மக்கள் தலையில் கடனை ஏற்றியதே திமுக அரசின் சாதனை -சசிகலா குற்றச்சாட்டு

1280847.jpg
Spread the love

 

தென்காசி: “திமுக ஏராளமான வாக்குறுதிகளை அளித்தது. ஆனால் எதையும் நிறைவேற்றவில்லை. மக்கள் தலையில் கடனை ஏற்றி வைத்துள்ளது திமுக ஆட்சி. இதுதான் திமுக செய்துள்ள சாதனை” என்று தென்காசியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள சசிகலா குற்றம்சாட்டியுள்ளார்.

அதிமுகவை ஒருங்கிணைக்கவும், 2026-ம் ஆட்சியை கைப்பற்றவும் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து, தொண்டர்களையும், பொதுமக்களையும் சந்திக்க இருப்பதாக அதிமுக முன்னாள் பொதுச்செயலாளர் சசிகலா சமீபத்தில் தெரிவித்திருந்தார். அதன்படி, தென்காசி மாவட்டத்தில் 4 நாட்கள் சுற்றுப்பயணத்துக்கு திட்டமிட்டுள்ள அவர், இன்று (ஜூலை 17) மாலையில் தனது முதல் நாள் சுற்றுப்பயணத்தை காசிமேஜர்புரத்தில் தொடங்கி, பல்வேறு பகுதிகளில் ஆதரவாளர்களை சந்தித்தார். அப்போது சசிகலா பேசியது: “ஜெயலலிதா தனது வாழ்நாள் முழுவது ஏழை, எளிய மக்களுக்காக பல்வேறு திட்டங்களை ஆட்சியில் இருக்கும்போது செயல்படுத்தினார்.

திமுக ஆட்சியில் வெற்று அறிவிப்புகள் ம்ட்டுமே உள்ளது. மக்களுக்கு எதையும் செய்யவில்லை. கடந்த மூன்றரை ஆண்டு ஆட்சியில் 3 முறை தமிழக முதல்வர் வெளிநாடு சென்று வந்துள்ளார். அதினால் என்ன பயன் ஏற்பட்டது?. தொழில்துறை அமைச்சர் 10 லட்சம் கோடி முதலீடுகளை ஈர்த்துள்ளதாகவும், 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தியதாகவும் கூறுகிறார்.

இங்கு யாருக்காவது புதிதாக வேலைவாய்ப்பு வந்துள்ளதா?. ஃபோர்டு நிறுவனத்தை மூட வைத்தது ஏன்?. இதனால் சுமார் 14 ஆயிரம் பேர் வேலை இழந்துள்ளனர். திமுக ஏராளமான வாக்குறுதிகளை அளித்தது. ஆனால் எதையும் நிறைவேற்றவில்லை. மக்கள் தலையில் கடனை ஏற்றி வைத்துள்ளது திமுக ஆட்சி. இதுதான் திமுக செய்துள்ள சாதனை. தமிழகத்தில் ஒரு லட்சத்து 57 ஆயிரம் கிலோமீட்டர் கிராமப்புற சாலைகள் உள்ளது. இந்த சாலைகள் எதையும் சீரமைக்கவில்லை. கிராமப்புற சாலைகளை சரி செய்ய வேண்டும். சுற்றுலாத் தலமாக உள்ள குற்றாலத்துக்கு செல்லும் சாலை வசதி மோசமாக இருப்பதால் மக்கள் அவதிப்படுகின்றனர். எனவே சாலைகளை சீரமைக்க வேண்டும். தென்காசியில் சுற்றுச்சாலை அமைத்து கொடுப்பதாக திமுகவினர் வாக்குறுதி அளித்தனர். ஆனால் அதற்கு நடவடிகை எடுக்கவில்லை.

தென்காசி தனி மாவட்டமாக உருவாக்கப்பட்டும், ஆட்சியர் அலுவலகத்துக்கு புதிய கட்டிடத்தை ஏன் திறக்காமல் உள்ளீர்கள்?. எல்லா துறைகளும் இன்னும் வந்து சேரவில்லை. பல துறைகள் இன்னும் திருநெல்வேலி மாவட்டத்திலேயே செயல்படுகின்றன. இதனால் மக்கள் கஷ்டப்படுகின்றனர். ஒரு மாதத்துக்குள் ஆட்சியர் அலுவலகத்தை திறந்து, அனைத்து துறைகளையும் செயல்படுத்த வேண்டும். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகமும் வாடகை கட்டிடத்தில் செயல்படுகிறது. இது தவறான செயல். நமது இயக்கத்தைச் சேர்ந்த அனைவரும் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும்,” என்று அவர் பேசினார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *