புலவர் கோவிந்தன் போன்றோரின் நூல்களும் முக்கியமானவை. அந்தக் காலத்திலேயே ரோமானிய, கிரேக்க, ஐரோப்பிய வரலாற்றை கொண்டு தமிழக வரலாற்றைப் பேசுவார்கள். நமக்கு ஒரு முன் உதாரணங்களாக அந்த நாடுகளையும் அங்கு நடந்த போராட்டங்களையும் பேசும் நூல்கள் இவர்களுடையன. சொல்லப்போனால் இதுதான் திராவிட இயக்க நூல்களின் முக்கியமான செயல்பாடு.
இங்கர்சால் என்ன செய்தார்… பிரெஞ்சு புரட்சியில் என்ன நடந்தது… எமிலி ஜோலா என்ன செய்தார்… இரண்டாம் உலகப்போர் எப்படிப்பட்டது என்பன குறித்து சாதாரண மக்களுக்கு கதைகளாகச் சொல்லும் நூல்கள் பெரும் விழிப்புணர்வை ஏற்படுத்தின. அப்படிப் பட்ட நூல்களை எல்லாம் தொகுத்து வெளியிட வேண்டியது நம் கடமை.