கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் பல பிற மொழித் திரைப்படங்கள் தமிழ் ரசிகர்களை கவர்ந்திருக்கின்றன. காமெடி, திரில்லர், ரொமான்ஸ் என இந்த ஆண்டு பிற மொழிப் படங்கள் பலவும் பக்கா ட்ரீட் தந்திருக்கின்றன. அப்படி தமிழ் ரசிகர்களிடையே இந்த ஆண்டு கவனம் பெற்ற மற்ற மொழிப் படங்கள் என்னென்ன என்பதைப் பார்ப்போம்.
ரேகசித்திரம்:
கடந்த ஜனவரி 9-ஆம் தேதி மலையாளத்தில் திரையரங்குகளில் வெளியான திரைப்படம் ‘ரேகசித்திரம்’. காவல்துறை அதிகாரியாக ஆசிப் அலி மற்றும் அனஸ்வரா ராஜன் ஆகியோர் தங்களது அபாரமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். மேலும், மெகா ஸ்டார் மம்முட்டியின் ஏ.ஐ கேமியோ படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்ததோடு, ரசிகர்களுக்கு ஒரு சிறந்த சஸ்பென்ஸ் திரில்லர் அனுபவத்தையும் கொடுத்தது. மலையாளத்தில் பெரும் வரவேற்பைப் பெற்ற இப்படம், அதைத் தொடர்ந்து தமிழ் மொழியில் டப்பிங் செய்யப்பட்டு கடந்த மார்ச் 7-ஆம் தேதி சோனி லிவ் தளத்தில் வெளியானது.

பொன்மேன்:
இந்த ஆண்டில் வெளியான ‘பொன்மேன்’ திரைப்படத்தில் பேசில் ஜோசப் கதையின் நாயகனாகத் தனது இயல்பான மற்றும் நகைச்சுவையான நடிப்பை வெளிப்படுத்தி படத்தின் வெற்றிக்கு வலு சேர்த்தார். அவருக்கு இணையாக லிஜோமோல் ஜோஸ் தனது நேர்த்தியான நடிப்பால் கதாபாத்திரத்திற்குப் ஆழம் சேர்த்தார். மலையாளத்தில் பெரிய வெற்றி பெற்ற இந்தப் படம், மார்ச் 14 ஆம் தேதி ஜியோ ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகி தமிழ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.
கோர்ட் vs நோபடி:
அறிமுக இயக்குனர் ராம் ஜெகதீசன் இயக்கத்தில், கடந்த மார்ச் மாதம் தெலுங்கில் இத்திரைப்படம் வெளியானது. நடிகர் நானி தயாரிப்பில் வெளியான இப்படத்திற்கு அனைத்துப் பக்கங்களிலிருந்தும் நல்லதொரு வரவேற்பு கிடைத்திருந்தது. திரையரங்கு வெற்றியைத் தொடர்ந்து, ஏப்ரல் 11-ஆம் தேதி இப்படம் தமிழ் மொழியில் டப் செய்யப்பட்டு நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியானது.

ஆலப்புழா ஜிம்கானா:
இயக்குநர் காலித் ரஹ்மான் இயக்கத்தில், கடந்த ஏப்ரல் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான ‘ஆலப்புழா ஜிம்கானா’ என்ற திரைப்படம் தமிழ் ரசிகர்களையும் கவர்ந்தது. விளையாட்டாகத் தொடங்கும் ஒரு பாக்ஸிங் போட்டி, எதிர்பாராத விதமாக அடுத்தடுத்து அரங்கேறும் சுவாரசியமான சம்பவங்களால் எப்படி திசைமாறுகிறது என்பதே இப்படத்தின் மையக்கரு ஆக அமைந்திருந்தது. படம் முழுவதும் நகைச்சுவை கலந்து கலகலப்பாகச் சொல்லப்பட்ட விதம் தமிழ் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது. ஜூன் 13 ஆம் தேதி சோனி லிவ் தளத்தில் வெளியானது.
சின்னர்ஸ்:
‘பிளாக் பாந்தர்’ திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு, இயக்குனர் ரயான் கூக்ளர் மற்றும் நடிகர் மைக்கேல் பி. ஜோர்டான் மீண்டும் இணைந்துள்ள ‘சின்னர்ஸ்’ திரைப்படம் மார்ச் 18-ஆம் தேதி உலகமெங்கும் வெளியானது. ஹாரர் த்ரில்லர் பாணியில் வந்த இப்படம், வெறும் பயத்தை மட்டும் தராமல் நுட்பமான அரசியலையும், வரலாற்றையும் பேசி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்தப் படம் தியேட்டர்களில் பார்த்த ரசிகர்களுக்கு ஒரு புதுவிதமான திரையனுபவத்தை வழங்கியுள்ளது. செப்டம்பர் 18 ஆம் தேதி தமிழ் மொழியிலும் டப் செய்யப்பட்டு வெளியாகியுள்ள இப்படம், தமிழ் ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பைப் பெற்றது.
ஹிட் 3:
இயக்குநர் சைலேஷ் கொலானு இயக்கத்தில், நானி நடிப்பில் உருவான ‘ஹிட்: தி தேர்ட் கேஸ்’ திரைப்படம் மே 1-ம் தேதி தமிழ் டப்பிங்குடன் திரையரங்குகளில் வெளியானது. ஏற்கனவே வெளியான இப்படத்தின் முதல் இரண்டு பாகங்களும் தெலுங்கில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றிருந்த நிலையில், இந்த மூன்றாம் பாகத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் தொடக்கம் முதலே மிக அதிகமாக இருந்தது. இது ஆக்ஷன் திரைப்படங்களை விரும்பும் ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்தது.
சித்தாரே ஜமீன் பர்:
கடந்த ஜூன் 20-ஆம் தேதி இந்தி மொழியில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற ‘சித்தாரே ஜமீன் பர்’ திரைப்படம், அதே நாளில் தமிழ் டப்பிங்கிலும் வெளியானது. ஆமிர் கான் மற்றும் ஜெனிலியா நடிப்பில் உருவான இத்திரைப்படத்தை, இயக்குனர் ஆர்.எஸ். பிரசன்னா இயக்கியிருந்தார். ஒரு பயிற்சியாளராகவும் வழிகாட்டியாகவும் ஆமிர் கான் தனது முதிர்ச்சியான நடிப்பை இதில் வெளிப்படுத்தியிருந்தார். நீண்ட இடைவேளைக்குப் பிறகு ஜெனிலியா இப்படத்தின் மூலம் மீண்டும் சினிமாவுக்கு வந்திருந்தார். இப்படத்தின் உணர்வுப்பூர்வமான காட்சிகள் தமிழ் மக்களையும் வெகுவாகக் கவர்ந்தன. நேரடியாக யூட்யூப் தளத்தில் வெளியானப் பிறகு படத்திற்கு நல்லதொரு வரவேற்பு கிடைத்தது.

F1:
இத்திரைப்படம் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த ஜூன் 27 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இப்படம், தமிழ் டப்பிங்கிலும் வெளியாகி ரசிகர்களிடம் நல்லதொரு வரவேற்பைப் பெற்றது. குறிப்பாக, இத்திரைப்படத்தின் திரைக்கதை ஒரு தமிழ் ‘மாஸ்’ ஹீரோ படத்திற்குரிய வேகத்துடனும் விறுவிறுப்புடனும் அமைக்கப்பட்டிருந்தது. இங்கும் வணிக ரீதியாகப் பெரும் வசூலை ஈட்டி சாதனை படைத்தது. குறிப்பாக படம் ஆப்பிள் டிவி ஓடிடி-யில் வெளியான பின்பு இணையதளத்தில் ரசிகர்கள் படத்தின் காட்சிகளை ட்ரெண்ட் செய்து கொண்டாடினர்.
சூப்பர்மேன்:
உலக அளவில் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவான ‘சூப்பர்மேன்’ திரைப்படம், கடந்த 2025 ஜூலை 11 ஆம் தேதி திரையரங்குகளில் தமிழ் டப்பிங் செய்யப்பட்டு வெளியானது. டிசி சினிமா பிரபஞ்சத்தின் புதிய தொடக்கமாகக் கருதப்பட்ட இத்திரைப்படம், வெளியாவதற்கு முன்பே உலகளாவிய ரசிகர்களிடையே மிகப்பெரிய ஆவலைத் தூண்டியிருந்தது. புதிய சூப்பர்மேனாகத் திரையில் தோன்றிய டேவிட் கோரன்ஸ்வெட்டின் சிறப்பான நடிப்பு ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்தது. இயக்குநர் ஜேம்ஸ் கன் இந்தப் படத்தை ஒரு புதிய கோணத்தில் அணுகியிருந்தார்.

சு ஃப்ரம் சோ:
2025-ஆம் ஆண்டு ஜூலை 25 அன்று எவ்வித எதிர்பார்ப்புமின்றி வெளியாகி, கன்னடத் திரையுலகையே திரும்பிப் பார்க்க வைத்த திரைப்படம் “சு ஃப்ரம் சோ”. அறிமுக இயக்குநர் ஜே.பி. துமினாடு இயக்கத்தில் உருவான இத்திரைப்படம், கன்னடத்தில் சர்ப்ரைஸ் ஹிட் அடித்ததைத் தொடர்ந்து செப்டம்பர் மாதம் இத்திரைப்படம் ஜியோ ஹாட்ஸ்டார் ஓ.டி.டி தளத்தில் வெளியானது. தமிழ் மக்களிடையேயும் இத்திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது.
லோகா சாப்டர் ஒன் – சந்திரா:
துல்கர் சல்மான் தயாரிப்பில் டொமினிக் அருண் இயக்கத்தில் வெளியான ‘லோகா சாப்டர் 1 சந்திரா’ திரைப்படம் ஆகஸ்ட் 20-ஆம் தேதி தமிழ் டப்பிங்கிலும் தியேட்டர்களில் வெளியாகி பெரிய வரவேற்பைப் பெற்றது. படம் முழுக்கவே இறுக்கமான முகத்துடன் வரும் கல்யாணி பிரியதர்ஷினியின் நடிப்பைத் தமிழ் ரசிகர்கள் கொண்டாடினர்.

டிமான் ஸ்லேயர்: இன்ஃபினிட்டி காஸ்டில்:
உலகளாவிய அனிமே ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில், ‘டிமான் ஸ்லேயர்: இன்ஃபினிட்டி காஸ்டில்’ திரைப்படம் 2025 ஆம் ஆண்டு தமிழ் மொழியில் மொழிமாற்றம் செய்யப்பட்டு திரையரங்குகளில் வெளியானது. ஹருவோ சோட்டோசாகி தான் இப்படத்தை இயக்கியுள்ளார். கடந்த ஜூலை மாதம் 18 ஆம் தேதி ஜப்பானில் வெளியான இப்படம், அங்கு வசூல் ரீதியாகப் புதிய மைல்கற்களை எட்டியதைத் தொடர்ந்து, இந்தியாவிலும் செப்டம்பர் 12 ஆம் தேதி வெளியானது. தமிழ்நாட்டு அனிமே ரசிகர்கள் திரையரங்குகளில் இப்படத்தைக் கோலாகலமாகக் கொண்டாடினர்.
காந்தாரா சாப்டர் 1:
2022-ஆம் ஆண்டு வெளியான ‘காந்தாரா’ திரைப்படத்தின் முன்கதையாக உருவான ‘காந்தாரா: சாப்டர் 1’, அக்டோபர் 2 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி மாபெரும் வெற்றியைப் பெற்றது. ரிஷப் ஷெட்டியின் மிரட்டலான இயக்கம் மற்றும் நடிப்பில் வெளிவந்த இப்படம், தொழில்நுட்ப ரீதியாகவும் ரசிகர்களுக்கு ஒரு புதிய திரை அனுபவத்தை வழங்கியது.
கேர்ள் ஃப்ரெண்ட்:
கடந்த நவம்பர் 7-ஆம் தேதி தமிழில் டப் செய்யப்பட்டு வெளியான தெலுங்குப் படம் தான் ‘கேர்ள் ஃப்ரெண்ட்’. காதல் என்ற பெயரில் ஒரு ஆண், பெண் மீது செலுத்தும் ஆதிக்கத்தைப் பற்றி இயக்குநர் ராகுல் ரவீந்திரன் இந்தப் படத்தில் மிக அழுத்தமாகப் பதிவு செய்திருந்தார்.
துரந்தர்:
இந்த ஆண்டின் டிசம்பர் மாதத்தில் வெளியாகி பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ள திரைப்படம் ‘துரந்தர்’. இந்தி ஆடியன்ஸ் மட்டுமின்றி தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. உலக அளவில் இப்படம் பெரிய வசூலைச் செய்து சாதனை படைத்து வருகிறது.

அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்:
ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் வெளியான அவதார் திரைப்படத்தின் முதல் இரண்டு பாகங்களும் உலக அளவில் பல்வேறு சாதனைகளைப் படைத்தன. அந்த வெற்றியைத் தொடர்ந்து, ஒட்டுமொத்தத் திரை உலகமே ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த இந்தத் தொடரின் அடுத்த படைப்பான ‘அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்’, டிசம்பர் 19-ஆம் தேதி தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியானது. இப்படத்தில் ஜேம்ஸ் கேமரூன் வடிவமைத்த பிரம்மாண்டமான காட்சி அமைப்புகள் ரசிகர்களுக்கு ஒரு மிகப்பெரிய விஷுவல் விருந்தாக அமைந்தன. முதல் இரண்டு பாகங்கள் போலவே இத்திரைப்படமும் உலக அளவில் வசூல் ரீதியாகப் பெரும் வரவேற்பைப் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
இதில் எந்தப் படம் உங்களுடைய ஃபேவரிட் என்பதை கமென்டில் பதிவிடுங்கள்