Doctor Vikatan: சமீபத்தில் ஒரு பெண்ணின் வீடியோ வைரலானது. அதில் அந்தப் பெண் தன் குழந்தைகளைப் பார்த்துக்கொள்ள முடியாத மன அழுத்தத்துக்கு உள்ளானது பற்றிப் பேசியிருந்தார்.
தொடர்ந்து சில வருடங்களாக அந்த வேலையைச் செய்ததில் ஏற்பட்ட மன அழுத்தம் காரணமாக, வீட்டில் உள்ளவர்களை அடித்துவிட்டு வெளியேறியதாகவும், இப்போது மனநல சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் பேசியிருந்தார்.
பார்ப்பதற்கே பரிதாபமாக இருந்தது. குழந்தை பிறந்து இத்தனை வருடங்கள் கழித்து மன அழுத்தம் வர வாய்ப்பு உண்டா…. இவரைப் போன்றவர்களுக்கு என்னதான் தீர்வு?
பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த உளவியல் மருத்துவர் மிதுன் பிரசாத்

அந்த வீடியோவை நானும் பார்த்தேன். அதில் அந்தப் பெண், குழந்தைகளைப் பராமரிப்பது எவ்வளவு கடினம் என்பதைப் பற்றிப் பேசுகிறார். அவர் பேசியதை வைத்துப் பார்க்கும்போது அவர், பிரசவத்துக்குப் பிறகு பெண்களைப் பாதிக்கும் ‘போஸ்பார்ட்டம் டிப்ரெஷன்’ (Postpartum Depression) பிரச்னையால் பாதிக்கப்பட்டிருப்பார் என்றே தோன்றுகிறது.
போஸ்பார்ட்டம் டிப்ரெஷன் என்பது குழந்தை பிறந்து ஒரு வருடத்திற்குள் வரும் மன அழுத்தம். குழந்தை பிறந்து ஒரு வருடத்திற்குப் பிறகு ஏற்படும் மன அழுத்தத்தை ‘மேஜர் டிப்ரெஷன்’ (Major Depression) என்று அழைக்கிறோம்.
அந்தப் பெண்மணி பேசுவதிலிருந்து அவருக்கு மன அழுத்தம் இருப்பது தெரிகிறது, ஆனால், அதற்குத் தேவையான சமூக மற்றும் குடும்ப ஆதரவு அவருக்குக் கிடைக்கவில்லை என்பது புரிகிறது.
பொதுவாக நாம் யாரிடமாவது மன அழுத்தம் பற்றிப் பேசினால், அவர்கள் உடனே ‘தைரியமா இரு’, ‘மனசை அமைதியா வெச்சுக்கோ, ‘யோகா பண்ணு, தியானம் செய்’ என்று எளிதாகக் கூறிவிடுவார்கள்.

ஸ்ட்ரெஸ் எனப்படும் மன அழுத்தத்திற்கும் (Stress) டிப்ரெஷன் (Depression) எனப்படும் மனச்சோர்வுக்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன. ஸ்ட்ரெஸ் என்பது மனம் சம்பந்தப்பட்டது. டிப்ரெஷன் என்பது மூளை சம்பந்தப்பட்ட ஒரு பிரச்னை.
டிப்ரெஷன் என்பது மன அழுத்தத்தைவிடத் தீவிரமான மனநல பாதிப்பு. சம்பந்தப்பட்ட நபர் முயற்சி செய்தாலும், அதிலிருந்து வெளியே வர நினைத்தாலும் மூளை ஒத்துழைக்காது.
மூளையில் உள்ள சில நியூரோ கெமிக்கல்கள் (Neuro-chemicals) மற்றும் சர்க்யூட்கள் சரியாகச் சுரக்காவிட்டாலோ, சரியாக வேலை செய்யாவிட்டாலோ, எவ்வளவு ஸ்ட்ராங்கான நபராக இருந்தாலும், மனஉறுதி உள்ள நபர்களுக்கும் டிப்ரெஷன் வரலாம். அதைச் சரியாகப் புரிந்துகொண்டால்தான் டிப்ரெஷன் குறித்த மனத்தடை நீங்கும்.
உடல் ரீதியான தைராய்டு பிரச்னைக்கு எப்படி மருத்துவரை நாடுகிறோமோ, அதேபோல் மன அழுத்தத்திற்கு உள்ளாகும் ஆணோ, பெண்ணோ, மனநல மருத்துவரை அணுகுவது மிகவும் அவசியம்.

மனநலக் கோளாறுகளைப் பற்றிய விழிப்பு உணர்வு குறைவாக இருப்பதையும், அது குறித்த சமூகத் தயக்கம் (Stigma) அதிகமாக உள்ளதையுமே இந்த வீடியோ நமக்கு உணர்த்துகிறது. மனது சம்பந்தப்பட்ட எந்தப் பிரச்னையாக இருந்தாலும், அதை ‘ஸ்ட்ரெஸ்’ என்ற பெயரில் கடந்து போகிறோம்.
மனநலம் சம்பந்தப்பட்ட பிரச்னைகளில் பல வகைகள் உள்ளன. அவை நம் மன உறுதியையும் கட்டுப்பாட்டையும் மீறி பாதிப்பவை என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.
வீடியோவில் பேசியிருக்கும் பெண்ணின் மேஜர் டிப்ரெஷனை நிச்சயம் குணப்படுத்த முடியும். ஆரம்ப கட்டத்தில் முறையான கவுன்சலிங் மட்டுமே போதுமானது.
பாதிப்பு தீவிரமாகும் போது, கவுன்சலிங்குடன் மருத்துவ சிகிச்சையும் சேர்த்து அளிக்கப்படும்போது இதிலிருந்து முழுமையாக வெளிவர முடியும்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.