ஐபிஎல் தொடரில் இன்று (ஏப்ரல் 4) நடைபெற்ற மும்பை vs டெல்லி அணிகளுக்கிடையேயான போட்டி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்றது.
இதில் மும்பை அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா காயம் காரணமாக ஓய்வில் இருக்க, மாற்றாக மும்பையை வழிநடத்தும் பொறுப்பு சூர்யகுமார் யாதவிடம் ஒப்படைக்கப்பட்டது.

டாஸ் வென்ற அக்சர் பட்டேல் தயக்கமின்றி பந்து வீச்சைத் தேர்வு செய்தார். இந்தத் தொடரில் டாஸில் வென்று பௌலிங் தேர்வு செய்தாலே வெற்றி உறுதி என எழுதப்படாத விதி உருவாகி உள்ளது. ஆகையால் அனைத்து கேப்டன்களும் பந்து வீச்சையே தேர்வு செய்கின்றனர்.
முதலில் களமிறங்கிய மும்பை அணி தொடக்க ஆட்டக்காரர்களான ரோஹித் சர்மா மற்றும் ரிக்கெல்டன், கடந்த போட்டியில் எங்கே விட்டார்களோ அங்கிருந்தே ஆரம்பித்ததைப் போல் அதிரடியாகத் தொடங்கினாலும், முகேஷ் குமார் வீசிய மூன்றாவது ஓவரிலேயே ரிக்கெல்டன், திலக் வர்மா என அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழுந்தன.
பவர் பிளேவிலேயே இரண்டு முக்கிய வீரர்களை இழந்ததன் மூலம் பார்ட்னர்ஷிப் அமைத்து ஆட ஆரம்பித்தனர் ரோஹித் சர்மா மற்றும் சூர்யகுமார் யாதவ்.

அணியின் ஸ்கோர் 71 ரன்கள் இருந்த நிலையில் ரோஹித் சர்மா (35) அவுட் ஆகி வெளியேறினார். அடுத்து வந்த ரூதர்போர்ட் சொற்ப ரன்களுக்கு வெளியேற, மறுபுறத்தில் கேப்டன் சூர்யகுமார் யாதவ் மட்டும் பொறுப்புடன் விளையாடி அரைசதம் கடந்து அவுட் ஆனார். ஒருவழியாக 20 ஓவர்கள் முடிவில் ஆறு விக்கெட் இழப்பிற்குத் தட்டு தடுமாறி 162 ரன்கள் எடுத்தனர்.
163 என்ற இலக்கை விரட்டி களமிறங்கினார்கள் டெல்லி அணி ஓப்பனர்கள். கடந்த முறை டக் அவுட் ஆகி வெளியேறிய கே.எல். ராகுல், இம்முறையும் டக் அவுட் ஆனால் சரிப்படாது என்று கூடுதலாக ஒரு ரன் மட்டும் எடுத்து பெவிலியன் திரும்பினார்.
இவரைத் தொடர்ந்து நிதிஷ் ராணாவும் ரன் அவுட் ஆக டெல்லி அணியும் முக்கியமான விக்கெட்டுகளை இழந்தது. அடுத்து சமீர் ரிஸ்வி மற்றும் பதும் நிஸ்ஸாங்க இருவரின் பார்ட்னர்ஷிப் மூலம் 10 ஓவர்களில் 73 ரன்களை டெல்லி அணி எடுத்து மொமென்டத்தை தனது பக்கம் கொண்டு வந்த நிலையில் துரதிஷ்டவசமாக நிஸ்ஸாங்க 44 ரன்களில் அவுட் ஆனார்.
ஆனால் மறுபக்கம் சமீர் ரிஸ்வி கடந்த போட்டியைப் போல, அணி சரிவில் இருக்கும் போதெல்லாம் தூக்கி நிறுத்திக் கொண்டிருந்தார்.

ஆனால் போட்டியை இறுதி வரை முடிக்க முடியாமல் 90 ரன்களுக்கு அவுட் ஆகினார். இதன் மூலம் 18.1 ஓவர்களில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது டெல்லி கேப்பிடல்ஸ் அணி.
அதிரடியாக ஆடி டெல்லி அணியின் வெற்றிக்கு வித்திட்ட சமீர் ரிஸ்வி ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.