Divorce cannot be granted based on WhatsApp conversation alone: ​​Bombay High Court opinion – வாட்ஸ்அப் உரையாடலை மட்டும் வைத்து விவாகரத்து வழங்க முடியாது: மும்பை உயர் நீதிமன்றம் கருத்து

Spread the love

வாட்ஸ்அப் உரையாடல்களை மட்டுமே ஆதாரமாக வைத்து ஒருவருக்கு விவாகரத்து வழங்க முடியாது என்று மும்பை உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு அளித்துள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் குடும்ப நீதிமன்றம், மனைவி தரப்பு வாதத்தைக் கேட்காமல் கணவர் தாக்கல் செய்த வாட்ஸ்அப் மெசேஜ்களை மட்டுமே அடிப்படையாக வைத்து விவாகரத்து வழங்கியதை மும்பை உயர் நீதிமன்ற நீதிபதிகள் பாரதி டாங்கே மற்றும் மஞ்சுஷா ஆகியோர் அடங்கிய அமர்வு ரத்து செய்துள்ளது.

இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான விவாகரத்து வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதிகள், `வாட்ஸ்அப் சாட்டிங் விபரங்களை மட்டும் வைத்து கொடுமை இழைக்கப்பட்டதாகக் கருதி விவாகரத்து வழங்க முடியாது.

அந்த புகார்கள் முறையாக நீதிமன்றத்தில் ஆதாரங்கள் மூலம் நிரூபிக்கப்பட வேண்டும்”‘ என்று நீதிபதிகள் குறிப்பிட்டனர். மேலும் இந்த வழக்கை மீண்டும் விசாரிக்குமாறு நாசிக் குடும்ப நீதிமன்றத்திற்கு உத்தரவிட்ட நீதிபதிகள், மனைவி தனது தரப்பு ஆதாரங்களைச் சமர்ப்பிக்கவும், வாதிடவும் முழு வாய்ப்பளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

மேலும் பிரிந்து வாழும் தம்பதியினர் மத்தியஸ்தம் மூலம் சுமுகமாகத் தீர்வு காணவும் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

நாசிக் குடும்ப நீதிமன்றம் தனது உத்தரவில், `கணவரின் வாக்குமூலத்தை மனைவி தரப்பில் எதிர்க்காத நிலையில் அது வாட்ஸ்அப் மற்றும் எஸ்எம்எஸ் உரையாடல்கள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக’ தெரிவித்தது. வாட்ஸ்அப் சாட்டிங்கில் நாசிக்கில் வசிக்கும் கணவரின் பெற்றோரை விட்டுவிட்டு, புனேவுக்குச் செல்ல வேண்டும் என்று மனைவி தொடர்ந்து வற்புறுத்தியதை இந்த உரையாடல்கள் தெளிவாகக் காட்டுகின்றன. கணவரின் சகோதரி மற்றும் தாயார் குறித்து மனைவி தரக்குறைவான செய்திகளையும் அனுப்பி இருந்தார். 

கணவர் புனே வர மறுத்ததால் அதிருப்தி அடைந்த மனைவி, கணவர் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிராக உணர்ச்சிப்பூர்வமான மிரட்டல்கள் மற்றும் கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்தி மன ரீதியான கொடுமைப்படுத்தி வந்துள்ளார். ஒரு மனைவி இது போன்ற நிர்ப்பந்தங்களை கொடுக்க முடியாது. எனவே கணவர் அத்தகைய மனைவியுடன் வாழ வேண்டிய கட்டாயம் இல்லை” என்று குறிப்பிட்ட நீதிபதி, கணவருக்கு விவாகரத்து வழங்கினார்.

ஆனால், மும்பை உயர் நீதிமன்றம் இந்த ஆதாரங்கள் ஒருதலைப்பட்சமாக (மனைவியின் விளக்கம் இன்றி) ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதால் அவற்றைச் செல்லாது என அறிவித்து மீண்டும் விசாரிக்க உத்தரவிட்டுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *