Doctor Vikatan: நான் தினமும் இருமுறை பல் துலக்கும் வழக்கம் கொண்டவன். சாப்பிட்ட உடன் வாய் கொப்பளிக்கும் வழக்கமும் உண்டு. ஆனாலும், எனக்கு கடந்த சில மாதங்களாக வாய் துர்நாற்றப் பிரச்னை இருப்பதை உணர்கிறேன். தொடர்ச்சியான வாய் துர்நாற்றம் என்பது குடல் நோயின் அறிகுறியாக இருக்கலாம் என்று நண்பர் சொல்கிறார். அது எந்த அளவுக்கு உண்மை… நான் என்ன செய்ய வேண்டும்?
பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த குடலியல் அறுவை சிகிச்சை மருத்துவர் பினாக் தாஸ்குப்தா

வாய் துர்நாற்றம் ஏற்பட பல காரணங்கள் இருக்கலாம். அவற்றில் பெருங்குடல் சார்ந்த நோய்களும் (Colonic diseases) முக்கிய காரணமாக இருக்கலாம். வாய் துர்நாற்றப் பிரச்னையை மருத்துவ மொழியில் ‘ஹாலிட்டோசிஸ்’ (Halitosis) என்று குறிப்பிடுவோம்.
நாம் சாப்பிட்ட உணவானது, குடலில் போய் செரிமானமாக வேண்டும். அந்த செரிமான வேலையைப் பார்ப்பதற்கென்றே குடலில் ஏராளமான பாக்டீரியாக்கள் இருக்கும். அவற்றில் நல்ல பாக்டீரியாக்களும், கெட்ட பாக்டீரியாக்களும் சேர்ந்தே இருக்கும். ஏதேனும் காரணத்தால், நாம் சாப்பிட்ட உணவானது, செரிமானமாகாமல், குடலிலேயே தங்கிவிடக்கூடும். நாள்பட்ட மலச்சிக்கல் (Chronic constipation) போன்ற பிரச்னைகள் இருக்கும்போது, குடலில் பாக்டீரியாக்களின் வளர்ச்சி (Bacterial overgrowth) அதிகமாகலாம். அதிகப்படியான பாக்டீரியா வளர்ச்சியின் காரணமாக, அந்த உணவானது நொதிக்கப்படும். இந்த பாக்டீரியாக்களின் வளர்ச்சியால் உருவாகும் வாயு (Gas), உடலில் உறிஞ்சப்பட்டு வாய் துர்நாற்றத்தை ஏற்படுத்தக்கூடும்.

பொதுவாக, GERD (Gastroesophageal reflux disease) எனப்படும் நெஞ்செரிச்சல் பிரச்னை அல்லது மேல் இரைப்பை குடல் பகுதிகளில் ஏற்படும் மற்ற தொற்றுகளும்கூட வாய் துர்நாற்றத்திற்கு வழிவகுக்கும்.
சிறுகுடலிலோ அல்லது பெருங்குடலிலோ ஏற்படுகிற தொற்று, தடை, வீக்கம், கட்டி போன்ற காரணங்களால், உணவானது செரிமானமாகாமல், தேங்கலாம். அதனாலும் பாக்டீரியா வளர்ச்சி அதிகமாகலாம். அதனால் வாயு உற்பத்தி அதிகரிக்கும். அது வாய் வழியே வெளியேறும்போது, வாய் துர்நாற்றமாக உணரப்படுகிறது. இது எத்தனை நாள்களுக்கு நீடிக்கிறது, எவ்வளவு தீவிரமாக இருக்கிறது என்பதைப் பொறுத்து நீங்கள் மருத்துவ ஆலோசனையும் சிகிச்சையும் பெற வேண்டியது அவசியம்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.