ஒலிம்பிக்கில் கிரிக்கெட் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளது உற்சாகமளிப்பதாக ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.
ஒலிம்பிக்கில் முதலும் கடைசியுமாக கிரிக்கெட் போட்டி 1900 ஆம் ஆண்டு நடைபெற்றது. அந்தப் போட்டியில் பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் அணிகள் மோதின. பிரிட்டன் அணி வெற்றி பெற்றது. அதன்பின், ஒலிம்பிக்கில் கிரிக்கெட் போட்டிகள் இடம்பெறவில்லை. இந்த நிலையில், 2028 ஆம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் நடத்தப்படும் என ஒலிம்பிக் குழு தரப்பில் கடந்த ஆண்டு அக்டோபரில் தெரிவிக்கப்பட்டது.
2028 ஆம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கில் பேஸ்பால்-சாஃப்ட்பால், ஃபிளாக் ஃபுட்பால், லாக்ரோஸ் மற்றும் ஸ்குவாஷ் போட்டிகளுடன் கிரிக்கெட்டும் நடத்தப்படும் என மும்பையில் நடைபெற்ற 141-வது சர்வதேச ஒலிம்பிக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
இந்த நிலையில், ஒலிம்பிக்கில் கிரிக்கெட் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளது உற்சாகமளிப்பதாக ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ரிக்கி பாண்டிங் பேசியதாவது: ஒலிம்பிக்கில் மீண்டும் கிரிக்கெட் சேர்க்கப்பட்டுள்ளது நேர்மறையான விஷயமாக இருக்கிறது. கடந்த 15-20 ஆண்டுகளாக கிரிக்கெட்டை ஒலிம்பிக்கில் சேர்ப்பது தொடர்பான குழுக்களின் ஆலோசனையில் பங்கேற்றுள்ளேன். எவ்வாறு ஒலிம்பிக்கில் மீண்டும் கிரிக்கெட்டை கொண்டு வரலாம் என்பது குறித்து ஆலோசித்துள்ளோம். இறுதியாக, தற்போது கிரிக்கெட் மீண்டும் ஒலிம்பிக்கில் சேர்க்கப்பட்டுள்ளது.
ஒலிம்பிக் போட்டிகளை உலகம் முழுவதிலும் கோடிக்கணக்கான மக்கள் கண்டுகளிக்கின்றனர். உலகம் முழுவதும் அதிக பார்வையாளர்களைக் கொண்டுள்ள ஒலிம்பிக்கில் கிரிக்கெட் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. ஒலிம்பிக்கில் கிரிக்கெட் போட்டிகளுக்கான உள்கட்டமைப்பு வசதிகள் மிக முக்கியமான விஷயமாகும். 6 அல்லது 7 அணிகள் மட்டுமே ஒலிம்பிக்கில் பங்கேற்க அனுமதிக்கப்படும் என நினைக்கிறேன். ஒலிம்பிக் போட்டிகளுக்கு எதன் அடிப்படையில் அணிகள் தேர்வு செய்யப்படப் போகின்றன என்பது கவனம் பெற்றுள்ளது. ஒலிம்பிக்கில் மீண்டும் கிரிக்கெட் விளையாடப்பட உள்ளது மிகுந்த உற்சாகமளிக்கிறது என்றார்.