முதல்வர் குறித்து அவதூறு: முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் மீதான வழக்கை ரத்து

1294273.jpg
Spread the love

 

சென்னை: தமிழக முதல்வர் ஸ்டாலின் குறித்து அவதூறாகப் பேசியதாக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் மீது தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2022-ம் ஆண்டு திண்டிவனத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய முன்னாள் அதிமுக அமைச்சரும், தற்போதைய மாநிலங்களவை எம்பி-யுமான சி.வி.சண்முகம், தமிழக முதல்வர் ஸ்டாலின் குறித்து அவதூறாகப் பேசியதாகக் குற்றம் சாட்டப்பட்டது. இதுதொடர்பாக திமுக நிர்வாகி ஒருவர் அளித்த புகாரின் பேரில், இரு பிரிவினரிடையே மோதலை ஏற்படுத்துதல், பொது அமைதிக்குக் குந்தகம் விளைவித்தல் போன்ற பிரிவுகளின் கீழ் சி.வி.சண்முகம் மீது திண்டிவனம் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி சி.வி.சண்முகம் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பாக ஏற்கெனவே நடந்தது. அப்போது மனுதாரர் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஜான் சத்யன், “சி.வி.சண்முகத்தின் பேச்சால் சட்டம் – ஒழுங்குக்குப் பிரச்சினை ஏற்பட்டுள்ளது என்றால் அதற்காக அரசு தரப்பில் தான் புகார் அளித்திருக்க வேண்டும். ஆனால் இதுதொடர்பாக திமுக நிர்வாகி ஒருவர் அரசியல் உள்நோக்கத்துடன் அளித்துள்ள புகாரின் பேரில் சி.வி.சண்முகம் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்” என வாதிட்டார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதி, “மனுதாரரின் பேச்சு மோசமானது தான். அதை ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால் அந்தப் பேச்சு காரணமாக மோதலை ஏற்படுத்துதல், பொது அமைதிக்குக் குந்தகம் விளைவித்தல் போன்ற பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்ய முடியுமா?” எனக் கேள்வி எழுப்பியிருந்தார்.

அதற்கு அரசு தரப்பில் ஆஜரான குற்றவியல் வழக்கறிஞர் கே.எம்.டி. முகிலன், “மனுதாரரின் பேச்சு இரு பிரிவினரிடையே மோதலை ஏற்படுத்தி அதன்மூலம் பொது அமைதிக்குக் குந்தகம் ஏற்படுத்தும் என்பதாலேயே இந்தப் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது” என வாதிட்டிருந்தார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஜி. ஜெயச்சந்திரன், தமிழக முதல்வர் குறித்து அவதூறாகப் பேசியதாக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்து இன்று உத்தரவிட்டார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *