கடந்த ஜூன் மாதத்தில் இருந்து தனது ரசிகர்களை சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொள்வதை வழக்கமாகச் செய்து வருகிறார் தனுஷ். ஞாயிறுதோறும் 500 ரசிகர்களைச் சந்திப்பதுடன் அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொள்வது, அன்று அவர்களுக்கு பிரியாணி விருந்து கொடுப்பது என முடிவெடுத்தார் தனுஷ். “இட்லிக்கடை’ மற்றும் ‘கர’ படப்பிடிப்புகளிடையே கிடைத்த இடைவெளியில் ரசிகர்களைச் சந்தித்து வந்தார் தனுஷ். அதன் தொடர்ச்சியாக கடந்த ஞாயிறு அன்று ரசிகர்களைச் சந்தித்துள்ளார் தனுஷ்.

விக்கேஷ் ராஜாவின் இயக்கத்தில் தனுஷ் நடித்திருக்கும் ‘D 54’ படமான ‘கர’ வின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் சென்னையில் பரபரக்கின்றன. இந்தப் படம் ஏப்ரலுக்கு திரைக்கு வருகிறது. அடுத்து அவர் ராஜ்குமார் பெரியசாமியின் இயக்கத்தில் நடிக்கிறார். சாய் அபயங்கர் இசையமைக்கும் இந்தப் படத்தில் தனுஷுடன் மம்மூட்டி, எஸ்.ஜே.சூர்யா, ஸ்ரீலீலா, சாய் பல்லவி எனப் பலரும் நடிக்கின்றனர். இது தனுஷின் 55-வது படமாகும். சில வாரங்களுக்கு முன்னர் நடைபெற்ற இதன் படப்பூஜையில்கூட இயக்குநர்கள் ஷங்கர், மாரிசெல்வராஜ், நடிகர் எஸ்.ஜே.சூர்யா மற்றும் படத்தின் கலைஞர்கள் பங்கேற்றனர். சென்னையில் நாளை அதன் படப்பிடிப்பு தொடங்குகிறது. இந்த ஷெட்யூலில் தனுஷ் இணைகிறார். சென்னையில் தொடர்ந்து 10 நாள்கள் நடைபெறும் என்றும், அதன் பிறகு திருப்பதியில் படப்பிடிப்பு இருக்கும் என்றும் சொல்கிறார்கள். நாளை தொடங்கும் படப்பிடிப்பில் மம்மூட்டி போர்ஷன் இருக்காது என்றும், இனி வரும் ஷெட்யூலில்தான் அவர் பங்கேற்பார் என்றும் சொல்கிறார்கள்.

‘D 55’க்கு முன்னதாக ரசிகர்களைச் சந்திக்கத் தீர்மானித்தார் தனுஷ். கடந்த ஞாயிறன்று அடையாரில் உள்ள பெண்கள் கல்லூரி ஒன்றில் ரசிகர்களைச் சந்தித்திருக்கிறார். கோவை, சேலம், கோவை ( தெற்கு ), கரூர் ஆகிய இடங்களில் இருந்து ரசிகர்களும் அவர்களது குடும்பத்தினரும் வந்திருந்தார்கள். கல்லூரியின் ஆடிட்டோரியத்தில் நடைபெற்றதால் கிட்டத்தட்ட 3,000 ரசிகர்கள் பங்கேற்றுள்ளனர். அவர்களுடன புகைப்படம் எடுத்துக் கொண்டதுடன், பெண்களுக்குப் புடவை மற்றும் குழந்தைகளுக்கு ஸ்கூல் பேக் ஆகியவையும் வழங்கியிருக்கிறார். ஒரே நாளில் 3,000 ரசிகர்களைச் சந்தித்திருக்கிறார் அவர். அடுத்த ஞாயிறும் ரசிகர்களைச் சந்திக்கிறார். அதில் கோவை, திருப்பூர், ஈரோடு, ஓசூர் பகுதி ரசிகர்களை அவர் சந்திப்பாரென தெரிகிறது.