ஐ.பி.எல் மினி ஏலம் நடந்து முடிந்திருக்கிறது. வழக்கமாக 30+ வயதில் ஓய்வு பெறும் நிலையில் இருக்கும் அனுபவ வீரர்கள் மீது கவனம் செலுத்தும் சி.எஸ்.கே இந்த முறை இளம் வீரர்களாக குறிவைத்து வாங்கியிருக்கிறது. அதுதான் ரசிகர்களுக்கும் ஆச்சர்யம்! ஆனால், சென்னை அணியின் இந்த பாலிசி மாற்றத்துக்கு பின்பாக நிறைய காரணங்கள் இருக்கிறது.

தோனி மேதமை
சென்னை அணியின் பிரதான நம்பிக்கை தோனியும் அவர் மீதான நட்சத்திரத்தன்மையும்தான். தோனி இந்திய அணியை வழிநடத்திய ஆகச்சிறந்த கேப்டன். இந்திய அணிக்கு கேப்டனாக இருந்த சமயத்திலேயே இன்னொரு பக்கம் சென்னை அணியையும் வழிநடத்திக் கொண்டிருந்தார். கேப்டன்சி என்பது களத்தில் வியூகங்களை வகுத்து சிறப்பாக செயல்படுத்துவது மட்டுமல்ல. சுற்றியிருக்கும் மனிதர்களை சிறப்பான முறையில் மேலாண்மை செய்வதுமே வெற்றிக்கு தேவையான முக்கிய அம்சம். அதில்தான் தோனி மேதமை பெற்றவர்.
மற்ற அணிகளில் தன்னுடைய திறனை வெளிக்காட்ட முடியாமல் திணறும் வீரர்கள் கூட சென்னை அணியில் தோனியின் தலைமையின் சௌகரியமாக சீரிய ஆட்டத்தை வெளிக்காட்டுவார்கள். அதனால்தான் லைம் லைட்டில் இல்லாத ஓய்வு பெற்ற வீரர்களையும் கூட அழைத்து வந்து, அவர்களை நவீன டி20 ஆட்டக்காரர்களுடன் போட்டியிட செய்து அவரால் வெல்ல வைக்க முடிந்தது.
ஆனால், தோனியும் ஓய்வை நெருங்கிவிட்டார். கேப்டன் பதவியை அடுத்தத் தலைமுறையிடம் கொடுத்துவிட்டார். அடுத்ததாக ஓய்வுதான். ஒவ்வொரு சீசனாக தன்னுடைய ஓய்வை தள்ளிப் போட்டுக் கொண்டே வந்திருக்கிறார்.

தோனிக்கு 44 வயதாகிவிட்டது. பழைய மாதிரி பெரிய இன்னிங்ஸ்களை ஆட முடியவில்லை என்பதால்தான் டெத் ஓவர்களில் மட்டும் பேட்டிங் ஆடிக்கொண்டிருக்கிறார். கால் முட்டியில் அறுவை சிகிச்சை செய்திருக்கிறார். ரன் ஓடுவதில் பெரும் சிரமம் இருக்கிறது. ஆக, வரவிருக்கும் சீசன்தான் தோனிக்கு கடைசி சீசனாக இருக்கக்கூடும். தோனி என்கிற பெரும் பிம்பத்தை தாண்டி நகர வேண்டிய நிலைக்கு சென்னை அணி நிர்வாகம் வந்துவிட்டது.
மினி ஏல கணக்கு!
இந்த நிலைக்கும் சென்னை அணி மினி ஏலத்தில் இளைஞர்களை நோக்கி நகர்ந்ததற்குமே ஒரு தொடர்பு இருக்கிறது. தோனியும் அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் ப்ளெம்மிங்கும் ஒரே அலைவரிசையில் இருப்பவர்கள். ‘இளம் வீரர்களை எடுத்து வந்து அவர்களுக்கு பயிற்சி கொடுத்து வளர்த்தெடுப்பதற்காக அணிகள் இல்லை’ என ஓப்பனாக ஸ்டேட்மெண்ட் கொடுத்தவர் ப்ளெம்மிங். இன்று அதே ப்ளெம்மிங்தான் ஏல மேஜையில் உட்காந்து பிரசாந்த் வீருக்கும் கார்த்திக் சர்மாவுக்கும் அத்தனை கோடிகளை கொட்டிக் கொடுத்தார். காரணம், தோனிக்கு பிறகு உருவாகப் போகும் வெற்றிடம்.

அணியில் தோனி இல்லாத நிலையில் ருத்துராஜாலோ சாம்சனாலோ தோனி பாணியிலேயே சீனியர் வீரர்களை கையாள முடியாது. மேலும், இவர்கள் இருவருமே தோனி அளவுக்கு மனிதர்களை மேலாண்மை செய்வதில் கில்லாடி அல்ல. அப்படிப்பட்டவர்களிடம் லைம் லைட்டில் இல்லாத சீனியர் வீரர்களை கொடுத்தால் அது அணிக்குள்ளேயே முரண்களை உண்டாக்கும். சரி, இவர்கள் அல்லாமல் வேறு வீரர்களை வைத்து தோனி இடத்தை நிரப்பலாம் என்றால், அந்த அளவுக்கு திறன்படைத்த அல்லது அதற்கான அறிகுறிகளை காட்டக்கூடிய வீரர்களை சென்னை அணி இன்னமும் கண்டடையவில்லை.

இடையில் கே.எல்.ராகுல், ரிஷப் பண்ட் எல்லாம் சென்னை அணிக்குள் வருவதைப் போல செய்திகள் ஓடிக்கொண்டிருந்தது. ஆனால், இவர்களுமே தோனி அளவுக்கு மேலாண்மை திறன் பெற்றவர்கள் அல்ல. அதற்கான அறிகுறிகளை காட்டியவர்களும் அல்ல. மெக்கானிக்கலாக செயல்படக்கூடியவர்கள். நம்முடைய கையில் இருப்பவர்களிலேயே ஒருவரை வளர்த்தெடுக்கலாம் என்பதால்தான் ருத்துராஜை கேப்டன் ஆக்கினார்கள். அவர் மெதுமெதுவாக தேறி வருகிறார். அப்படிப்பட்டவரிடம் தோனியிடம் கொடுத்த வீரர்களை போல கொடுத்தால், அது அவர் மீதுதான் கூடுதல் அழுத்தத்தை உண்டாக்கும்.
சுருங்க சொன்னால் தோனியால் வெற்றியை நோக்கி ஓட வேண்டிய தேவையே இல்லாத குதிரைகளை கூட ஓட வைக்க முடியும். ருத்துராஜாலோ சாம்சனாலோ அது முடியாது. அவர்களுக்கு வெற்றியின் மீது பசி கொண்டு வெறித்தனமாக ஓடக்கூடிய குதிரைகள் தேவை. அப்போதுதான் எந்த தேக்கமும் இல்லாமல் குழப்பமும் இல்லாமல் அவர்களும் சேர்ந்து ஓடுவார்கள். இதற்காகதான் சென்னை அணி அத்தனை கவனமாக இளம் வீரர்களை பார்த்து பார்த்து வாங்கியிருக்கிறது.

தோனி ஓய்வு முடிவை அறிவிக்கும் காலம் வெகு தொலைவில் இல்லை என்பதையும் சென்னை அணியின் தேர்வுகள் காட்டுகிறது. தோனி இல்லாமல் ஒரு ப்ளேயிங் லெவனை உருவாக்கும் வல்லமையோடு சிஎஸ்கே இப்போது இருக்கிறது. சரியாக க்ளிக் ஆகும்பட்சத்தில் தோனி இம்பாக்ட் ப்ளேயராக மட்டுமே கூட ஆட வாய்ப்பிருக்கிறது. இந்த முறை ‘One Last Time’ என்பது பலித்துவிடும் என்றுதான் தோன்றுகிறது.!