Doctor Vikatan: அதிகரிக்கும் பனி: மண்டை பாரம், ஜலதோஷம், அடுக்குத் தும்மல்… உணவுகள் உதவுமா?

Spread the love

Doctor Vikatan: குளிர்காலத்தில் வெளியே தலைகாட்டினாலே மண்டை பாரமாகி விடுகிறது. அடுக்கடுக்காக தும்மல் வருகிறது. சளி பிடிக்கிறது.  குளிர்காலத்தில் உணவுப்பழக்கத்தில் ஏதேனும் மாற்றம் செய்ய வேண்டுமா… எப்படிப்பட்ட உணவுகளைச் சாப்பிடலாம்?

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த சித்த மருத்துவர் ‘மூலிகைமணி’ அபிராமி. 

மூலிகைமணி அபிராமி

திப்பிலியின் வேர்ப்பகுதிக்கு ‘மோடி’ என்று பெயர்.  இது நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும். உடல்வலி வந்தாலோ, சளி பிடித்தாலோ, உடனடியாக திப்பிலியின் வேர்ப்பகுதியைவைத்துச் செய்கிற ‘மோடி ரசம்’ உடனடி நிவாரணம் தரும். திப்பிலியின் வேர்ப்பகுதியை எடுத்து, சுத்தம் செய்து, இடித்துக்கொள்ளவும்.  இதை சிறிய கைப்பிடி அளவு எடுத்துக் கொள்ளவும்.

வழக்கமாக நாம் ரசம் வைக்கிற மாதிரியும் செய்யலாம். அதாவது, இந்தப் பொடியை ரசப்பொடி போல உபயோகித்தும் ரசம் வைக்கலாம் அல்லது திப்பிலியின் வேரை இடித்துப் பொடித்து, தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவைத்து வடிகட்டிக் கொள்ளவும்.  அத்துடன் ரசம் செய்கிற மாதிரி புளியைக் கரைத்து, உப்பு, தக்காளி, பூண்டு உள்ளிட்ட பிற பொருள்கள் சேர்த்துக் கரைத்துக்கொள்ளவும். இதைக் கொதிக்கவைத்து, தாளித்து இறக்க வேண்டியதுதான். இதுதான் மோடி ரசம். குளிர்காலத்துக்கேற்ற அற்புதமான மருந்து ரசம் என்றே இதைச் சொல்லலாம்.  குழைவான சாதத்தில் இந்த ரசத்தை விட்டுப் பிசைந்து சாப்பிட்டால் இதமாக இருக்கும். சளியும் பிடிக்காது.

நாட்டு மருந்துக் கடைகளில் செலவு குழம்புக்கான மருந்துகள் என்று கேட்டால் சில மூலிகைகளை ஒன்றாகச் சேர்த்துக் கொடுப்பார்கள். பிரசவமான பெண்களுக்கு இந்தக் குழம்பை வைத்துக் கொடுப்பார்கள். மருந்துக் குழம்பு என்றும் இதைச் சொல்வார்கள். அதிக வேலை செய்து, உடம்பெல்லாம் அசதியாகி, வாய்க்கு எதுவுமே சாப்பிடப் பிடிக்காத நிலையில் இதைச் செய்து சாப்பிடலாம்.  செலவு குழம்புக்கான பொருள்களை வாங்கி, மிளகு குழம்பு அல்லது புளிக் குழம்பு செய்கிற பக்குவத்தில் செய்து, சூடான சாதத்தில் நெய்விட்டுச் சாப்பிட்டாலும் நோய் எதிர்ப்பாற்றல் அதிகரிக்கும். சளி, இருமல் வராமல் இருக்கும். 

அசைவம் சாப்பிடுவோர் என்றால் வாரம் ஒருமுறை நண்டுக் குழம்பு, நாட்டுக்கோழி குழம்பு, நண்டு சூப், நாட்டுக்கோழி சூப் போன்றவற்றைச் செய்து சாப்பிடலாம்.

நாட்டு மருந்துக் கடைகளில் சித்தரத்தையும் அதிமதுரமும் கிடைக்கும். இந்த இரண்டும் பொடியாகவும் கிடைக்கும். இவற்றுடன் வால் மிளகு, ஏலக்காய் என எல்லாவற்றையும் தலா 50 கிராம் அளவுக்கு வாங்கிக் கொள்ளவும். எல்லாவற்றையும் வெறும் கடாயில் வறுத்து, தட்டிய பிறகு  மிக்சியில் நைசாக அரைத்துக்கொள்ளவும். இதைச் சலித்து, கண்ணாடி பாட்டிலில் நிரப்பி வைக்கவும்.  200 கிராம் அளவிலான இந்தப் பொடி, ஒரு குடும்பத்துக்கு ஒரு மாதத்துக்கு வரும். இது மருந்துப் பால் தயாரிப்பதற்கான பொடி. இதைக் குடித்தால் சளி, இருமல் எல்லாம் குணமாகும்.  ஒரு டம்ளர் பாலில், கால் டீஸ்பூன் அளவு இந்தப் பொடியைச் சேர்த்துக் கொதிக்க வைத்து, இரவில் தூங்குவதற்கு முன் வீட்டில் உள்ள எல்லோரும் குடிக்கலாம். இதேபோல குங்குமப்பூ பால், சுக்கு-மல்லிப் பால் என யாருக்கு, எது முடியுமோ அதைச் செய்து குடிக்கலாம். 

அசைவம் சாப்பிடுவோர் என்றால் வாரம் ஒருமுறை நண்டுக் குழம்பு, நாட்டுக்கோழி குழம்பு, நண்டு சூப், நாட்டுக்கோழி சூப் போன்றவற்றைச் செய்து சாப்பிடலாம். குளிர்காலத்தில் ஏசி அறையில் இருப்பது, காதுகளை மூடாமல் வெளியே போவது போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும். இரவே தலையில்  எண்ணெய் தடவி, காலையில் குளிப்பதைத் தவிர்த்து,  எண்ணெய் வைத்த உடனேயே தலையை அலசிவிட வேண்டும். உடலுக்குக் குளிர்ச்சியை ஏற்படுத்தும் பூசணிக்காய், வெள்ளரிக்காய், பீர்க்கங்காய், சுரைக்காய், சௌசௌ மாதிரியான நீர்க்காய்கறிகளையும் இந்த சீசனில் தவிர்க்க வேண்டும். கீரைகளில் பசலைக்கீரை, முளைக்கீரை போன்றவற்றையும் தர்பூசணி, கிர்ணி, பச்சை வாழைப்பழம் போன்றவற்றையும் தவிர்க்க வேண்டும். 

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.    

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *