யோகிபாபு, வாணி போஜன், நிழல்கள் ரவி, சார்லி, கயல் சந்திரன், மைனா நந்தினி, குமரவேல், தீபா ஆகியோர் நடிப்பில் டிஸ்னி ஹாட்ஸ்டாரில் ஆறு பகுதிகளைக் கொண்ட இணையத் தொடராக வெளிவந்திருக்கிறது சட்னி சாம்பார். ‘மொழி’ ராதாமோகன் கதை – திரைக்கதை – இயக்கம்.
திரைப்படத்துக்கும் சின்னத்திரைத் தொடருக்கும் இடைப்பட்டதான, ஓ.டி.டி.யில் மட்டுமே வெளியாகும் வெப் தொடர்கள் நம்ம ஊரில் சிறப்பான தரத்துக்குப் போட்டிபோட்டுக்கொண்டுதானிருக்கின்றன. உள்ளபடியே திரைப்படங்களுக்கு மிகச் சிறந்த மாற்றான வெப் தொடர்களில் நிறையவே சாதிக்க முடியும்.
ஆங்கிலத்திலும் ஹிந்தியிலும் நல்ல வெப் தொடர்கள் வாய்க்கப் பெற்றாலும் (பெரும்பாலானவற்றைத் தமிழ் மொழிப் பதிவில் பார்க்க முடிகிறது) தமிழில் ஒருசிலவற்றைத் தவிர இன்னமும் பெரும்பாலும் திரைப்படமாகச் சுருக்க முடியாத அல்லது எடுக்க முடியாதவைதான் தொடர்களாக வெளியாகின்றன.
சட்னி சாம்பார் என்ற டைட்டிலைக் கேட்டதுமே இரண்டு ஏதோ ஹோட்டல்களுக்கு இடையிலான போட்டி போல என்றுதான் தோன்றுகிறது. அறிமுகக் காட்சிகளும்கூட அதேமாதிரிதான் இருக்கின்றன. ஆனால், அப்படி இல்லை.
கதை என்னவோ, பார்த்துப் பார்த்துச் சலித்துப்போன பழைய விஷயம்தான். எத்தனையோ அக்னி நட்சத்திரங்களைப் பார்த்திருக்கிறோம். ஒரு அப்பா, இரு மனைவிகள், அவர்கள் வாரிசுகள், அப்புறம் பிரச்சினைகள்.
ஊட்டியில் உணவகம் நடத்தி வரும் நிழல்கள் ரவி குடும்பத்துடன் வாழ்ந்து வருகின்றார். தான் இறக்கப்போகின்றேன் என தெரிந்ததும் தனது மகன் சந்திரனை அழைத்து, இளம் வயதில் தான் ஒரு பெண்ணுடன் சென்னையில் வாழ்ந்து வந்ததாகவும் அதன் பின்னர் சில காரணங்களால் அவரைப் பிரிய நேர்ந்தது. தற்போதுதான் அவருக்கு ஒரு மகன் இருப்பது எனக்கு தெரிந்தது. அந்த மகன் எனக்கு பிறந்தவன். அவனை அழைத்து வந்து எனது இறுதிச் சடங்குகளைச் செய்யவேண்டும் என ரகசியமாக கூறுகின்றார். இதனால் தனது அண்ணனைத் தேடி அதாவது யோகி பாபுவைத் தேடி சென்னைக்கு வந்து அவரை வழுக்கட்டாயமாக ஊட்டிக்கு கடத்தி வந்து தனது தந்தைக்கு இறுதிச் சடங்குகளைச் செய்கின்றார். சம்பந்தமே இல்லாத ஒருவர் வந்து இறுதிச் சடங்குகளைச் செய்வது குடும்பத்தில் பிரச்னையைக் கொண்டு வருகின்றது. இறுதியில் இந்த பிரச்னை எவ்வாறு தீர்ந்தது என்பது மீதிக்கதை.
காமெடி மற்றும் செண்டிமெண்ட் காட்சிகளால் ரசிகர்களை திருப்தி படுத்த முயற்சி எடுத்துள்ளார் இயக்குநர். ஆனால் செண்டிமெண்ட் சீன்கள் எடுபட்ட அளவுக்கு கூட காமெடி சீன்கள் பெரிதாக எடுபடவில்லை. பெரும்பான்மையான காமெடிகள் மிகவும் தட்டையாகவே (ஃப்லாட்டாகவே) உள்ளது. பல கதாபாத்திரங்களுக்கு இருக்கும் ஃப்ளாஷ் பேக் காட்சிகள் கொஞ்சம் போர் அடிக்க வைக்கின்றது. வெஃப் சீரிஸாகவே தன்னிடம் இருக்கும் கதையை எடுக்க ராதா மோகன் நினைத்தாரோ என்னவோ, பல காட்சிகளை கதையில் தாக்கத்தினை ஏற்படுத்தாது எனத் தெரிந்துமே சேர்த்துள்ளார். குடும்பத்துடன் அமர்ந்து கட்டாயம் ஒரு முறை பார்ப்பதற்கான கண்டெண்ட்டை கொடுக்கவும் முயற்சி செய்துள்ளார்.
Related