நகர வாழ்க்கையின் நெரிசலில், காலை வேளையில் அலுவலகம் செல்வது என்பது பலருக்கும் ஒரு போர்க்களத்திற்குச் செல்வது போன்ற உணர்வைத் தரக்கூடும். வாகனங்களின் இரைச்சல், புகை, போக்குவரத்து நெரிசல் என அனைத்தும் சேர்ந்து அந்த நாளைத் தொடங்கும் முன்பே சோர்வடையச் செய்துவிடுகின்றன. ஆனால், இதற்கு ஒரு எளிய, ஆரோக்கியமான, மற்றும் அமைதியான மாற்று வழி இருக்கிறது. அதுதான் சைக்கிள் பயணம்.
கடந்த 10 ஆண்டுகளாக அலுவலகத்திற்குத் தொடர்ந்து சைக்கிளில் சென்று வருகிறேன். அதனால் என் சொந்த அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டு, சிலவற்றைப் பகிர்கிறேன்.
1. உடற்பயிற்சி: நேரமும் பணமும் மிச்சம்
இன்றைய சூழலில் உடற்பயிற்சி செய்யத் தனியாக நேரம் ஒதுக்குவது பலருக்குச் சிரமமாக உள்ளது. அலுவலகத்திற்கு தினமும் சைக்கிளில் செல்வது (எனக்கு போக வர 12 கி.மீ) ஒரு சிறந்த கார்டியோ பயிற்சியாக அமைகிறது. தனியாக ஜிம் சந்தா கட்ட வேண்டிய அவசியமில்லை. பயணமே பயிற்சியாக மாறுகிறது. தினமும் மிதமான வேகத்தில் சைக்கிள் ஓட்டுவது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது, ரத்த ஓட்டத்தைச் சீராக்குகிறது மற்றும் உடல் எடையைக் கட்டுப்பாட்டில் வைக்கிறது.
2. போக்குவரத்து நெரிசலும் மன அமைதியும்
பைக் அல்லது காரில் செல்லும்போது டிராபிக்கில் சிக்கினால் ஏற்படும் மன உளைச்சல் (Traffic Stress) அதிகம். ஆனால், சைக்கிளில் செல்பவர்கள் நெரிசலைக் கண்டு அஞ்சத் தேவையில்லை. வாகனங்களுக்கு இடையே எளிதாக வழி ஏற்படுத்திச் செல்ல முடியும். சிக்னல்களில் காத்திருக்கும் நேரம் குறைவு. அலுவலகத்தை அடையும்போது மனது பதற்றமின்றி, மிகவும் “ரிலாக்ஸாக’ இருப்பதை உணர முடியும். இது அன்றைய வேலைநாளைச் சிறப்பாகத் தொடங்க உதவுகிறது.